மதுரை:மதுரை மாநகராட்சியில், ரூ.4 கோடியில், வார்டுகளில் புதிய பெயர் பலகை அமைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பெரும்பாலான பகுதிகளில், விரிவாக்கத்திற்கு முந்தைய மாநகராட்சியின் போர்டுகளே உள்ளன.மாநகராட்சியின் 72 வார்டுகள், 100 ஆக விரிவாக்கம் செய்யப்பட்டு, உள்ளாட்சி தேர்தல் நடந்தது. விரிவாக்கத்திற்கு முந்தைய வார்டுகளின் பெயர், சுற்றளவு, எண், ஆகியவை மாற்றப்பட்டது. ஆனாலும், பல பகுதிகளில், முந்தைய வார்டுகளின் எண்களை தாங்கிய, போர்டுகளே வைக்கப்பட்டிருந்தது.இதற்கிடையில், டில்லியை பின்பற்றி, "நவீன போர்டுகள், வார்டு முழுவதும் வைக்கப்போவதாக,' தெரிவித்தனர். மண்டலத்திற்கு ரூ.1 கோடி வீதம், நான்கு மண்டலங்களுக்கு ரூ.4 கோடி செலவில், போர்டுகள் அமைக்கப்பட்டன. பல இடங்களில், தெருவை விட, போர்டு பெரிதாக இருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்தது. பார்வைக்கு தென்படும் சில இடங்களில் மட்டுமே, நவீன போர்டுகள் வைக்கப்பட்டன. 60 சதவீதத்திற்கும் அதிகமான தெருக்களில், போர்டுகள் அமைக்கப்படவில்லை. அவற்றில், தவறான வார்டின் பெயர் கொண்ட பழைய போர்டுகளே இருப்பதால், மக்கள் குழம்பி வருகின்றனர். இன்றும் பலருக்கு, வார்டு பெயர், எண், மண்டலம் பற்றிய விபரம் தெரியவில்லை. குழப்பமான பழைய போர்டுகளே இதற்கு காரணம். ரூ.4 கோடியில் அமைக்கப்பட்டதாக கூறிய போர்டுகள் எங்கே போனது? பெரும்பான்மை பகுதிகளில் போர்டுகள் இல்லாத போது, இவ்வளவு தொகை, செலவானது எப்படி, போன்ற சந்தேகங்களுக்கான விடை மர்மமாக உள்ளது. இதுகுறித்து விஜிலென்ஸ் அமைப்பு விசாரணை நடத்தினால், முறைகேடுகள் வெளிவரலாம். இதே போல், நான்கு மண்டலங்களுக்கும், எண் வரிசையில் பெயர் வைத்த பிறகும், மாநகராட்சி குப்பை லாரிகளில், வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு என, முந்தைய திசைகளின் பெயரே எழுதப்பட்டுள்ளது. இதைக்கூட கவனிக்க, நேரமில்லாமல் அதிகாரிகள் "பிஸி'யாக உள்ளனர் போலும்.