| மதுபான விற்பனை பிரதிநிதிகள் கெஞ்சல் தயவு செய்து குடோனுக்கு அனுப்பாதீங்க Dinamalar
மதுபான விற்பனை பிரதிநிதிகள் கெஞ்சல் தயவு செய்து குடோனுக்கு அனுப்பாதீங்க
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 நவ
2013
23:46

மேட்டூர்: "இருப்பு சரக்கை, நவ.,12ம் தேதிக்குள் குடோனுக்கு அனுப்பி வைக்க டாஸ்மாக் உத்தரவிட்ட நிலையில், தங்கள் நிறுவன சரக்கை, குடோனுக்கு அனுப்ப வேண்டாம்' என, டாஸ்மாக் கடைகளில், விற்பனை பிரதிநிதிகள் கெஞ்சி வருகின்றனர்.
தமிழகத்தில், 6,838 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு, 80க்கும் மேற்பட்ட மதுபான நிறுவனங்களில் இருந்து சரக்கு சப்ளை செய்யப்படுகிறது. நவ.,2ம் தேதிமுதல் மதுபான நிறுவனங்களில் இருந்து டாஸ்மாக் குடோனுக்கு சரக்கு அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சரக்கு விலை அதிகரிக்க மது தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுப்பதாலும், வருவதாலும், டாஸ்மாக் கடைகளில், 10,000 கோடி ரூபாய்க்கு மேலான சரக்கு இருப்பு உள்ளதாலும், சரக்கு கொள்முதலை டாஸ்மாக் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கடைகளில், 90 நாளுக்கு மேல் விற்பனையாகாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ள மதுபானங்களை, நவ., 12ம் தேதிக்குள் குடோனுக்கு திருப்பி அனுப்பி வைக்க சூபர்வைஸர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. சேலம் மாவட்ட கடைகளில் இருப்பு சரக்குகளை குடோனுக்கு அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
டாஸ்மாக் கடையில் குறைந்த விலை சரக்குகள் உடனுக்குடன் விற்று தீர்ந்து விடுகிறது. மீடியம் மற்றும் உயர்ரக மதுபானங்களில், சில வகைகள் மட்டுமே, மூன்று மாதம் முதல், ஒரு ஆண்டு வரை, கூட இருப்பு உள்ளதாக தெரிகிறது. இந்த சரக்குகளை குடோனுக்கு திரும்ப அனுப்பும் பட்சத்தில், குடோனில் இருந்து மீண்டும் மதுபான ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதை ரிட்டர்ன் எடுத்து செல்வதற்காக வாகன செலவு, மீண்டும் குடோனுக்கு அனுப்பி வைப்பது சம்பந்தபட்ட செலவு அனைத்தும் மதுபான ஆலைகளே ஏற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், கூடுதல் செலவு மற்றும் நஷ்டம் ஏற்படும் என்பதால், சில மதுபான ஆலை தங்கள் விற்பனை பிரதிதிகளை டாஸ்மாக் கடைகளுக்கு முடுக்கி விட்டுள்ளன.
விற்பனை பிரதிநிதிகள், சில நாட்களாக மாநிலம் முழுவதும் கடை, கடையாக சென்று, 90 நாட்களுக்கு மேல் இருப்பு உள்ள தங்கள் நிறுவன மதுபானங்களை எப்படியாவது விற்று விடுங்கள். தயவு செய்து குடோனுக்கு திருப்பி அனுப்பாதீர்கள் என, கெஞ்சி வருகின்றனர். இது டாஸ்மாக் ஊழியர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X