மதுரை- தினமலர் செய்தி எதிரொலியாக ஆசிரியர்கள், அலுவலர்களின் நிலுவை பி.எப்., தொகை ரூ.5 கோடியே 48 லட்சத்து 5 ஆயிரத்து 349 ஐ மாநில கணக்காயர் அலுவலகம் பரிந்துரைத்த வங்கியில் மாநகராட்சி செலுத்தியது. இதனால் ஆசிரியர்கள் அறிவித்திருந்த தொடர் போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
மாநகராட்சி ஆசிரியர்கள், அலுவலர்களிடம் 1990, ஏப்.,1 முதல் 2019, மார்ச் 31 வரை 29 ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்ட பி.எப்., தொகை ரூ.20 கோடியே 5 லட்சத்து 52 ஆயிரத்து 815. இதை மாநில கணக்காயர் அலுவலகம் பரிந்துரை செய்த வங்கிக் கணக்கில் மாநகராட்சி செலுத்தாமல் இழுத்தடித்தது.
ஆசிரியர் சங்கங்கள் நடத்திய போராட்டங்களால் முதற்கட்டமாக 2027ல் ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு ரூ.10 கோடியே 22 லட்சத்து 24 ஆயிரத்து 295 ஐ மாநில கணக்காயர் அலுவலர் பரிந்துரை செய்த வங்கிக் கணக்கில் மாநகராட்சி செலுத்தியது.
அதை தொடர்ந்து ரூ.9 கோடியே 83 லட்சத்து 28 ஆயிரத்து 520 நிலுவைத் தொகையை வழங்காமல் மீண்டும் மாநகராட்சி மவுனம் காத்து வந்தது. இதனால் பணப்பலனை அனுபவிக்க முடியாமல் தவிப்பதாக ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டின.
மேலும் நிலுவை பி.எப்., தொகை வழங்க கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து தினமலர் செய்தி வெளியிட்டது.
இதன் எதிரொலியாக 92 ஆசிரியர்களுக்கு ரூ.3 கோடியே 70 லட்சத்து 12 ஆயிரத்து 536ம், 35 அலுவலர்களுக்கு ரூ.1 கோடி 78 லட்சத்து 43 ஆயிரத்து 813ஐ மாநில கணக்காயர் அலுவலகம் பரிந்துரைத்த வங்கிகளில் சம்பந்தப்பட்ட ஆசிரியர், அலுவலர்களின் பெயரில் வரவு வைக்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பு நிதி காப்பாளர் சீனிவாசன் கூறுகையில், ''நிலுவை பி.எப்., தொகையை வழங்க நடவடிக்கை எடுத்த மாநகராட்சி கமிஷனர் பிரவீன்குமார், துணை கமிஷனர் சரவணன், கணக்கு பிரிவு அலுவலர் பாலசுப்பிரமணியன், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதனால் அறிவிக்கப்பட்ட தொடர் போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள நிலுவை பி.எப்., தொகையையும் விரைவில் வழங்க கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.