விலையில்லா நலத்திட்ட பொருட்கள் வழங்குவதில் தொடரும் தாமதம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
விலையில்லா நலத்திட்ட பொருட்கள் வழங்குவதில் தொடரும் தாமதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 டிச
2013
22:54

கோவை : கோவை மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான நலத்திட்ட பொருட்கள் வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதனால், பள்ளி மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழக அரசின் அறிவிப்பின்படி, நான்கு செட் விலையில்லா வண்ண சீருடைகள், பாடபுத்தகங்கள், நோட்டுகள், விலையில்லா லேப்-டாப், உட்பட 14 வகையான நலத்திட்ட பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் படி, நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான விலையில்லா லேப்-டாப் வழங்குவதற்கு 925 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலணிகளுக்காக 8.47 கோடி ரூபாயும், புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி, வண்ணப் பென்சில்கள், கிரையான்கள், அட்லஸ் போன்றவற்றுக்கு 33.72 கோடி ரூபாயும், நோட்டு புத்தகங்களுக்கு 110 கோடி ரூபாயும், பாட நூலுக்காக 217 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012-13 ம் ஆண்டிற்கான நலத்திட்ட பொருட்கள் மிகுந்த தாமதத்துக்கு பின், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பள்ளி மாணவர்களுக்கு படிப்படியாக வினியோகிக்கப்பட்டது. இதில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 முடித்து சென்ற மாணவர்களுக்கும், குடும்ப சூழல் காரணமாக வேறு பள்ளிகளுக்கு மாறிய மாணவர்களும் நலத்திட்ட பொருட்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பல மாணவர்களுக்கு நடைமுறை சிக்கல்களால், இதுவரை கடந்த ஆண்டுக்கான நலத்திட்ட பொருட்கள் வினியோகிக்கப்படவில்லை.
நடப்பு கல்வியாண்டிற்காவது, பள்ளி துவங்கி ஒரு மாத காலத்தில் அனைத்து பொருட்களும் மாணவர்களுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தலைமை அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். ஆனால், அரையாண்டு தேர்வுகள் முடிந்து மூன்றாம் பருவம் துவங்க உள்ள நிலையில், இதுகுறித்த எவ்வித அறிவிப்பும் இல்லை என்பது மாணவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் தொடர்கிறது.
கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ""பள்ளிகள் எண்ணிக்கையும், வகுப்பு வாரியாக மாணவர்களின் எண்ணிக்கை அடங்கிய பட்டியல் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான சீருடை, புத்தகம், நோட்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள நலத்திட்ட பொருட்கள் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X