மும்பைத் தாக்குதலில் ஒரு இந்தியர் தொடர்பு : சிதம்பரம் தகவல்
பிப்ரவரி 05,2010,00:00 IST
புதுடில்லி : ""மும்பைத் தாக்குதலில் இந்தியர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம்,'' என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: மும்பை பயங்கரவாத தாக்குதலில், இந்தியர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என, நம்பப்படுகிறது. இருந்தாலும், பாகிஸ்தானிடமிருந்து குரல் மாதிரிகளைப் பெற்றுப் பரிசோதித்தால்தான் அதை உறுதி செய்ய முடியும். மேலும், தாக்குதலை கையாண்ட அந்த நபரின் பெயர் அபு ஜிண்டலாக இருக்கலாம் என, முடிவுக்கு வந்துள்ளோம். இருந்தாலும், அது அந்த நபரின் உண்மையான பெயர் அல்ல. குரல் மாதிரிகளைப் பெற்று பரிசோதிக்காத வரை இந்த விஷயத்தில் தெளிவான முடிவுக்கு வர இயலாது.
மும்பைத் தாக்குதலை கையாண்ட அந்த நபரின் குரல் மாதிரிகளைத் தர பாகிஸ்தான் மறுக்கிறது. இருந்தாலும், உள்துறை அமைச்சராக இருக்கும் நான், இந்த விஷயத்தில் வதந்திகளைப் பரப்ப முடியாது. சம்பந்தப்பட்ட அந்த நபர், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஊடுருவி, நீண்ட காலம் இங்கு தங்கியிருந்து, இங்குள்ளவர்களிடம் பழகி அதன்பின் சதி வேலையை அரங்கேற்றி இருக்கலாம். இல்லையெனில், இங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்று, அங்கு பயங்கரவாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டு, மும்பை தாக்குதலுக்கு அவர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அபு ஜிண்டால் என நம்பப்படும் அந்த நபரின் உண்மையான பெயர், சையது சபீயுதீன் அன்சாரியாக இருக்கலாம். அவுரங்காபாத் ஆயுத வழக்கு மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல முயன்ற வழக்கு போன்றவற்றில் அந்த நபருக்கு தொடர்பு இருக்கலாம். இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் கூறினார்.