இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக கேதன் தேசாய் பதவிக்காலத்தில், 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.,)அங்கீகாரம் வழங்கி வருகிறது. மருத்துவக் கல்லூரியில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், மருத்துவமனை வசதிகள், அங்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை, பேராசிரியர்கள் எண்ணிக்கை ஆய்வு நடத்தப்பட்டு எம்.சி.ஐ., அங்கீகாரம் வழங்கப்படுகிறது. எம்.சி.ஐ., தலைவராக இருப்பவர் கேதன் தேசாய். இவர், கடந்த சில ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்து வருகிறார். தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கேதன் தேசாயை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நாட்டில் தற்போது 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 28 ஆயிரத்து 742 இடங்கள் உள்ளன. கேதன் தேசாய் எம்.சி.ஐ.,யின் தலைவராக இருந்த காலகட்டத்தில், 60க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 40க்கும் மேற்பட்டவை தனியார் மருத்துவக் கல்லூரிகள்.கேதன் தேசாய், புது மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்க ஒவ்வொரு கல்லூரிக்கும் 30 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. அவர் எம்.சி.ஐ., தலைவராக பதவி வகித்த காலத்தில், 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், இதன் மூலமாகவே கேதன் தேசாய் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சமாக பெற்றிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.
தனியார் கல்லூரிகளிடம், கேதன் தேசாய் தனக்கென சில எம்.பி.பி.எஸ்., இடங்களை கேட்டுப் பெற்றுள்ளார். அந்த இடங்களை ஆண்டுதோறும் விலை பேசி விற்று அதன் மூலமாகவும் பல கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார். மருத்துவக் கல்லூரிகள் முதல் நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு எம்.சி.ஐ., அனுமதி பெற வேண்டும். இதிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிப்படை வசதிகள் சரியில்லை என கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை அனுமதி மறுக்கப்பட்டது. பின், தமிழக அரசு மத்திய அரசிடம் முறையிட்டு அனுமதி பெறும் நிலை உள்ளது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் என்ன மாயம் செய்தோ(!) அனுமதி பெற்று விடுகின்றன. மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி, எம்.பி.பி.எஸ்., இடங்களை விற்றது என கேதன் தேசாய் 2,000 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
இந்த ஊழலில் பல தனியார் கல்லூரிகளும், மேலும் பல அதிகாரிகளும் விரைவில் சி.பி.ஐ., பிடியில் சிக்குவார்கள் என தெரிகிறது.கடந்த 2009ம் ஆண்டு ஜூலையில், லஞ்சப் புகாரில் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) உறுப்பினர் செயலர் நாராயண ராவ், சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் யாதவ் வீடு மற்றும் அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, யாதவை ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் பதவியிலிருந்து நீக்கியது.தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் பெருமளவில் லஞ்சப் பணம் புழங்குவதாக அப்போது புகார் எழுந்தது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல ஏ.ஐ.சி.டி.இ., மண்டல அலுவலகங்கள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாய், லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். பொறியியல், மருத்துவம் என இரு முக்கியமான தொழிற்படிப்புகளை கண்காணிக்கும் அமைப்புகள் ஊழல் புகாரில் சிக்கியிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாட்டில், பொறியியல், மருத்துவக் கல்வியின் தரம் குறித்து மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
அம்மாடியோவ்... மலைக்க வைக்கும் கேதன் தேசாய் ஊழல்1,800 கோடி ரூபாய் ரொக்கம், ஒன்றரை டன் தங்கம் பறிமுதல் : கேதன் தேசாய் வீடுகளில் இருந்து, ரூ.1,800 கோடி ரொக்கம் மற்றும் 1.5 டன் தங்க நகைளை சி.பி.ஐ., அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாக, யு.என்.ஐ., செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:பஞ்சாபில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுப்பதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக, இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, துவக்கத்தில் ஒத்துழைக்க மறுத்தார். பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்களுடன் தனக்கு நெருக்கம் இருப்பதாக கூறினார்.சி.பி.ஐ., அதிகாரிகளின் நெருக்கடி அதிகரித்ததை அடுத்து, பின்னர் ஒவ்வொரு விவரமாக தெரிவித்தார். சில முறை மாறுபட்ட தகவல்களை கொடுத்து, குழப்பம் ஏற்படுத்தினார். இவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், டில்லி மற்றும் ஆமதாபாத்தில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அங்கிருந்த ரூ.1,801 கோடி ரொக்கம் மற்றும் 1.5 டன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. போலியான ஆவணங்கள் மூலம், மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்கியது தொடர்பான ஆவணங்களும் தேசாயின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.அங்கீகாரம் வழங்குவதற்கான தேதி முடிவடைந்த பின்னரும், சில மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து விண்ணப்பத்தை அவர் பெற்றதும் தெரியவந்துள்ளது.
அங்கீகாரத்துக்காக கல்லூரிகளிடம் இருந்து தலா 25 முதல் 35 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளார். மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதற்கு முன், அந்த கல்லூரிகளை ஆய்வு செய்வதற்காக 20 கண்காணிப்பாளர்கள் தேசாயால் நியமிக்கப்பட்டனர். இவர்கள், தேசாயின் ஏஜன்ட்களாக செயல்பட்டுள்ளனர். அங்கீகாரம் பெறுவதற்கு எவ்வளவு தொகை கொடுக்கப்பட வேண்டும் என்பதை இவர்களே நிர்ணயித்துள்ளனர்.சமீபத்தில் தமிழகத்தில் மட்டும் மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு, இந்த கண்காணிப்பாளர்கள் அதிரடியாகச் சென்று ஆய்வு நடத்தினர். அவற்றில் இரண்டு கல்லூரிகள், அங்கீகாரத்துக்காக பணம் கொடுக்க சம்மதித்தன. ஆனால், ஒரு கல்லூரி மட்டும் பணம் கொடுக்க சம்மதிக்கவில்லை.
சமீபத்தில், தேசாய் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார். மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் பெறும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அந்த உத்தரவு. சம்பந்தபட்ட மருந்து நிறுவனங்கள், தேசாய்க்கு பணம் கொடுக்க மறுத்ததன் காரணமாகவே, அவர் இந்த உத்தரவை பிறப்பித்தாக சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்திய மருத்துவக் கவுன்சிலின் துணைத் தலைவர் கேசவன் குட்டி நாயர் உள்ளிட்ட அதிகாரிகளின் நடவடிக்கைளையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.டில்லியில் உள்ள தனது அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் மசாஜ் ஹெல்த் சென்டர் ஒன்றை தேசாய் நடத்தி வந்ததாகவும், அவர் கைது செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் அந்த ஹெல்த் சென்டர் மூடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-