வீரத்தின் எடுத்துக்காட்டாக, வெற்றியின் சிகரமாக போற்றப்பட்ட இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல், சாம் மானெக்ஷா (94) மறைந்துவிட்டார். மிடுக்கான தோற்றமும், மேல்நோக்கி லேசாக முறுக்கிவிடப்பட்ட மீசையும் - ராணுவ அதிகாரி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற தோற்றத்தை கொண்டவர் மானெக்ஷா. 1914 ஏப்ரல் 3ல் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசில் பார்சி குடும்பத்தில் மானெக்ஷா பிறந்தார். அவரது முழுப்பெயர் மிக நீளமானது. சாம் ஹார்முஸ்ஜி பிரம்ஜி ஜாம்ஜெட்ஜி மானெக்ஷா என்பதுதான் அது அமிர்தசரசில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், நைனிடாலில் ஷெர்வூட் கல்லூரியில் பயின்றார். பின்னர் 1932ம் ஆண்டு இந்திய மிலிட்டரி அகடமியில் சேர்ந்தார். முடித்தவுடன் செகண்ட் லெப்டினன்ட் ஆக ராணுவத்தில் சேர்ந்தார். 1937ம் ஆண்டு சிலூ போடேயுடன் காதல் ஏற்பட்டது. 1939 ஏப்ரல் 22ல் இருவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு மகள்கள் ஷெர்ரி மற்றும் மாஜா தருவாலா பிறந்தனர்.
இரண்டாம் உலகப் போரின் போது, பர்மாவுக்குள் நுழைய முயன்ற ஜப்பான் படையினருக்கு எதிராக முக்கிய போர் நடந்து கொண்டிருந்தது. கேப்டனாக இருந்த மானெக்ஷா ஜப்பான் படையினர் முன்னேறாமல் தடுக்க படையினருடன் போரில் ஈடுபட்டார். திடீரென மறைவிலிருந்து வெளிப்பட்ட ஜப்பான் வீரர் அவரை வயிற்றில் சுட்டார். இதனால் போர்க்களத்திலேயே படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அப்போது மேஜர் ஜெனரல் கோவான், தான் அணிந்திருந்த, "மிலிட்டரி கிராஸை' மானெக்ஷாவுக்கு சூட்டி, "இறந்ந வீரருக்கு இந்த கவுரவத்தை அளிக்க முடியாது என்பதால், நேரம் கருதி இப்போதே வழங்குகிறேன்' என்றார்.
சுதந்திரத்தின் போது, காஷ்மீரில், புகுந்த பாகிஸ்தான் துருப்புகள் காஷ்மீரை அபகரிக்க திட்டமிட்ட போது, போர்க்களத்தில் இவரது நுணுக்கமான அணுகுமுறைகள், திட்டமிடல் மற்றும் நிர்வாகம் ஆகியன காஷ்மீரை காப்பாற்ற உதவின. கிழக்குப் பகுதி கமாண்டராக இருந்த போது, நாகலாந்தில், தீவிரவாதிகள் ஊடுருவலை எதிர்த்து போரிட்டார். இதற்காக 1968ம் ஆண்டில், அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. 1969 ஜூன் 7ம் தேதி, இந்தியாவின் எட்டாவது தலைமை தளபதியாக நியமனம் ஆனார். அந்த சமயத்தில் அந்த பொறுப்பு அவருக்கு மேலும் சவால் அளிப்பதாகவே இருந்தது. 1971ம் ஆண்டு கிழக்குப் பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) ஏற்பட்ட பிரச்னை இந்திய - பாகிஸ்தான் போராக மாறியது. கிழக்குப் பாகிஸ்தானில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கையில் பொறுப்புகளை ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்ததால், அவர்கள் இந்திய பிரதமர் இந்திராவின் உதவியை நாடினர். இந்த போரின் போது மானெக்ஷா மிகச்சிறப்பாக செயல்பட்டார். முன்பு