முதல் பக்க செய்திகள் 

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கள்ளநோட்டு அபாயம்
ஆகஸ்ட் 24,2008,00:00  IST

Front page news and headlines today

இந்தியா முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களில், 28 சதவீதம் கள்ள நோட்டுக்கள் என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது புலனாய்வுத் துறை. மக்கள் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்களில், நான்கில் ஒன்று கள்ள நோட்டு.



புலனாய்வுக் குழு (ஐ.பி.,) திரட்டியுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்தியாவில், புழக்கத்தில் உள்ள பணத்தில் ரூ. 1.7 லட்சம் கோடி பணம், கள்ளநோட்டுக்கள். 2008, ஜூலை 18ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி, இந்தியாவில் மக்கள் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு ரூ. ஆறு லட்சத்து மூவாயிரம் கோடி. புலனாய்வுக் குழு வெளியிட்ட தகவலை ஒப்பிட்டால், புழக்கத்தில் உள்ள ஆறு லட்சத்து மூவாயிரம் கோடி ரூபாயில், 28 சதவீதம் கள்ள நோட்டுக்கள்.



ரிசர்வ் வங்கி கையிருப்பாக வைத்திருக்கும் வெளிநாட்டு கரன்சிகள், தங்கம் போன்றவற்றின் மதிப்புக்கு இணையாக, ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும் காலம் இப்போது கிடையாது. ஆனால், கள்ளநோட்டுக்களும் பெருமளவு சேர்வதால், ரூபாயின் மதிப்பு படுபாதாளத்துக்கு போவதுடன், பணவீக்கம் பெரிதும் அதிகரித்து, விலைவாசி கடுமையாக உயருமே தவிர குறையாது. அதேசமயம் கள்ள நோட்டு நடமாட்டத்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமே சிதைந்து போகும் அபாயம் காத்திருக்கிறது. கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்கு, வங்கி அதிகாரிகளே துணை போகும் அவலமும் இந்தியாவில் உள்ளது. சமீபத்தில் உ.பி.,யில் அரசு வங்கியான ஸ்டேட்பாங்க் மற்றும் தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.



ஸ்டேட் பாங்க் காசாளர் வீட்டில் நடத்திய சோதனையில், 7.21 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப் பட்டது. இதில், ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள நோட்டுக்கள், கள்ள ரூபாய் நோட்டுக்கள். புலனாய்வு குழு வெளியிட்ட தகவலை ரிசர்வ் வங்கி மறுத்த போதும், இந்த அளவு கள்ளநோட்டுகள் எப்படிப் புழங்குகின்றன என்பதற்கு சரியான ஆதாரம் மற்றும் புள்ளிவிவரம் இல்லை. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் மூத்த போலீஸ் அதிகாரிகளின் கூட்டம் டில்லியில் நடந்த போது, வங்கித் துறையே கள்ள நோட்டு புழக்கத்துக்கு காரணமாக இருப்பதை, உ.பி., மாநில அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார். இதை தடுப்பதற்குரிய வழிவகை இல்லாததும் சுட்டிக் காட்டப்பட்டது. கள்ள நோட்டுகள் பிடிபட்ட சம்பவங்களில் வங்கியின் சில அதிகாரிகளே உதவியதாகக் கூறப்படுவது போலீசாருக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது.



ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடும் ரூபாய் நோட்டுக்கள், இந்தியா முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 422 கருவூலங்கள் மூலம் வினியோகிக்கப் படுகின்றன. இந்த கருவூலங்களிலேயே கள்ளநோட்டுக்கள் ஊடுருவும் அபாயமும் உள்ளது. புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுக்கள், சாதாரணமாக ஒரு வங்கியின் காசாளரால் அடையாளம் காணமுடியாத அளவுக்கு நவீனத் தொழில் நுட்பத்துடன் துல்லியமாக அச்சிடப்பட்டு உள்ளது.



நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளால், வைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம்., இயந்திரங்களில், கள்ளநோட்டுக்கள் கலந்து உள்ளன. இதனால், அதைப் பயன்படுத்தி பணம் எடுப்போர், எடுக்கப்படும் ரூபாய் நோட்டு, தற்செயலாக கள்ள நோட்டாக இருப்பதை அறிந்தால், அவர்கள் மாட்டிக் கொள்வார்களே தவிர, அதற்கு ஈடாக நல்ல நோட்டு பெற முடியாது. ஆகவே, ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி பணபட்டுவாடா நிலையத்தில் கள்ள நோட்டு ஊடுருவும் அளவுக்கு மோசமான நிலை ஏற்பட்டதால், இன்று இப்பிரச்னையின் பூதாகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.



