கோவை : சுற்றறிக்கை, கடிதம் மற்றும் உத்தரவு ஆவணங்களை தமிழில் பிழையின்றி எழுத, தமிழக அரசுத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம், கோவையில் துவங்கியது.
மாநில அரசு அலுவலகங்களில் இருந்து வெளியிடப்படும் சுற்றறிக்கை, அறிவிப்புகள், அலுவல் சார் நடவடிக்கை தொடர்பான பல உத்தரவுகள், தமிழில் எழுத்துப் பிழைகளுடன் காணப்படுகின்றன. இவற்றில் சில, நேரடியாக விஷயத்தை வெளிப்படுத்துவதற்கு பதிலாக, சுற்றிவளைத்து குழப்புகின்றன. இதனால், அரசு அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள் மத்தியில் வீண் குழப்பம் ஏற்படுகிறது. எனவே சுற்றறிக்கை, உத்தரவு உள்ளிட்ட அரசு அலுவலக ஆவணங்களை தமிழில் எழுத்துப் பிழையின்றி தயாரிக்க, அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு, தமிழக தமிழ் வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, முதல் கட்ட பயிற்சி கோவையில் நடக்கிறது. நகரிலுள்ள அரசு மகளிர் பி.எட்., கல்லூரியில் நடந்த பயிற்சியில் பல்வேறு அரசு துறைகளின் அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
விழாவில், மாநகராட்சி துணைக்கமிஷனர் சாந்தா பேசியதாவது: அரசு அலுவலகங்களில் சாதாரண கடிதங்களை தமிழில் எழுதவே பலரும் சிரமப்படுகின்றனர். எழுத்துப் பிழையின்றி அரசு அலுவலர்கள் ஆவணம் தயாரிக்கும் திறனை பெற்றிருத்தல் அவசியம். கோப்பு, சுற்றறிக்கை தயாரிக்கும் போது அதிக கவனம் தேவை. அப்போது தான், அரசு அலுவலகங்கள் மீது மக்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். தமிழில் பலவீனமாக உள்ள அலுவலர்களை தேர்வு செய்து, ஆறு மாதத்துக்கு ஒரு முறை பயிற்சி அளிக்க வேண்டும்.இவ்வாறு, சாந்தா பேசினார்.
மகளிர் பி.எட்.,கல்லூரி முதல்வர் மேரி லில்லி புஷ்பம் பேசுகையில், ""அன்றாட தமிழ் மொழி பயன்பாட்டில், எழுத்துப்பிழைகளை அறவே தவிர்க்க வேண்டும்,'' என்றார். மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் தேவதாஸ் பேசுகையில், "" அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு கோவையை தொடர்ந்து மதுரையில் நடக்கிறது. ""நீலகிரி மாவட்டத்தில் பிப்., 11, 12 தேதிகளில் நடக்கும். உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி, பயிற்சி திட்டம் முதலில் கோவையில் துவங்கியுள்ளது,'' என்றார். பயிற்சி முகாமில், சேலம் மண்டல தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் ராஜேந்திரன், மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பசும்பொன், திருச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சிவசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
"அப்துல் கலாமை பின்பற்றுங்கள்': பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவில், தமிழ் வளர்ச்சித் துறை மாவட்ட உதவி இயக்குனர் தேவதாஸ் பேசியதாவது: தமிழில் ஒரு எழுத்து மாறினாலும், பொருள் மாறிவிடும்; கவனம் தேவை. அலுவலக வருகைப் பதிவேட்டில் பெயரை "இனிஷியலுடன்' ஆங்கிலத்தில் எழுதி, கையெழுத்தை தமிழில் இடவும். "தமிழர்கள், தமிழில் தான் கையெழுத்திட வேண்டும்' என, அரசே உத்தரவிடுவது பெருமை தரும் விஷயம் அல்ல. அரசாணை என்பதால், திடீரென தமிழில் கையெழுத்திடுவதால் பாதிப்பு வரப்போவதில்லை. ஜனாதிபதியாக பதவியேற்ற போது அப்துல் கலாம், தமிழில் தான் கையெழுத்திட்டார் என்பதை மறந்து விட வேண்டாம்,'' என்றார்.