எப்போதும் இல்லாத அளவில், வீரர்களுக்கு ஊக்கமும் தைரியத்தையும் அளித்தார். போர் வியூகங்களை சிறப்பாக வகுத்தார். போரின் முடிவில் வங்கதேசம் என்ற புதிய நாடு உருவானது. வீரர்கள் உட்பட 90 ஆயிரம் பேர்களை இந்திய ராணுவம் போர்க் கைதியாக்கியது. அவர்களை மீட்பதற்காக பாகிஸ்தான், இந்தியாவிடம் இறங்கி வந்தது. இவையெல்லாம் 14 நாட்களுக்குள் நடந்துவிட்டன. தேசத்தின் மானம் காத்த இந்த தன்னலமற்ற சேவைக்காக 1972ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
பாகிஸ்தானை அடிபணிய வைத்த முயற்சியில், முக்கிய பங்காற்றிய "ஹீரோ' மானெக்ஷாவுக்கு கவுரவம் தரும் வகையில், முதன்முறையாக பீல்டு மார்ஷல் பதவி 1973 ஜனவரி 1ம் தேதி வழங்கப்பட்டது. இதற்கு 15நாட்களுக்கு பின்னர் மானெக்ஷா ஓய்வு பெற்றார். ஏறத்தாழ 40 ஆண்டு பணி புரிந்தவர். பீல்டு மார்ஷல் கவுரவம் இவருக்குப் பின் கே.எம்.கரியப்பாவுக்கு வழங்கப்பட்டது. இந்த இருவரைத் தவிர வேறு யாருக்கும் இந்திய அரசு இந்த கவுரவத்தை வழங்கியது இல்லை.
பீல்டு மார்ஷல் பதவி, ராணுவ தலைமை தளபதி பதவியை விட பெரிதானது. எந்த அரசியல்வாதிக்கும், தலைவணங்காத இவருக்கு இப்பதவி அளித்தது மிகப் பொருத்தமாக இருந்தது. பீல்டு மார்ஷல் வாழ்நாள் முழுவதற்கும் வழங்கப்படும் கவுரவம் என்பதால் - ராணுவத்தில் இன்றும் அவருக்கு உயர்ந்த அந்தஸ்து தொடர்ந்தது. பார்சி இனத்தவரின் கலாசாரத்தை பாதுகாக்கும் யுனெஸ்கோவின் அமைப்பில், இறுதி வரை இருந்தார். ஓய்வு பெற்ற பின்னர் அவர் குன்னூரில் வசித்து வந்தார். அங்கேயே பார்சி முறைப்படி அவருக்கு இறுதி சடங்குகளும் நடைபெற்றன. தனது வாழ்க்கையை முழுமையாகவும், திருப்தியாகவும் வாழ்ந்து முடித்துவிட்ட அந்த உண்மையான வீரருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
நீலகிரியை நேசித்த கலகலப்பான மனிதர்: "பீல்டு மார்ஷல்' மானக்ஷா, கடந்த 1973ம் ஆண்டு முதல் குன்னூரில் வசித்து வருகிறார். அவரும், அவரது மனைவி ஷில்லுவும் நீலகிரியை நேசித்தனர். பீல்டு மார்ஷல் மானக்ஷா அனைத்து மக்களிடமும் இயல்பாகவும் கலகலப்பாகவும் பழகக் கூடியவர்; நகைச்சுவையுடன் பேசக் கூடியவர். குன்னூர் சிட்டிசன் பாரம், குன்னூர் கிளப் போன்ற அமைப்புகளில் கவுரவப் பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். குன்னூர் பெட்போர்டு பகுதியில் "ஏழைகளின் மருத்துவமனை' என்ற பெயரில் இவரது துணையுடன் மனைவி ஷில்லு ஒரு மருத்துவமனையை அமைத்து, ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவிகளைச் செய்தார். அவரது மகள் மாஜா கூறுகையில், ""தொலைதூரங்களில் வசித்து வரும் நாங்கள் குன்னூர் வரும் போது, ஷாப்பிங் செல்வோம்; எங்களைப் பார்க்கும் பொதுமக்கள், எனது தந்தை மானக்ஷா குறித்து பாசத்துடன் விசாரிப்பர்,'' என பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
