கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் மஞ்சள் பயிரின் பாதுகாப்பிற்கு ஆமணக்கு செடிகளை ஊடுபயிராக பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
கள்ளக்குறிச்சி பகுதி கிராமங்களில் அதிகளவில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்து வருகின்றனர். இவைகளை பாதுகாக்க நோய் தாக்குதலை முன்கூட்டியே அறிவிக்கும் தன்மை கொண்ட ஆமணக்கு செடிகளை நிலத்தை சுற்றிலும் ஊடு பயிராக வளர்த்து வருகின்றனர். 10 மாத பயிரான மஞ்சள் செடிகளை விதைத்த மூன்றாவது மாதம் முதல் ஆமணக்கு செடிகளை நிலத்தை சுற்றிலும் நடுகின்றனர்.
இதன் மூலம் மஞ்சள் பயிரைத்தாக்கும் படைப்புழுவின் தொற்று முதலிலேயே ஆமணக்கு செடிகளின் இலைகள் மூலம் விவசாயிகள் தெரிந்து கொள்கின்றனர். பூச்சி மருந்து தெளித்து இரு பயிர்களையும் விவசாயிகள் பாதுகாக்கின்றனர். 6 மாத பயிரான ஆமணக்கு செடிகள் மூலம் விளக்கெண்ணெய் தயாரிக்க உதவும் ஆமணக்கு கிடைக்கிறது.
ஊடுபயிராக ஒரு ஏக்கர் அளவில் நடப்படும் ஆமணக்கு செடிகள் மூலம் 200 கிலோ ஆமணக்கு கிடைக்கும். ஒரு கிலோ ஆமணக்கு 50 ரூபாய் விற்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் பலன் கிடைக்கிறது.
இதனால் கள்ளக்குறிச்சி பகுதி விவசாயிகள் மஞ்சள் பயிருடன் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.