முதல் பக்க செய்திகள் 

ரூ.300 கோடி மோசடியில் வங்கி அதிகாரிகள் தொடர்பு?
ஏப்ரல் 21,2010,00:00  IST

Front page news and headlines today

கோவையில் 'ஆன்லைன் டிரேடிங்' நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சுருட்டியதில், தனியார் வங்கிகளும் சம்மந்தப்பட்டிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசடி நிறுவனத்துடன் தொடர்புடைய வங்கி அதிகாரி, தலைமறைவானார். தனியார் வங்கிகளின் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள குற்றப்பிரிவு போலீசார், முதலீட்டாளர்களை உஷார்படுத்தியுள்ளனர்.


சர்வதேச மதிப்பு குறையும் போது வெளிநாட்டு கரன்சிகளை வாங்கி, மதிப்பு உயரும் போது விற்று, முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டித்தருவதாக கூறும் 'ஆன்லைன் டிரேடிங்' நிறுவனங்கள், தமிழகத்தில் புற்றீசல் போல தோன்றியுள்ளன. இதுவும் ஒரு வகையான சூதாட்டம் என்பதை அறியாமலும், வர்த்தக எதிர்விளைவுகளை உணராமலும், பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து, பணத்தை இழந்து வருகின்றனர். இவ்வாறு, கடந்த ஓராண்டில் கோவை நகரில் துவக்கப்பட்ட 'யூரோ பே' 'கேவல்' 'கிரீன் லைப்' 'கே.எஸ்.,மென்கன்டைல்' உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொதுமக்களின் முதலீடுகளை சுருட்டிய பின் மூடுவிழா கண்டுவிட்டன. இதுதொடர்பாக, நிறுவனங்களின் அதிபர்கள் 10 பேரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, மேலும் நான்கு பேரை தேடுகின்றனர்.மூடுவிழா கண்ட நிறுவனங்களை தவிர, மேலும் எண்ணற்ற நிறுவனங்கள் நகரில் செயல்படுவதாக போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அவற்றின் மீதான புகார் வராததால், செய்வதறியாது திகைக்கின்றனர். இது போன்ற மோசடிகளில் நடுத்தர வர்க்கத்தினர் அதிக பணத்தை இழந்துள்ளனர்.


நிறுவன பதிவில் மோசடி: மோசடியில் ஈடுபடும் 'ஆன்லைன் டிரேடிங்' நிறுவனத்தின் அதிபர்கள், தமது நிறுவனத்தை எஸ்.எஸ்.ஐ.,(ஸ்மால் ஸ்கேல் இன்டஸ்ட்ரீஸ்) என்ற பெயரிலோ அல்லது 'சொசைட்டி' என்ற பெயரிலோ பதிவுச்சான்று பெற்று இணையதளங்களில் வெளியிட்டு முதலீட்டாளரை நம்பவைக்கின்றனர். பின்னர், பணத்தை முதலீடு செய்வோரிடம், நான்கு அல்லது ஐந்து பக்கம் கொண்ட ஒப்பந்த பத்திரங்களில் கையெழுத்து பெறுகின்றனர். அதில், நிறுவனத்துக்கு, கடனாக பணம் வழங்குவதாகவும், குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறிய லாபத்துடன் திரும்ப பெற்றுக்கொள்வதாகவும் கூறப்பட்டிருக்கும்.முதலீடு செய்வோர், அனைத்து வாசகங்களையும் நன்கு படித்து பார்த்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது கிடையாது; நேரடியாக கையெழுத்திட்டு விடுகின்றனர். ஆரம்ப நாட்களில் சிலருக்கு அந்நிறுவனத்தின் அதிபர், தனது பெயரிலான வங்கிக்கணக்குக்கு உரிய 'செக்'குகளை பின் தேதியிட்டு வழங்குவார். அது தனி நபர் வங்கி கணக்கு சம்மந்தப்பட்டது. இதன் மூலமாக, நிறுவனம் எந்த வகையிலும் ஆவண ரீதியான ஆதாரங்களை கொண்டிருக்காது. மோசடிக்குள்ளாகி பணத்தை இழக்கும் முதலீட்டாளர்கள், 'செக்' மோசடி வழக்கை மட்டுமே கோர்ட்டில் தொடர முடியும். வழக்கு தொடுப்பதற்கும், குறிப்பிட்ட தொகையை, மனுதாரர் 'டிபாசிட்'டாக கோர்ட்டில் செலுத்த வேண்டும். இவ்வளவு 'சிக்கல்கள்' இருப்பதை, முதலீட்டாளர்களில் பலரும் கவனத்தில் கொள்வதில்லை.