வங்கதேச அதிகாரிகள் பெருமிதம்:"பீல்டு மார்ஷல் மானக்ஷாவால் வங்கதேச நாடு பெருமிதம் கொள்கிறது' என, அந்நாட்டின் ராணுவ அதிகாரி தெரிவித்தார். வங்கதேசம் என்ற நாடு உருவாக முக்கிய காரணமாக இருந்த பீல்டு மார்ஷல் மானக்ஷாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, அந்நாட்டு விமானப்படை விங் கமாண்டர் ஷமீம், ராணுவப் படை பிரிவின் மேஜர் அலீம், கப்பற்படை லெப்டினென்ட் கமாண்டர் சித்திக் ஆகிய முப்படை அதிகாரிகள் குன்னூர் வந்திருந்தனர். அவர்கள் மானக்ஷாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
விங் கமாண்டர் ஷமீம் கூறுகையில், ""1971ம் ஆண்டு மானக்ஷா தலைமையில் நடந்த இந்தியா-பாக்., போரில், இந்திய ராணுவம் பாக்., வீரர்களைத் தோற்கடித்தது. பீல்டு மார்ஷல் மானக்ஷாவால் வங்கதேச நாடு பெருமிதம் கொள்கிறது. அவர் தலைசிறந்த தலைவராக விளங்கினார்,'' என்றார் மானக்ஷாவின் இறுதி அஞ்சலியில் பூடான் ராணுவத் தளபதி மேஜர் கின்லே டோர்ஜியும் கலந்து கொண்டார்.
மன உறுதி மிக்கவர் மானக்ஷா: "உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும், மன உறுதியுடன் சிகிச்சைப் பெற்றார்' என மானக்ஷாவுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவ ஊழியர்கள் கூறினர் பீல்டு மார்ஷல் மானக்ஷா, 2006ம் ஆண்டு முதல் அடிக்கடி நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இவர் வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்த மருத்துவமனையில் உள்ள வசதிகள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் செயல்பாடுகளால் முழு திருப்தியடைந்த மானக்ஷா, அவர்களுக்குச் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார். கடந்த 2006ம் ஆண்டு டில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மானக்ஷா, "வெலிங்டன் ராணுவ மருத்துவமனையிலேயே சிகிச்சைப் பெற்றுக் கொள்கிறேன்' எனக் கூறி குன்னூருக்கே வந்துள்ளார். அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவ ஊழியர்கள் கூறுகையில், "அவரது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்குப் பரிசு பொருட்களைக் கொடுத்து உற்சாகப்படுத்தினார்; அவர் உடல் நிலை அதிக அளவில் பாதிக்கப்பட்ட போதும், சோர்ந்து போகாமல் மன உறுதியுடன் சிகிச்சைப் பெற்று வந்தார்' என்றனர்.
மத்திய அமைச்சர் கருத்து: "பீல்டு மார்ஷல் மானக்ஷாவின் இறப்பு, நாட்டுக்கு மிகப்பெரும் இழப்பு' என, மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பள்ளம் ராஜு கூறினார் குன்னூரில் நேற்று காலமான பீல்டு மார்ஷல் மானக்ஷாவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பள்ளம் ராஜு கூறுகையில், "வங்கதேசம் என்ற புதிய நாடு உருவாக மிக முக்கிய காரணமாக இருந்த மானக்ஷா, இந்திய ராணுவத்தை சிறப்பான முறையில் வழிநடத்தியுள்ளார். அவரது சிறப்பான ராணுவ உத்தியால் இந்திய ராணுவம் பல்வேறு போர்களில் வெற்றி பெற்றுள்ளது. அவரது இழப்பு இந்தியாவுக்கு மிகப்பெரும் இழப்பு' என்றார்.
