ஈரோடு: ஈரோடு காமராஜர் வீதியில் ஏற்படும் திடீர் பள்ளங்களால், அப்பகுதி
மக்கள் அவதிப்படுகின்றனர்.ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம்
காமராஜர் வீதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இதே
பகுதியில் முனிசிபல் காலனி வழியாக வரும் சாக்கடை, காமராஜர் வீதியை கடந்து
செல்கிறது. இதுவரை காமராஜர் வீதியில் உள்ள சாக்கடையை தூர் வார மாநகராட்சி
ஊழியர்கள் வருவதே இல்லை.பல ஆண்டாக சாக்கடை அடைத்ததால், கழிவு நீர் செல்ல
வழியின்றி, தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் பெருகிய கொசுக்களால்,
அப்பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.
மேலும், கொசுக்களால் நோய்
பாதிப்பு ஏற்படும் முன், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஈரோடு காமராஜர்
வீதியை, மாநகராட்சி ஊழியர்கள் புறக்கணித்து வருகின்றனர். இப்பகுதி
சாக்கடையை தூர் வார, இதுவரை மாநகராட்சி நிர்வாகமோ, ஊழியர்களோ முன்
வரவில்லை. சாக்கடைகளில் பெருச்சாலிகள் பெருகி உள்ளதால், அவை வீடுகளுக்குள்
புகுந்து பொருட்களை நாசம் செய்கிறது.இப்பகுதி மக்களே பணம் திரட்டி,
சாக்கடையை சுத்தம் செய்தோம். மேலும், சாலைகளில் திடீரென பள்ளங்கள் உருவாகி
உள்ளதால், இப்பகுதியில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.