பாதுகாப்பற்ற முதலீடு: 'ஆன்லைன் டிரேடிங்' நிறுவனத்தில் முதலீடு செய்யும் முன், அந்நிறுவனம் சட்டவிதிகளின்படி பதிவு செய்யப்பட்டுள்ளதா? 'ரிசர்வ் வங்கி'யின் உத்தரவாதச்சான்று பெறப்பட்டதா? நிதி வர்த்தக கண்காணிப்புகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டதா? வங்கி கணக்கு நிறுவனத்தின் பெயரில் உள்ளதா? என்பது உள்ளிட்ட பல அம்சங்களையும் முதலீட்டாளர்கள் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு அறிந்திருந்தாலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன், அனைத்து வாசகங்களையும் வரி விடாமல் படித்து, சாதக, பாதக விளைவுகளை அறிந்து கொள்ளவேண்டும்.ஏனெனில், பதிவு செய்யப்படாத, ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறப்படாத நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்வது என்பது, கண்களை மூடிக்கொண்டு, ஆழக்கிணற்றை நோக்கி பயணிப்பதற்கு சமமானது. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் நிதி விவகாரங்களை மட்டுமே ரிசர்வ் வங்கி மற்றும் நிதி வர்த்தகம் தொடர்பான கண்காணிப்பு ஏஜென்சிகள் கண்காணிக்கின்றன. மற்ற நிறுவனங்கள், அவற்றின் பார்வைக்கும், ஆய்வுக்கும் வராதவை. எனவே, நிதி முதலீடுகளில் முதலீட்டாளர்கள் உஷாராக இருப்பது அவசியம்.


தனியார் வங்கிகள் உடந்தை: தனி நபரால் துவக்கப்பட்ட நிறுவனம், குறுகிய கால இடைவெளியில் கோடிக்கணக்கான ரூபாயை வங்கி மூலமாக பரிவர்த்தனை செய்யும் போது, வங்கிகள் கண்காணித்து, சம்மந்தப்பட்ட புலனாய்வு ஏஜென்சிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறை. இதை, தனியார் வங்கிகள் கண்காணிப்பதில்லை. இதனால் நிறுவனத்தின் அதிபர்கள், முதலீட்டாளர்களின் பணத்தை தங்களது வங்கி கணக்குக்கு மாற்றிய பின்னர், கூட்டாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 'பினாமி'களின் பெயருக்கும் மாற்றி விடுகினறனர்.மோசடி அம்பலமாகி, முதலீட்டாளர்கள் போலீசில் புகார் அளித்தாலும், சம்மபந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரிலோ அல்லது அதை நடத்திய நபர்களின் பெயரிலோ, வங்கி கணக்கில் பெரிய அளவிலான தொகை ஒன்றும் இருப்பதில்லை. இதனால், முதலீட்டாளரின் தொகை அப்படியே விழுங்கப் படுகிறது. பணத்தை முதலீடு செய்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே, இது போன்ற மோசடிகளை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்கின்றனர், போலீசார்.