மானக்ஷாவுக்கு முப்படையினர் இறுதியஞ்சலி: இந்திய ராணுவத்தின் மிக உயரிய பதவியை வகித்த பீல்டு மார்ஷல் மானக்ஷா, நேற்று அதிகாலை குன்னூரில் காலமானார்; முழு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் முப்படையினரும், ஆயிரக்கணக்கான மக்களும் நெகிழ்ச்சியுடன் பங்கேற்றனர் கடந்த 1971ம் ஆண்டு நடந்த இந்தியா-பாக்., போரின் போது, சாம் மானக்ஷா தலைமையில் பாகிஸ்தான் ராணுவத்தை எதிர் கொண்ட இந்திய ராணுவம், மகத்தான வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து சாம் மானக்ஷாவுக்கு, "பீல்டு மார்ஷல்' என்ற மிக உயரிய பதவி வழங்கப்பட்டது. கடந்த 1978ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற மானக்ஷா, குன்னூர் வண்டிச்சோலை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு, கடந்த 2006ம் ஆண்டு முதல் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப் பெற்று வந்த அவர், கடந்த சில நாளாக ராணுவ மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்தார். நுரையீரல் கோளாறு மற்றும் மார்பு சளியால் அவதிப்பட்டு வந்தார்; கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு, டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவினர் சிகிச்சையளித்து வந்தனர். நேற்று (27ம் தேதி) அதிகாலை 12.30 மணிக்கு பீல்டு மார்ஷல் மானக்ஷா இறந்தார். அவருக்கு வயது 94. நேற்று காலை 7.00 மணிக்கு மானக்ஷாவின் உடல் மருத்துவமனையில் இருந்து வண்டிச்சோலையில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி, மத சடங்குகளைச் செய்தனர். பின், காலை 11.00 மணிக்கு வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ சதுக்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. ராணுவ வீரர்கள் அவரது உடலுக்கு தேசியக் கொடியைப் போர்த்தினர். மானக்ஷாவின் மகள்கள் ஷெர்ரி, மாஜா ஆகியோர் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினர். பின், முப்படை ராணுவ அதிகாரிகள், வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இவரது உடலுக்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவையொட்டி நீலகிரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நேற்று அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. மதியம் 2.45 மணிக்கு முழு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ராணுவ இசைக்குழுவினருடன் மைதானத்தில் அணிவகுத்து நின்றனர்; இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், இந்திய ஜனாதிபதி சார்பில் தென் மண்டல கமாண்டிங் ஜெனரல், லெப்டி னன்ட் ஜெனரல் நோபல் தம்புராஜ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, இந்திய ராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் நாயுடு அஞ்சலி செலுத்தினார். பின், பிரதமர் சார்பில் மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பள்ளம் ராஜு, துணை ஜனாதிபதி சார்பில் லெப்டினென்ட் ஜெனரல் லோம்பா, தமிழக கவர்னர் சார்பில் நீலகிரி மாவட்டக் கலெக்டர் விஷ்ணு பாட்டீல், தமிழக முதல்வர் சார்பில் தமிழக கதர் வாரிய அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் மலர் வளையம் வைத்தனர். கப்பற்படை சார்பில் ரியர் அட்மிரல் கெய்க்வாட், விமானப்படை சார்பில் ஏர் வைஸ் மார்ஷல் ஜோலி, வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரி கமாண்டன்ட் லெப்டினென்ட் ஜெனரல் குப்தா, எம்.ஆர்.சி., கமாண்டன்ட் பிரிகேடியர் காஷ்யப் ஆகியோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. பின், இவரது உடல், ராணுவ வாகனத்தில் குன்னூர் வழியாக ஊட்டியில் உள்ள பார்சி இன மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவை ஒட்டி தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.
வாசகர் கருத்து |