முதல் பக்க செய்திகள் 

ஜெய்ப்பூரில் 'ஹூஜி' பயங்கரவாத இயக்கம் குண்டு வைத்தது அம்பலம்
மே 15,2008,00:00  IST

Front page news and headlines today

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் குண்டு வைத்தது, வங்கதேசத்தில் இருந்து செயல்படும் ஹர்கத் - உல் - ஜிகாதி இஸ்லாமி (ஹூஜி) என்ற பயங்கரவாத அமைப்பு என தெரியவந்துள்ளது.குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, சைக்கிள் ரிக்ஷா தொழிலாளி உட்பட எட்டு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில், சைக்கிள்களில் குண்டு வைக்க பணம் கொடுத்த மர்ம பெண்ணையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், நேற்றுமுன்தினம் எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் பலியானதோடு, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அமைதியான நகரம் என அழைக்கப்படும் ஜெய்ப்பூரில் நடந்த இந்த குண்டு வெடிப்பால், மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதிலும் தீவிரமாக உள்ளன.தொடர் குண்டு வெடிப்பில், தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் எட்டு பேரை, போலீசார் தங்களின் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணை நடத்தும் எட்டு பேரில், ஒருவர் குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்; மற்றொருவர் ரிக்ஷா தொழிலாளி. அனைத்து குண்டு வெடிப்புகளும் "டைமர்'கள் மற்றும் சைக்கிள்களின் உதவியுடன் நடத்தப்பட்டுள்ளதால், வங்கதேசத்தை சேர்ந்த ஹர்கத் - உல் -ஜிகாதி இஸ்லாமி (ஹூஜி) என்ற பயங்கரவாத அமைப்பே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், ஜெய்ப்பூர் நகரிலேயே மறைமுகமாக செயல்பட்டு, இந்த கொடூர தாக்குதலை, சரியான தருணம் பார்த்து நடத்தியிருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."குண்டு வெடிப்பு நடந்த இடங்களில் போதுமான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றை தொழில் நுட்ப நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், வெடிக்காத குண்டு ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டு, செயல் இழக்கச் செய்யப்பட்டது. பெரும்பாலான குண்டுகள் கார், சைக்கிள் ரிக்ஷாக்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் சைக்கிள்களில் வைத்து வெடிக்கச் செய்யப்பட்டுள்ளன' என்றும் ஜெய்ப்பூர் போலீஸ் கண்காணிப்பாளர் ராகவேந்திர சுகசா கூறினார். அதேநேரத்தில், ஜெய்ப்பூரில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த, ரிக்ஷா தொழிலாளி ஒருவரிடம் பேரம் பேசிய பெண் பற்றிய புதிய தகவல்களும் வெளியாகியுள்ளன.குண்டுகளை வைக்க இந்தப் பெண் ஒரு லட்சம் ரூபாய் வரை தருவதாக உறுதி அளித்ததாகவும், விசாரணையில் தெரியவந்துள்ளது. ""குண்டு வைக்க பணம் தருவதாக ரிக்ஷா தொழிலாளி விஜய் என்பவரிடம் மீனா என்ற பெண் பேரம் பேசியுள்ளார். அந்தப் பெண்ணை கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மும்பையைச் சேர்ந்தவரான விஜய்யும், குண்டு வெடிப்பில் காயம் அடைந்துள்ளார். அந்தப் பெண் பற்றிய மேலும் விவரங்களை அறியவும், அவரை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்' என்றும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.மேலும், இந்தத் தொடர் குண்டு வெடிப்புகளுக்கு சைக்கிள்களே பயன்படுத்தப் பட்டுள்ளதால், ஒரே நபருக்கு ஒன்பது சைக்கிள்களை விற்ற சைக்கிள் கடைக்காரரும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, அவரிடமும் விசாரணை நடக்கிறது. அவர் மூலம் சைக்கிள்களை வாங்கிய நபர் மற்றும் குண்டு வெடிப்பு நடத்திய பயங்கரவாதியின் படத்தை வரைந்து வெளியிடவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஹூஜி அமைப்பு செய்த சதி வேலைகள் என்ன?: ஹர்கத் - உல் - ஜிகாதி இஸ்லாமி (ஹூஜி) என அழைக்கப்படும் பயங்கரவாத அமைப்பு 1992ம் ஆண்டில் உருவானது. இந்த அமைப்பினர் 1996ம் ஆண்டு ஜூன் மாதம் வங்க தேசத்தில் தங்களின் சதி வேலையை அரங்கேற்றினர். அதன் பின்னரே இந்த அமைப்பு பற்றி வெளியுலகுக்கு தெரியவந்தது. இந்த அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல் -குவைதாவுடனும் தொடர்பு உள்ளது. இந்தியாவில் 2002ம் ஆண்டில்தான் இந்த அமைப்பினர் தங்களின் தாக்குதலை நடத்தினர். கோல்கட்டாவில் அமெரிக்க மையத்தில் நடந்த தாக்குதலில் ஐந்து போலீசார் கொல்லப்பட்டனர்.2005ல் டில்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தில் நடந்த குண்டு வெடிப்பு உட்பட கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த பல குண்டு வெடிப்புகளில் ஹூஜி அமைப்புக்கு தொடர்பிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரணாசியில் 2006 மார்ச்சில் சங்கத் மோச்சன் கோவிலில் நடந்த குண்டு வெடிப்பு, 2007ல் ஐதராபாத் மெக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு, 2007 நவம்பரில் உ.பி., மாநிலத்தில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு போன்றவற்றுக்கும், இந்த அமைப்புக்கும் தொடர்புள்ளதாகவும் நம்பப்படுகிறது. ஹூஜி அமைப்பை, அன்னிய நாட்டு பயங்கரவாத அமைப்பாக, இந்தாண்டு மார்ச் 5ம் தேதி அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்தது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்