பருப்பு, சர்க்கரை, உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் போன்றவற்றின் விலை குறித்து, மத்திய அரசு கவலை தெரிவித்து உள்ளது. அதனால், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி மற்றும் கோதுமை கூடுதலாக வழங்கப்படும் என, அறிவித்துள்ளது.
பால் உற்பத்தி விலையை அதிகரிக்கவில்லை எனில், வட மாநிலங்களில் பால் தட்டுப்பாடு ஏற்படும் என, மத்திய அமைச்சர் சரத் பவார் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. "சரத் பவாரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என, உ.பி., முதல்வர் மாயாவதியும் தெரிவித்தார். அதேபோல, பா.ஜ., மூத்த தலைவர்களும், நிதின் கட்காரி தலைமையில் பிரதமரை சந்தித்து முறையிட்டனர். இரண்டு வாரம் கூட முடியாத நிலையில், விலைவாசி குறித்து ஆராய மத்திய அமைச்சரவைக் கூட்டம், டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று மீண்டும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பருப்பு, சர்க்கரை, உருளைக் கிழங்கு, வெங்காயம் ஆகிய நான்கு உணவுப் பொருட்களின் விலை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகள் விவரம் வருமாறு: விலைவாசி உயர்வை குறைப்பதற்காக, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத கோட்டாவாக கூடுதலாக 10 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படும். தற்போது, தகுதியுடைய ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் 35 கிலோ அரிசி மற்றும் கோதுமைக்கு மேலாக இது வழங்கப்படும். இதற்காக மத்திய தொகுப்பில் இருந்து 10.64 லட்சம் டன் அரிசியும், 25.43 லட்சம் டன் கோதுமையும் வழங்கப்படும். இதை மாநில அரசுகள் மார்ச் மாத இறுதிக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கூடுதலாக வழங்கப்படும் 10 கிலோ அரிசி மற்றும் கோதுமை, கிலோவுக்கு ரூ.15.37 மற்றும் ரூ.10.80 என்ற விலையில் வழங்கப்படும்.
அந்த்யோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ், கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசியானது, கிலோ மூன்று ரூபாய் விலையிலும், கோதுமை இரண்டு ரூபாய் விலையிலும் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொது வினியோக முறையில் வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமையின் அளவை அதிகரித்ததோடு, சில்லரை சந்தையில் உணவு தானியங்கள் போதிய அளவில் கிடைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. "நபெட்' மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் சம்மேளனம், தங்களின் சில்லரை விற்பனை கடைகள் மூலம், 70 ஆயிரத்து 84 டன் கோதுமை மற்றும் 28 ஆயிரம் டன் அரிசி விற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
- நமது டில்லி நிருபர் -