| வாழப்பாடி சுற்றுப்புற பகுதியில் கடும் வறட்சி : பாக்கு மட்டை தட்டு விலை உயர்வு Dinamalar
வாழப்பாடி சுற்றுப்புற பகுதியில் கடும் வறட்சி : பாக்கு மட்டை தட்டு விலை உயர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 நவ
2013
01:26

வாழப்பாடி: வாழப்பாடி பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சியால், பாக்கு மட்டைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை பாசனம் பெரும் கிராமங்கள் மற்றும் வெள்ளாறு, வசிஷ்டநதி ஆற்றுப்படுகை கிராமங்களிலும், 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில், நீண்டகால பலன் தரும் பாக்கு மரங்களை, விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.
அதனால், வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள், மாநில அளவில், பாக்கு உற்பத்தியில், முக்கிய பங்கு வகிக்கின்றன. வாழப்பாடி பகுதியில் உற்பத்தி செய்யப்படும், "ஆப்பி' என குறிப்பிடப்படும் கொட்டைப்பாக்கு, தமிழகத்தில், கும்பகோணம், சிதம்பரம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை பகுதியிலுள்ள பிரபல பாக்கு கம்பெனிகளுக்கும், குஜராத், பீஹார், மத்தியபிரதேசம், உத்தரபிரதேஷம் உள்ளிட்ட வடமாநில பான்பராக், பான்மசாலா, குட்கா தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் ஆண்டு தோறும் ஏற்றுமதியாகிறது.
பாக்குமரத்தில் இருந்து உதிர்ந்து விழும் மட்டைகளை பதப்படுத்தி தயாரிக்கப்படும் உணவு தட்டுகள், டீ கோப்பைகள், டம்ளர்கள் மற்றும் பல்வேறு வடிவ கிண்ணங்கள், சிற்றுண்டி பிளேட்டுகள் ஆகிவற்றுக்கும், நாடு முழுவதும், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதனால், வாழப்பாடி பகுதியில் மட்டுமின்றி, சேலம், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, மதுரை உட்பட மாநிலத்தில் பல்வேறு பகுதியில், பாக்கு மட்டை தட்டு உற்பத்தி செய்யும் தொழில், அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
அதனால், பாக்கு தோப்புகளில் உதிர்ந்து விழும் பாக்கு மட்டையை சேகரித்தல், பதப்படுத்துதல், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், மிஷின்களை இயக்கி பாக்கு தட்டு தயாரித்தல் ஆகியவற்றால், நேரடியாகவும், மறைமுகமாகவும், 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வாழப்பாடி பகுதியில், இரு ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவி வருவதால், பாசன வசதியின்றி, ஏராளமான பாக்குமரங்கள் காய்ந்து கருகியது. எஞ்சிய மரங்களிலும், எதிர்பார்த்த அளவுக்கு, பாக்கு மகசூல் கிடைக்கவில்லை. பாக்கு மட்டைகளும், அளவில் சிறுத்து, தரம் குறைந்து உதிர்ந்து வருகின்றன.
அதனால், பாக்கு மட்டைகளுக்கு, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு, 100 முதல், 150 ரூபாய்க்கு விலை போன, 100 பாக்கு மட்டைகள், தற்போது தரத்துக்கேற்ப, ஒரு மட்டை மூன்று ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதனால், பாக்கு மட்டை தட்டுகளின் விலையும் இரட்டிப்பானது.
சில மாதங்களுக்கு முன்வரை, இரண்டு ரூபாய்க்கு விற்ற பாக்கு மட்டை தட்டுகள், அளவுக்கேற்ப தற்போது, மூன்று முதல் நான்கு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
""நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நல்ல மழை பெய்தால், 2014 ஜனவரி மாதத்துக்கு மேல் அதிகளவில் பாக்கு மட்டைகள் கிடைக்க வாய்ப்புள்ளது,'' என, படையாச்சூர் பாக்கு மட்டை வியாபாரி கர்ணன் தெரிவித்தார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X