சென்னை:கல்வி தனியார் மயமாவதைத் தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள், சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை நேற்று முற்றுகையிட முயன்றனர். இவர்களை, சாலையிலேயே தடுத்து நிறுத்தி, கைதுசெய்ய போலீசார் முயன்றபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாணவ, மாணவியரை போலீசார் கைது செய்தனர். தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசுடைமையாக்க வேண்டும்; அனைவருக்கும் இலவச, கட்டாயக்கல்வி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர், மாநிலத் தலைவர் கணேசன் தலைமையில், நேற்று காலை 11 மணிக்கு, சென்னை, கல்லூரி சாலையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர். மொத்தமே 50 முதல் 60 பேர் வரை தான் இருந்தனர்.திருவல்லிக்கேணி துணைக் கமிஷனர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், மாணவ, மாணவியரை, சாலையிலேயே தடுத்து நிறுத்தினர். "முன் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்த அனுமதியில்லை; கலைந்து செல்லுங்கள்' என, போலீசார் கூறினர். அதைக் கேட்காமல், சாலையிலேயே மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.அப்போது, கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.ஆர்ப்பாட்டக்காரர்களுடன், ஐந்து வயது சிறுவர்களும் அதிகளவில் வந்தனர். ஒன்றரை வயது குழந்தையையும் ஒரு மூதாட்டி தூக்கி வந்தார். இந்தக் குழந்தைகளின் கைகளில் கொடியைக் கொடுத்து கோஷம் போட வைத்தனர். இந்தச் சம்பவத்தால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.