பரந்துாரில் புதிய விமான நிலையம் அமைய உள்ளதால், சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டு மனைகளின் சந்தை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கோவிந்தவாடி, ஏனாத்துார் உள்ளிட்ட 15 கிராமங்களில், நிலத்தின் வழிகாட்டி மதிப்பு விபரங்கள் பத்திரப் பதிவு துறை இணையதளத்தில் மறைக்கப்பட்டு உள்ளது.
பரந்துார் சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டுமனை விலை...
விமான நிலையம் அமைவதால் சந்தை மதிப்பு தாறுமாறு
காஞ்சிபுரம், செப். 19--
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பரந்துார் பகுதியில், 5,000 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.
இதற்கான பூர்வாங்க பணிகளை, 'டிட்கோ' எனப்படும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. நில எடுப்பு விவகாரங்களை, நில நிர்வாக ஆணையர் அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.
பரந்துார் சுற்றுவட்டார பகுதியில் விமான நிலையம் அமைவது உறுதியாகியுள்ள நிலையில், அதன் சுற்றுவட்டார கிராமங்களில், ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறக்கிறது. ஏற்கனவே, வாங்கி வைத்திருந்த வீட்டு மனைகளின் மதிப்பும், கணிசமாக கூடிக் கொண்டே செல்கிறது.
பரந்துார் கிராமத்தை சுற்றியுள்ள, மொளச்சூர், காரை, சந்தவேலுார், ஏனாத்துார், கரூர், காரை, ராஜகுளம், சுங்குவார்சத்திரம், பிள்ளைச்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பகுதிகளில், வீட்டு மனை விற்பனை அமோகமாக நடப்பதாக, ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், வீட்டு மனைகளின் விலையும், அரசு வழிகாட்டி மதிப்பை காட்டிலும், நான்கு மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது. நிலங்களின் சந்தை மதிப்பு, கணிக்க முடியாத அளவுக்கு மாறுபட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமல்லாமல், விமான நிலையம் அமையும் பகுதிக்கு அருகில் உள்ள திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம், மப்பேடு, பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் வியாபாரம் தீவிரமாகி உள்ளது.
அதேபோல, நஞ்சை நிலங்களை வீட்டு மனைகளை மாற்ற, பல்வேறு துறைகளிடம் தடையில்லா சான்று வாங்கவும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளதால், நிலங்களின் மதிப்பு கூடுதலாகவே இருக்கும்.
இந்நிலையில், விமான நிலையமும் அமைய இருப்பதால், விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் தரப்பில் கூறியதாவது:
விமான நிலையத்தை அடிப்படையாக வைத்து, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் கடந்தாண்டே வீட்டு மனை விற்பனை துவங்கிவிட்டன. தொழில்போட்டி காரணமாக, விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை- - பெங்களூரு நெடுஞ்சாலை, காஞ்சிபுரம்- - திருத்தணி நெடுஞ்சாலைகளில், ஏராளமான எண்ணிக்கையில் வீட்டு மனைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
விமான நிலையத்தின் முகப்பு பகுதி சுங்குவார்சத்திரம் பகுதியில் வரும் என பேச்சு உள்ளது. ஆனால், இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அப்பகுதியில் நிலத்தின் மதிப்பு கணிசமாக அதிகரிக்கும் என, பெரும்பாலானோர் காத்திருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
-------------------வழிகாட்டி மதிப்பு மறைப்பு
பரந்துார், ஏகனாபுரம், நெல்வாய், மகாதேவிமங்கலம் உள்ளிட்ட, 20 கிராமங்கள் உள்ள இடத்தில் புதிய விமான நிலையம் அமைய உள்ளது. இங்குள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், பத்திரப்பதிவு துறையின் tnreginet.gov.in இணையதளத்தில், இந்த கிராமங்களின் வழிகாட்டி மதிப்புகள் மறைக்கப்பட்டுள்ளன.
விமான நிலையம் அமையாத கோவிந்தவாடி, காரை, ஏனாத்துார், சென்னகுப்பம், சிவன்கூடல், சிறுவாக்கம், திம்மசமுத்திரம், பொடவூர், போந்துார் உள்ளிட்ட 15 கிராமங்களின் வீட்டு மனைகளின் வழிகாட்டி மதிப்பும், இணையதளத்தில் காண்பிக்கப்படவில்லை.