திருப்பூர்;''தமிழகத்தில் இரு மொழி கொள்கையுடன் ரஷ்யா, சீனா, பிரென்ச் உள்ளிட்ட பிற நாட்டு மொழிகளையும் கற்றுத்தர வேண்டும்'' என, ம.தி.மு.க., முன்னாள் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கூறினார்.
திருப்பூரில், அவர் நேற்று கூறியதாவது:
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையுடன் நெருங்கி பழகிய அடிப்படையில் அவரது பண்பு, குணங்களை நன்கறிவேன். 1956ல் மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில், 'அண்ணாதுரை மன்னிப்பு கேட்டார்' என குறிப்பிட்டு, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். இது தவறான தகவல்.
அண்ணாமலை, தனது கட்சியை சார்ந்தவர்களையே மதிப்பதில்லை. நடைபயணத்தில் கூட்டம் திரள்வதை பார்த்து, தனக்கு ஆதரவு பெருகியிருக்கிறது என நினைக்கிறார். கன்னியாகுமரி முதல், சென்னை வரை வைகோ தொடர் நடைபயணம் மேற்கொண்டார். மாபெரும் கூட்டம் திரண்டது. ஆனால், ம.தி.மு.க.,வின் அரசியல் வளர்ச்சிக்கு அந்த கூட்டம் உதவவில்லை.
எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல. ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில், அண்ணாமலை நிதானத்துடன், பொறுமையிழக்காமல் செயல்பட வேண்டும். ஆங்கிலம் என்பது, உலக மொழியாக மாறிவிட்டது. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு கால கட்டத்தில், 'ஹிந்தி மொழி வேண்டும்' என, காங்., - ஜனசங்கம் - பா.ஜ., - இடதுசாரிகள் என, அனைத்து கட்சிகளும் கூறின. அந்த காலகட்டத்தில் ஹிந்தியை எதிர்த்தவர், அண்ணாதுரை மட்டுமே. தமிழகத்தில் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தொழில் துவங்கியுள்ளனர்.
எனவே, தமிழக அரசு, இருமொழிக் கொள்கையுடன், அரசுப்பள்ளிகளில் கொரியா, ஜப்பான், சீனா, ரஷ்யா, பிரென்ச் மொழிகளை விருப்ப பாடமாக பயில தனி வகுப்புகளை நடத்த வேண்டும். இதன் வாயிலாக, அந்த மொழி கற்கும் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு எளிதாகும்.
லோக்சபாவில், 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்படுவதற்கு, முன்னாள் முதல்வர் ஜெ., தான் முக்கிய காரணம். ஆனால், அவரை தலைவராக ஏற்க முடியாது. தற்போதைய சூழலில், மக்கள் மத்தியில் பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டது; கலப்பு திருமணங்கள் அதிகளவில் நடக்கிறது. ஜாதி, மதம் பார்த்து பழகும் மனநிலை பெருமளவில் மாறிவிட்டது. எனவே, சனாதனம் குறித்து, தற்போதைய சூழலில் பேச வேண்டியதில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.