அதேநேரம் ரியல் எஸ்டேட்களில் பெருமளவு முதலீடு செய்யும் பெரும்பணக்காரர்கள், அதில் ஒரு பகுதியை, கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற பயன்படுத்துகின்றனர். இந்த கறுப்புப் பணத்தில் ஒரு பகுதி கள்ள நோட்டுக்களாக உள்ளன. ரியல் எஸ்டேட் துறையில் தான் அதிகளவில் கள்ள நோட்டுக்கள் புழக்கத்துக்கு கொண்டுவரப்படுகின்றன என்பதும் அதிர்ச்சி தரும் தகவல். கள்ள நோட்டுக்களுடன் சிக்குவோரிடமும், சந்தேகத்துக்கு இடமானோரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், இந்திய கரன்சி நோட்டுக்களை அச்சிடுவதற்கென்றே பாகிஸ்தானில், அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் கண்காணிப்பின் பிரத்யேக அச்சகம் அனைத்து உள்கட்டமைப்புகளுடன் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. அதேபோல, ஐரோப்பாவில் செயல்படும் பாகிஸ்தான் நிறுவனங்களும் இந்திய கரன்சியை அச்சிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பாகிஸ்தான் நிறுவனங்கள் வாங்கும் கரன்சி நோட்டு அச்சிட பயன்படுத்தும் காகிதம், அதன் தேவைக்கு மிக அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.



இந்தியாவைப் போலவே, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கள்ளநோட்டுக்கள் அச்சிடப்படுவதால், அவற்றை கண்டுபிடிப் பது முடியாத காரியமாக உள்ளது. கள்ள நோட்டுக்கள் புழக்கத்தை தடுப் பதற்கு, வங்கித்துறையில் உரிய கட்டுப் பாடுகளும், கறுப்புப் பண புழக்கத்தை தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகளும் எடுக்கப் பட வேண்டியது அவசியமாகி உள்ளது.



ரியல் எஸ்டேட் தொழிலிலும் கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு: நாடு முழுவதும் முக்கிய நகரங்களில், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டு மனை, நிலம் விலை கடுமையாக உயர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம் கள்ள நோட்டு புழக்கம். இவற்றில் முதலீடு செய்வோர், அதன் மதிப்பில், 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கறுப்புப் பணத்தையே முதலீடு செய்கின்றனர். இதனால், கணக்கில் காட்டப்படாத கறுப்புப் பணம், வெள்ளைப் பணமாக மாறிவிடுகிறது.



கறுப்புப் பணம், ரொக்கமாகவே கைமாறும். அப்படிப்பட்ட நிலையில், கறுப்புப் பணத்தில் கள்ள நோட்டுகளும் புழக்கத்துக்கு வருகின்றன. வங்கி காசாளரே கண்டுபிடிக்க முடியாத கள்ளநோட்டுக்களை ரியல் எஸ்டேட் துறையினர் கண்டுபிடிக்க முடியவே முடியாது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் பிடிபட்ட கள்ள நோட்டு புழக்கத்தில் ஈடுபட்டு இருக்கும் பெரிய நிறுவனங்கள், தாங்கள் அதிகளவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதை ஒப்புக் கொண்டுள்ளன.



கள்ள நோட்டுக்கள் எளிதில் கிடைப்பதாலும், கறுப்புப் பணத்தின் புழக்கத்தாலும் நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் துறை அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகள் பெருமளவு ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளனர். இதற்கு அவர்கள் ஏராளமான கள்ள நோட்டுக்களை பயன்படுத்தி உள்ளனர். கள்ள நோட்டுகள், இந்திய பொருளாதாரத்துக்குள் நுழைவதை தடுப்பதற்கு உள்ள ஓட்டைகளை அடைப்பது பெரிதும் சிரமம். சட்ட அமலாக்கத் துறையினர், நிதி பரிமாற்றங்களை வெளிப்படையாக்குவதன் மூலமே இதை தடுக்க முடியும். இதற்கு ரியல் எஸ்டேட் துறையை சீரமைப்பது அவசியம்.