கோவை மாநகர போலீஸ் மத்திய குற்றப்பிரிவு உதவிக்கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது: எவ்விதமான உழைப்புமின்றி குறுகிய காலத்தில் எளிதாக அதிக பணம் சம்பாதிக்க வேண்டும், என்ற எண்ணம் கொண்டோரால் தான், 'ஆன்லைன் டிரேடிங்' மோசடி அதிகரித்துள்ளது. எந்த ஒரு முதலீட்டு தொகைக்கும் சட்ட ரீதியான, நியாயமான லாபத்தையே எதிர்பார்க்க வேண்டும். அதைவிடுத்து, 40 சதவீதம், 50 சதவீதம் லாபம் பெற முயற்சித்தால், முதலுக்கே மோசம் வந்துவிடும்.'ஆன்லைன் டிரேடிங்' என்பதும் ஒரு வகை சூதாட்டமே. முதலீடு செய்வோர் பணத்தை இழக்கவும் தயாராக இருக்க வேண்டும். பணத்தை இழந்த பின் போலீசில் புகார் அளிக்க ஓடிவருவது, காலம் கடந்த செயல்; சட்ட ரீதியாக மோசடி நிதியை மீட்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஒரு வேளை முதலீட்டு தொகை கிடைக்காமல் போகவும் வாய்ப்பு உண்டு.இவ்வாறு, செல்வராஜ் தெரிவித்தார்.


வங்கி அதிகாரி ஓட்டம்!கோவை நகரில் 100 கோடி மோசடியில் ஈடுபட்ட 'கே.எஸ்., மெர்கன்டைல்' என்ற ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தின் பெண் அதிபர் சசிரேகா என்பவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன் தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரது கணவர் கல்கி, நாகபட்டினத்திலுள்ள தேசிய உடமையாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரையும் மோசடி வழக்கில் சேர்த்துள்ள போலீசார், கைது செய்ய தீவிரமாக தேடிவருகின்றனர்.


தனியார் வங்கிகளின் அதிகாரிகள் தொடர்பு? மோசடியில் ஈடுபட்ட 'ஆன் லைன் டிரேடிங்' நிறுவனங்களின் அதிபர்கள் பெயரிலான வங்கி கணக்குகள் மூலமாக 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது போன்ற பெரிய அளவிலான தொகைகள், குறுகிய கால இடைவெளியில் பரிவர்த்தனைக்கு உள்ளாகும் போது, சம்மந்தப்பட்ட கணக்குக்குரிய நபர்களின் விபரங்களை, நிதி பரிவர்த்தனை கண்காணிப்பு ஏஜென்சிகளுக்கு தெரியப்படுத்துவது வங்கிகளின் கடமை. ஆனால், சில தனியார் வங்கிகள் அது போன்ற உஷார் தகவலை, கண்காணிப்பு ஏஜென்சிகளுக்கு தெரியப்படுத்தாமல் மறைத்துள்ளன. இதனால், மோசடி நிறுவனங்களின் அதிபர்கள் தொடர்ந்து சுருட்டலில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனவே, மோசடி நிறுவனங்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், சம்மந்தப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்களிடம் விரைவில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.


