கும்பகோணம்: பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் இரண்டு கோடி ரூபாயில் புதிய தங்கரதம் வடிவமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், 14ம் தேதி கனகதாரா தோத்திர பாராயண விழா நடக்கிறது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் சிறப்புடையதும், துர்க்கையம்மன் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் தலம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலாகும். இக்கோவிலில் உள்ள துர்க்கையம்மனுக்கு தங்கரதம் செய்யப்பட வேண்டும் என கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து தங்கரதம் வடிவமைக்க பக்தர்களிடம் ஏழு லட்சம் மதிப்பீட்டில் மர ரதம், அதன்மீது 1.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பத்து கிலோ எடையில் தங்க ரேக்கும் பதிக்கப்பட உள்ளது.
இதற்காக 12 அடி உயரம், எட்டு அடி அகலத்தில், நான்கு சக்கரம் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முழுவதும் தேக்கு மரங்களால் கலை நயங்களுடனும், சிற்ப சாஸ்திரத்தினுடனும் வடிவமைக்கப்பட்டு அதன் மீது தங்க ரேக் பதிக்கப்பட உள்ளது. தங்க ரதம் வடிவமைக்கும் பணி தீவிரமாக உள்ளதால் கனகதாரா தோத்திர பாராயண நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதாவது, ஏழைப் பெண் ஒருவரிடம் ஆதிசங்கரர் பிச்சை கேட்டார். அப்போது அப்பெண்ணின் வீட்டில் பிச்சையிட ஏதுமில்லை.
அதனால் தன்னிடம் இருந்த நெல்லிக்கனி ஒன்றை பிச்சையாக போட்டார். அந்த தாயின் அன்பையும், வறுமையையும் உணர்ந்த ஆதிசங்கரர், அப்பெண்ணின் வறுமை நீங்கி சகல ஐஸ்வர்யங்களையும் பெற வேண்டுமென அஷ்டலெட்சுமி தேவியர் மீது கனகதாரா தோத்திர பாராயணம் செய்தார். அந்த நேரத்தில் நெல்லிக்கனி தந்த ஏழைப் பெண்ணின் வீட்டில் மகாலெட்சுமி அருளால் பொன்மழை பொழிந்தது.
இதை உணர்த்தும் வகையில், தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பக்தரும் தங்க ரத திருப்பணிக்கு ஒரு கிராம் தங்கமாவது வழங்கினால் அவர்களுடைய வாழ்வு செழிக்கும், வறுமை அகலும் என்பதன் அடிப்படையில் செப்டம்பர் 14ம் தேதி கனகதாரா தோத்திர பாராயண விழா நடக்கிறது. அதன்படி அன்று காலை எட்டு மணிக்கு சங்கல்பம் செய்யப்பட்டு சிறப்பு ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.
இவ்விழாவில் 2,000 ரூபாய் செலுத்தும் பக்தர்களுக்கு கனகதாரா தோத்திர பாராயண சிறப்பு ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட துர்க்கையம் பிகை உருவம் பதித்த வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் பழையாறை வெங்கடேசன், கோவில் செயல் அலுவலர் சுரேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.