திருக்கழுக்குன்றம்: ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தயங்குவதால், மாவட்டத்தில், குன்றுகளை ஆக்கிரமித்து, வழிபாட்டு தலங்களை அமைப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் குன்றுகள் அதிகம். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இவற்றில், அரிய வகை மூலிகைகளும், வரலாற்று சின்னங்களும் உள்ளன. கடந்த, 1971ம் ஆண்டில், அச்சிறுப்பாக்கம் குன்றை ஆக்கிரமித்து, சிலர் சிலுவைகளை நட்டனர். பின், 1996ல், ஒரு தேவாலயத்தை உருவாக்கினர். அடுத்த இரு ஆண்டுகளில், அப்போது பணியில் இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவரின் சகாயத்துடன், ஒட்டு மொத்த குன்றையும் ஆக்கிரமித்துவிட்டனர்.
நடவடிக்கை இல்லை:
அடுத்ததாக, செங்கல்பட்டை அடுத்துள்ள நத்தம், பழவேலி, புலிப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள குன்றுகள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவற்றில் சிலுவைகள் நடப்பட்டன. பின், தேவாலயங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், ஒட்டு மொத்தமாக குன்றுகளை ஆக்கிரமிக்கும் வகையில், இயந்திரங்களை கொண்டு, அவற்றை சமன் செய்யும் பணி நடந்து வருகிறது. இது குறித்து, கடந்த மாதம் 25ம் தேதி, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, வருவாய் துறை அதிகாரிகள் கொண்ட குழு, குறிப்பிட்ட ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்து, கோட்டாட்சியர் மூலம், மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பியது.
அடுத்து ஒரகடம்:
இது குறித்து கேட்டபோது, மாவட்ட ஆட்சியர் சித்ரசேனன் கூறுகையில், ""ஓரிரு நாட்களில், குன்றுகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். ஆனால், இதுவரை ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் அமைதியின் பின்னணி புரியவில்லை. இந்நிலையில், திருக்கழுக்குன்றம் அடுத்த ஒரகடம் கிராமத்தில் உள்ள குன்று ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. இக்குன்றின் மீது, பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ள வடமல்லீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில், தேவாலயம் கட்டி, பெரும் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும், தேவாலயத்திற்கு செல்ல வசதியாக, பாதைகளை உருவாக்க, வன வளங்களை அழித்து, பாறைகளை சரித்துள்ளனர். ஒட்டுமொத்த மலையும் ஆக்கிரமிக்க வசதியாக, குன்று முழுவதும் சிலுவைகளை வைத்துள்ளனர். இதுகுறித்து, திருப்போரூர் வட்டாட்சியர் மோகன் கூறுகையில், "ஆக்கிரமிப்புக்களை பார்வையிட்ட பின், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். அச்சிறுபாக்கம் குன்று ஆக்கிரமிக்கப்பட்டபோதே, சுற்றுச்சூழல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் குரல் கொடுத்தனர். ஆனால், அப்போது, வருவாய் துறையில் உயர் பதவியில் இருந்த ஒருவரின் ஆசீர்வாதத்தால், எதிர்த்தவர்களின் குரல் அமுக்கப்பட்டது. குன்று முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டது.
குன்றுகளுக்கு ஆபத்து:
அடுத்ததாக, செங்கல்பட்டு குன்றுகளும், தொடர்ந்து ஒரகடம் குன்றும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இப்போதும், வருவாய் துறையும், காவல்துறையும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்புக்கள் அகற்றுவது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால், ஆக்கிரமிப்புகளை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,'' என்றார். ஆக்கிரமிப்பாளர்களின் மிரட்டலுக்கு பயந்து, நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்டத்தில் உள்ள அனைத்து குன்றுகளும் ஆக்கிரமிப்பில் சிக்கி காணாமல் போகும் என்பதும், அப்போது, வரலாற்று சின்னங்களும் மண்ணோடு மண்ணாக புதைந்து போகும் என்பதே, வரலாற்று ஆர்வலர்களின் கவலையாக இருக்கிறது. எனவே, தமிழக முதல்வர் இப்பிரச்னையில் நேரடியாக தலையிட்டு, ஆக்கிரமிப்பாளர்களால் விழுங்கப்பட்டு வரும் குன்றுகளை மீட்க வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.