முதல் பக்க செய்திகள் 

காணாமல் போன கட்டாய மழைநீர் சேகரிப்பு திட்டம்
மே 25,2009,00:00  IST

Front page news and headlines today

தமிழகத்தில் மழை வளத்துக்கு குறைவில்லை. ஆனால், பெய்யும் மழை நீரை சேகரிக்கத் தான் வழியில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன் நல்ல மழை இருந்தும், நிலையான சேகரிப்பு அமைப்புகள் இல்லாததால், பொது மக்களுக்குத் தேவையான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.இந்தச் சிக்கலை தீர்க்கும் விதமாக, 2001ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது தான் மழைநீர் சேகரிப்பு திட்டம். மூன்று வடிவத்தில் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தை தமிழக அரசு, முதலில் கட்டடத்தின் அமைப்பின்படி அமைக்க வலியுறுத்தியது. பின், மழைநீர் சேகரிப்பு திட்டம் இல்லாத கட்டடத்திற்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்தது. மேலும், புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால் மட்டுமே, "கம்ப்ளீசன்' சான்றிதழ் தரப்பட்டது. இதனால், அப்போது சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் எங்கும் பெரும்பான்மை கட்டடங்களில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.அரசு கட்டடங்கள், பள்ளிகள் மற்றும் இதர கட்டடங்களிலும் கட்டாய அடிப்படையில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த வகையில் சென்னையில் மட்டும் 1,344 அரசு கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் அமைக்கப்பட்டது. மேலும், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் வீடு தோறும் மழைநீர் சேகரிப்பு திட்டம் அமைக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்யப்பட்டதுடன், தேவைப்படுவோருக்கு மழைநீர் சேகரிப்பு திட்டம் அமைத்தும் கொடுக்கப்பட்டது. இதன் பலனாக, தமிழகம் எங்கும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது. அடுத்து வந்த ஆண்டுகளில் கடும் வெயில் ஏற்பட்ட போதும், மக்களுக்கான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படவில்லை. தொடர்ந்து இத்திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டப்பட்டதால், பொதுமக்களும் தங்கள் வீடுகளில் ஆர்வமாக மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கினர்.சென்னையில் மாநகராட்சியின் சார்பில், மழைக்காலங்களில் அதிகளவில் நீர் தேங்கும் முக்கிய இடங்களை தேர்வு செய்து, மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 242 தாழ்வான பகுதிகளிலும், சாலைகளில் அதிகளவில் நீர் தேங்கும் 945 பகுதிகளிலும், 1,698 தெருக்களிலும், 29 மேம்பாலங்களிலும் இந்த மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, 16 கோவில் குளங்களிலும் மழைநீர் சேகரிப்பு திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, சென்னையில் உள்ள மூன்று லட்சத்து 29 ஆயிரத்து 959 வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்தாலும், அறிவிக்கப்பட்ட போது இருந்த வேகம் தற்போது இல்லை என்பதே உண்மை.பொதுமக்களில் பலர் இந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பை தொடர்ந்து கண்காணித்து, அதில் ஏற்படும் பழுதுகளை நீக்குவதில்லை. புதிய கட்டடங்களிலும், பெயரளவிற்கு மட்டுமே மழைநீர் சேகரிக்கும் திட்டம் அமைக்கப்படுகிறது. கட்டாயம் அமைக்கப்பட வேண்டிய அடுக்கு மாடி கட்டடங்களில், கண் துடைப்புக்காக மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம், முழு அளவில் நிறைவேறாத நிலை உள்ளது. குறிப்பாக, புறநகர் பகுதிகளில் ஆதம்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களில் நிலத்தடி நீர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள மடிப்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி, நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படாத நிலையில், இங்கு மட்டும் குறிப்பிட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகள் போட்டாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே, சென்னை மாநகராட்சியும், புறநகர் பகுதிகளில் உள்ள நகராட்சி, ஊராட்சி அமைப்புகளும், சென்னை குடிநீர் வாரியமும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு அமைப்பு இல்லாத வீடுகளுக்கு முன்னர் கூறியது போல, மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று அறிவிக்க வேண்டும். குடிசை வீடாக இருந்தாலும் அதில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு வேண்டும் என்பதை கட்டாயப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், குடிநீர் என்பது கானல் நீராக மாறி விடும்.                                                                                - நமது சிறப்பு நிருபர் -

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்