அப்பாவிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து: டில்லியில் சமீபத்தில் ராகேஷ் சிங் என்பவர், வணிக வளாகத்துக்கு சென்றிருந்தார். தனக்கு பிடித்தமான நான்கு சட்டைகளை தேர்வு செய்து வாங்கினார். அவர் கொடுத்த பணத்தில், நான்கு 500 ரூபாய் நோட்டுக்கள், கள்ள நோட்டுக்களாக இருப்பதை கடையின் காசாளர் கண்டுபிடித்தார். உடனடியாக போலீசுக்கு தகவல் போனது. போலீசார் விசாரித்ததில், ஏ.டி.எம்., இயந்திரத்தில் அந்த பணத்தை ராகேஷ் சிங் எடுத்தது தெரியவந்தது. நல்ல வேளையாக அவர் சிறைக்கு அனுப்பப்படவில்லை. ஆனால், அவர் இழந்த இரண்டாயிரம் ரூபாய், போனது போனது தான்.



புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டு, உங்கள் கைகளுக்கு வந்துவிட்டால், அவை பயனற்று போவதுடன், சிறை தண்டனையையும் அனுபவிக்க நேரிடும். சட்டப்படி, கள்ள நோட்டு வைத்திருக்கும் ஒருவர், அது யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்பதை நிரூபிக்க வேண் டும். அதை நிரூபிக்காவிட்டால், கைது செய்யப்படுவர். கள்ள நோட்டு புழக்கத்தை தடுப்பதற்கு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது. ஆனால், ஒவ்வொருவருக்கும் இதை கற்றுக் கொடுப்பது அவ்வளவு எளிதானது அல்ல. வங்கி காசாளரே கண்டுபிடிக்க முடியாத கள்ள நோட்டுக்களை, சாதாரண பொதுமக்களால் அடையாளம் காண முடியாது. கள்ள நோட்டுக்களை அடையாளம் காணும் ஒருவர், அது குறித்து போலீசாருக்கு தெரிவித்தால், முதலில் அவரையே போலீசார் சந்தேகிக்கின்றனர்.



நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தாலும், தமிழகம், குஜராத், உ.பி., மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் தான் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த இந்திய ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளும், வங்கிக் கிளைகளும், அல்ட்ரா வயலட் விளக்குகளை நிறுவுவதை கட்டாயமாக்கி உள்ளது. ஆனால், ஒவ்வொரு ரூபாய் நோட்டையும், அல்ட்ரா வயலட் விளக்கில் பரிசோதிப்பது நடக்காத காரியம். வங்கிகளிலும், ஏ.டி.எம்.,களிலும், ஒவ்வொரு ரூபாய் நோட்டையும் அல்ட்ரா வயலட் விளக்கில் சோதித்து பார்த்து உறுதி செய்ய வேண்டுமானால், ஒரு வாடிக்கையாளருக்கும் மணிக் கணக்கில் நேரம் தேவைப்படும். இதனால், மாற்று வழி காண வேண்டிய அவசியத்தில் உள்ளது ரிசர்வ் வங்கி. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, "யுவர் கைடு டு மணி மேட்டர்ஸ்' என்ற விதிமுறைகளை, தீதீதீ.ணூஞடி.ணிணூஞ்.டிண என்ற இணையதளத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.



ஒரு கோடியை மாற்றினால் ரூ.40 லட்சம் கமிஷன்: இந்தியாவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவதற்கு இந்தியாவின் பணத்தையே பயன்படுத்தும் தந்திரத்தை ஐ.எஸ்.ஐ., கையாண்டு வருகிறது. இந்தியாவில் செயல்பட்டு வரும், ஹுஜி, சிமி போன்ற பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுக்கு, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு, ஆண்டுதோறும் 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி அளித்து வருவதாக, புலனாய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது. இந்த பணம் அனைத்தும் கள்ள நோட்டுக்களாகவே இந்தியாவுக்குள் திணிக்கப்படுகின்றன.