- நமது நிருபர் -


நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 மத்திய அரசு மக்களுக்கு நல்ல திட்டம் தரவில்லை - பணம் பெருக்க ,சேமிக்க !!!!!இதனால்தான் மக்கள் குறுக்கு வழியில் செல்கிறார்கள் !!! இதனை கெட்டவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள் !!!!!!!!! மந்திரி சொத்து சேத்துவதில் உள்ள கவனத்தை நிறுத்திவிட்டு !!! மக்களுக்கு நல்லது செய்வதை , நல்ல திட்டம் வகுப்பதை யோசிக்கவேண்டும் !!!!! 
by vs திருமளைராஜ்,tiruppur,India    21-04-2010 13:37:50 IST
 கோவை மாநகர போலீஸ் மத்திய குற்றப்பிரிவு உதவிக்கமிஷனர் செல்வராஜ் கூறியது----நூறு சதம் சரி................. 
by k kannan,Trichy,India    21-04-2010 12:01:52 IST
 இதே போல எவ்வளவோ நடந்திடுச்சு. இருந்தாலும் இதற்கெல்லாம் காரணம் சின்ன சின்ன ஆசை. சிறகடிக்க ஆசை....அப்புறமென்ன வலையில மாட்டிகிட்டு அவஸ்தை படவேண்டியதுதான்.படட்டும் விடுங்கோ.... 
by p Ayyampillai,Salem,India    21-04-2010 11:25:55 IST
 THE MAIN CULPRINT IN THIS CASE IS THE MINISTRY OF FINANCE AND THEIR RELATED DEPARTMENTS IN THE CENTRAL GOVT.. FOR MIDDLE CLASS PEOPLE BY THEIR SALARY EARNING ONLY THEY DEPOSIT SOME MONEY IN THE BANKS BY CONTROLLING THEMSELVES AND SACRIFICING SO MANY THINGS THROUGHOUT THEIR LIFE TIME, BUT THE COMMERCIAL BANKS PAID VERY LITTLE INTEREST AS PER GOVERNMENT RULING AND THAT INCOME ITSELF ALSO THE BANKS ARE DEDUCTING SOME AMOUNT TOWARDS TDS. WHEN THERE ARE SO MANY PEOPLE CHEATING THE GOVERNMENT BY NOT PAYING INCOME TAX IN CRORES AND CRORES OF RUPEES THE GOVERNMENT AND THE INCOME TAX DEPARTMENT HAVE NO DARE TO COLLECT THE INCOME TAX FROM THEM, AT THE SAME THEY ARE VERY PROMPT IN COLLECTING THE TAX FROM MIDDLE CLASS PEOPLE. THEN WHERE THE MIDDLE CLASS PEOPLE WILL GO. THE GOVERNMENT FORCED THEM TO GO TO PRIVATE FINANCE PEOPLE FOR MORE INTEREST FINALLY THE FINANCE COMPANIES CHEATED THE DEPOSITORS AS USUAL. INSTEAD OF SITTING IN THE CENTRALISED AIR CONDITIONED ROOM AT NEW DELHI THE RULERS MUST THINK THE REAL PLIGHT OF MIDDLE CLASS PEOPLE. I DON'T WHETHER THEY HAVE TIME FOR LOOKING AFTER THE PLIGHT OF THE PEOPLE. 
by G SUNDARARAMAN,TRICHY,India    21-04-2010 10:43:57 IST
 இதில் முக்கிய குற்றவாளி மத்திய அரசாங்கமே. கையை கட்டி VAIYITRAI கட்டி சிறுக சேமிப்பு பணத்தை வங்கியில் முதலீடு செய்தால் சொற்ப வட்டி மட்டுமே கிட்டுகிறது. மேலும் அந்த வட்டிக்கு தற்பொழுது வருமான வரியும் உண்டு. இந்த நிலையில் வேறு வழியினை தேடுதல் மட்டுமே சிறந்த தேர்வாக உள்ளது. கோடி கோடியாய் வருமான வரியை வசூலிக்க திரணியற்ற மத்திய அரசாங்கமும் வருமான வரி துறையினரும் நடுத்தர மக்களின் மடியில் கை வைப்பதில் மிகவும் குறியாக உள்ளனர். UNDER THESE CIRUMSTANCES THERE IS NO OTHER ALTERNATE FOR THE GENERAL PUBLIC EXCEPT TO APPROACH PRIVATE FINANCIERS FOR MORE INCOME. 
