கிருஷ்ணகிரி: பாரூர் பெரிய ஏரியை சுற்றுலா தலமாக மாற்ற பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூர் பெரிய ஏரி உள்ளது. இதன் பரப்பு, 600 ஏக்கராகும்.
ஏரியின் மொத்த நீர்மட்ட அளவு, 15.6 அடியாகும். இந்த ஏரிக்கு கே.ஆர்.பி., அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் நெடுங்கல் அருகே உள்ள தடுப்பணையில் இருந்து பிரிக்கப்பட்டு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
கே.ஆர்.பி., மற்றும் கெலவரப்பள்ளி அணை கட்டும்போதே பாரூர் பெரிய ஏரிக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர், முதல் மற்றும், இரண்டாம் போக சாகுபடிக்கு திறந்துவிடவேண்டும் என்று உத்தரவு உள்ளது.
இதனால் வருடத்தில் குறைந்தது, எட்டுமாத காலம் இந்த ஏரியில் தண்ணீர் இருக்கும். இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு பாரூர், அரசம்பட்டி, புலியூர், பெண்டரஅள்ளி, கீழ்குப்பம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள, 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.ஆர்.பி., அணை தவிர்த்து குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு சுற்றுலா தலம் இல்லை. எனவே, பாரூர் பெரிய ஏரியை சீர் செய்து அதனை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பும் பொழுது கடல் போல் காட்சியளிக்கும். இதனை அப்பகுதி பொதுமக்கள் மட்டுமன்றி, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து வருவோரும் குடும்பத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
திருப்பத்தூர்-தர்மபுரி மாநில நெடுஞ்சாலை பாரூர் ஏரியின் ஓரம் செல்வதால் படகு சாவாரிக்கு ஏற்பாடு செய்தால், வெளி மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்வோர் பாரூர் ஏரியில் படகு சவாரி செய்ய வருவார்கள்.
மேலும், ஏரிக்கரையின் கீழ் பகுதியில் பொதுப்பணித்துகறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதனையும் சீர் செய்து அங்கு பூங்காக்கள் அமைத்தால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்கும்.
பாரூர் பெரிய ஏரியை சுற்றுலா தலமாக மாற்றினால் அரசு கூடுதல் வருவாய் கிடைக்கும். மேலும் பாரூரில் உள்ளவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.