இதன் மூலம், இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைப்பது ஒரு புறம் இருக்க, பயங்கரவாதிகள் மூலம் ரத்த வெள்ளத்தையும் ஐ.எஸ்.ஐ., ஏற்படுத்துகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் மூலம் தயார் செய்யப்படும் கள்ளநோட்டுக்கள், விமான மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும் இந்தியாவுக்குள் கொண்டு வரப்படுகிறது. பெருமளவு கள்ளநோட்டுக்கள், துபாய், காத்மாண்டு, பாங்காக், கராச்சி, கோல்கட்டாவில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. சிறிய அளவிலான கள்ள நோட்டுக்கள், எல்லைப் பகுதிகள் வாயிலாக தரை மார்க்கமாக கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக, வங்கதேசத்தவர்களால், கண்காணிப்பு இல்லாத இந்திய எல்லைப்பகுதிகள் வழியாக கடத்தி வரப்படுகின்றன. இந்த கள்ள நோட்டுக்கள் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களிடம் சேர்ப்பிக்கப்படுகின்றன.



இவற்றை இந்திய ரூபாய் நோட்டுக்களாக பயங்கரவாதிகள் மாற்றுகின்றனர். இதற்காக 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அவர்கள் தள்ளுபடி தருகின்றனர். உதாரணமாக ஒரு கோடி ரூபாய் கள்ள நோட்டை இந்திய நோட்டாக மாற்றித் தந்தால், 30 லட்சம் ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் கமிஷன். அவ்வாறு மாற்றப்படும் இந்திய ரூபாய் நோட்டுக்களை பயங்கரவாத சதித் திட்டத்துக்கு பயன்படுத்துகின்றனர். பயங்கரவாத அமைப்பில் செயல்படுவோருக்கு சம்பளமாகவும், பயங்கரவாத அமைப்பை விரிவுபடுத்துவதற்கும் இது பயன்படுகிறது.



மகாராஷ்டிராவில் இவ்வாண்டில் மட்டும் ஆறு முறை, 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 13 பேர் வங்கதேசத்தவர்கள். கடந்த மார்ச் 11ம் தேதி, வங்கதேசத்தை சேர்ந்த இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து, 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களும், இரண்டு கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்தும், ஒரு கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகள் அனைத்தும், ஆயிரம் ரூபாய் மதிப்பிலானவை.



கராச்சியில் பதுங்கியுள்ள அப்டாப் பட்கி என்பவன், மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிமின் கூட்டாளி. இவனைத் தான் கள்ள நோட்டு புழக்கத்துக்கு, ஐ.எஸ்.ஐ., பிரதானமாக பயன்படுத்துகிறது. இவன் மூலம் தான் பெரும்பாலான இந்திய கள்ள ரூபாய் நோட்டுக்கள், இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், ஐ.எஸ்.ஐ.,க்கு ஏற்படும் செலவு, நோட்டுக் களை அச்சிடுவதற்கு ஏற்படும் செலவு மட்டுமே.



கள்ளநோட்டு கடத்த உதவும் அமைதி ரயில்: இந்தியா - பாகிஸ்தான் இடையே நட்புறவு ஏற்படுத்துவதற்காக துவக்கப்பட்டுள்ள, "அமைதி ரயில்' போக்குவரத்து தான், கள்ள நோட்டுக் கடத்தலுக்கு பெரிதும் வழி செய்வதாக அமைந்துவிட்டது. ராஜஸ்தான் மாநிலம், பர்மெரில் உள்ள முனாபாவிலிருந்து, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கோக்ராபருக்கு சென்று வரும் அமைதி ரயிலில், இந்திய கள்ள நோட்டுக்கள் கடத்தப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் முதல் ஓராண்டில் மட்டும், ஏழு முறை கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன. இவை அனைத்தும், ரூ.500, ரூ ஆயிரம் மதிப்பிலானவை. பிடிபடாமல் இந்தியாவுக்குள் ஊடுருவிய கள்ள நோட்டுக்கள் எவ்வளவோ?



கடந்த ஆண்டு ஜூன் மாதம், பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பிய பயணியிடம் 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம், தார் எக்ஸ்பிரஸ் ரயிலில், 19.54 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்களுடன் இரண்டு பயணிகள் பிடிபட்டனர். புலந்சரை சேர்ந்த இவர்கள், நான்கு பெரிய பைகளில் காலணிகளுக்கு அடியில் கள்ளநோட்டுக் களை மறைத்து எடுத்து வந்தனர். கடந்த மார்ச் 29ம் தேதி, முனாபாவில், 1.85 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்களுடன் வயதான தம்பதி கைது செய்யப்பட்டனர்.



நமது சிறப்பு நிருபர்

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்