by G SUNDARARAMAN,TRICHY,India    21-04-2010 10:21:22 IST
 சுலபமாக கண்காணிக்க கூடிய விஷயம்தானே ஏன் முடியாதா? அவனுங்க எங்கே யாரோட மற்ற வங்கி கணக்குக்கு மாற்றி உள்ளனர், அவர்கள் இது போன்ற நிறுவன அதிபர்களுக்கு என்ன உறவு முறை என்று இனியும்கூட கண்டறிய முடியுமே.  
by s nallaan,chennai,India    21-04-2010 10:00:28 IST
 உண்மைதான். குறுக்கு வழியில் எப்படியாவது பணத்தை சம்பாதித்து விட வேண்டும் என்று நினைத்தால், இப்படிதான் எதிலாவது கொண்டு போய் விடும். இப்போது கூட பழைய நகை தாருங்கள் புதிய நகை தருகிறோம். பழைய பாத்திரங்கள் குடுங்கள் புதிய பாத்திரங்கள் தருகிறோம் என்று நிறைய கூட்டம் ஏமாற்றி விட்டது. இன்னும் நிறைய பேர் ஏமாற தயாராகி கொண்டு இருக்கிறார்கள். இதெற்கெல்லாம் காரணம் பேராசைதான். கம்ப்ளைன்ட் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை மாற்றி, போலீஸ் பிரிவினரே கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றம் புரிவோரை பிடித்து நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். முன்ன எல்லாம் சி.ஐ.டி அப்படின்னு ஒரு பிரிவு எப்பவும் செயல் பட்டுகிட்டு இருக்கும். எங்கெல்லாம், திருட்டு பசங்க, கடத்தல் காரன் இருக்கான், குண்டு வைக்கிறவன் இருக்கான், ரவுடி இருக்கான், மொள்ளமாரி, கேப்மாரி இருக்கான் அப்படின்னு விலாவாரியா தகவல் கொடுத்துகிட்டு இருப்பாங்க. இப்பல்லாம் நம்பலே புகார் கொடுக்க போனா கூட நடவடிக்கை எடுக்க அலுப்பு பட்டுகிட்டு நமபலையே உள்ள புடிச்சி போட பாகிறாங்கப்பா. பயமா இருக்கு. 
by c சாமி ,bangkok,Thailand    21-04-2010 05:03:50 IST
 மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி. மன்னர் குடும்பம் மட்டும் விஞ்ஞாண முறையில் ஊழல் செய்து பணம் சம்பாரிக்கலாம். நாங்கள் கூடாதா? மன்னர் வசம் மக்கள் ஏமாறலாம் எங்களிடம் ஏமாற கூடாதா? பேராசையில், குறுக்கு வழியில் மக்கள் பணக்காரர்கள் ஆக எங்களிடம் பணம் கொட்டும்போது நாங்கள் ஏமாற்ற தான் செய்வோம். இப்போ தமிழகத்தில் எங்கும் லஞ்சம்,ஊழல்,கொலை,கொள்ளை,மோசடி,போலிகள்,கடத்தல்,கற்பழிப்பு,நடக்கும் காலம். தீயவர்களின் வசந்த காலம் இது. அப்படி தான் நடக்கும்.சட்டம் ஒழுங்கு சுத்தமாக செயல் இழந்து விட்டது. போலீஸ் துறை முழுக்க லஞ்சத்தில் புரண்டால் இப்படி தான் நடக்கும்.  
by GB ரிஸ்வான்,jeddah,SaudiArabia    21-04-2010 03:55:29 IST
 வங்கிகளே இப்படி தவறு செய்வது நாட்டின் பாதுகாப்பிற்க்கே அச்சுறுத்தல். இந்த பணம் எல்லாம் தீவிரவாததிற்கு போகலாம். இது போன்ற தில்லுமுல்லை ரிசர்வ் வங்கி, போலீஸ், அரசாங்கம் முளையிலே கிள்ளி எரிய வேண்டும். பணம் தான் குற்றவாளிகள் நாட்டுக்குள் ஊடுருவதற்கு முக்கிய காரணம். கிடைக்கும் பணத்துக்கு வஞ்சனை இல்லாமல் நிறைய பேர் இவர்களுக்கு உதவி செய்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது.  
by k கைப்புள்ள,nj,India    21-04-2010 02:44:32 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்