வேலூர்: தமிழக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில், மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேரையும் சித்தூர் கோர்ட் விடுவித்தது.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன், 2003 மே மாதம் 20ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். வழக்கில், மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன், எஸ்ஸார் கோபி, சிவா, கார்த்தி, ஈஸ்வரன், மணி, பாலகுரு, பாண்டி, சீனு, ராஜா, முபாரக், இப்ராஹிம் சுல்தான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நீதிபதி துர்கா பிரசாத் : மதுரை கோர்ட்டில் நடந்த வழக்கை, வேறு மாநிலத்தில் விசாரிக்கக் கோரி, முக்கிய சாட்சியான அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முத்துராமலிங்கம், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்ற சுப்ரீம் கோர்ட், வழக்கை ஆந்திர மாநிலம் சித்தூர் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரிக்க உத்தரவிட்டது.சித்தூர் கோர்ட்டில் நீதிபதி துர்கா பிரசாத் முன்னிலையில் வழக்கு விசாரணை துவங்கியது. அழகிரி உள்ளிட்ட 13 பேரும் விசாரிக்கப்பட்டனர். 82 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது.
தங்களுக்கு எதுவும் தெரியாது: முக்கிய சாட்சிகளான தா.கிருட்டிணனின் தம்பி ராமையா, அவரது மனைவி பத்மாவதி, கார் டிரைவர் மதியரசன், கிருட்டிணனின் தம்பி மகன் நெடுஞ்செழியன், வீரபாண்டி, ஆதிகேசவன், துரைராஜ் ஆகியோர் "கொலை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது. கொலையாளிகளையும் தெரியாது. போலீசார் எழுதி கொடுத்ததில் கையெழுத்து போட்டோம்' என்று, சாட்சியம் அளித்தனர்.தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அழகிரி உள்ளிட்ட 13 பேரும் நேற்று காலை 10.30 மணிக்கு சித்தூர் கோர்ட்டில் ஆஜராகினர்.
"மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும்' என்று நீதிபதி தெரிவித்ததை அடுத்து மாலையில் ஆஜராகினர். "குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள், 13 பேரையும் விடுதலை செய்கிறேன்' என, நீதிபதி துர்கா பிரசாத் தீர்ப்பளித்தார். நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர்.
"நேர்மைக்கு கிடைத்த வெற்றி' : நீதிமன்ற தீர்ப்பு பற்றி அழகிரி கருத்து : "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, எங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டது' என்று, மு.க. அழகிரி கூறினார். முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில், மு.க.அழகிரி விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, சித்தூர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்த மு.க. அழகிரி ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அழகிரி உள்ளிட்ட 13 பேருக்கும், தி.மு.க.,வினர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தீர்ப்பு குறித்து அழகிரி கூறியதாவது:முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலையின் போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா, "எங்களை பழிவாங்க வேண்டும்' என்பதற்காக, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பொய் வழக்கு போட்டார்.இந்த வழக்கு எங்கள் மீது போட்டார் என்பதை விட, தி.மு.க., மீது போட்டார் என்றே நான் நினைக்கிறேன். தற்போது, நாங்கள் நிரபராதி என விடுதலை கிடைத்துள்ளது. எங்களின் நேர்மைக்கு கிடைந்த நியாயமான வெற்றி.இவ்வாறு அழகிரி கூறினார்.அழகிரி சார்பில், ஆஜரான வக்கீல் சந்திரசேகரன் கூறும் போது, "இது பொய் வழக்கு. குற்றம் நிரூபிக்க சாட்சிகள் இல்லை. அதனால் 13 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்' என்றார்.
அரசு தரப்பில், ஆஜரான வக்கீல் ராஜேந்திர ரெட்டி கூறுகையில், "வழக்கின் தீர்ப்பு குறித்த நகலை பார்த்த பிறகே மேல் முறையீடு செய்வது பற்றி முடிவு செய்யப்படும்' என்றார்.
வாசகர் கருத்து |