முதல் பக்க செய்திகள் 

தொடரும் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது யார்? ஒரு ஆண்டில் பிடிபட்டது மட்டும் ரூ.11 கோடி
மே 18,2008,00:00  IST

Front page news and headlines today

தமிழகத்தில் கடந்த 2007ம் ஆண்டு மட்டும், 1.12 கோடி கிலோ கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; இதன் மதிப்பு 10.95 கோடிரூபாய். பறிமுதல் செய்யப் பட்டது இவ்வளவு தான். இதைப்போல், பல மடங்கு அளவு அரிசி தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கும், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கும் கடத்தப்பட்டுள்ளது. அதன் மதிப்பு, பல கோடி ரூபாய் இருக்கும் என தெரிகிறது. இந்த கடத்தலை யார் தடுத்து நிறுத்தப்போகிறார்கள் என்பதுதான் கேள்வி.கடந்த 2006ம் ஆண்டு, ஜூன் 3ல் இருந்து தமிழகம் முழுவதும், ரேஷன் கடைகளில் கிலோ ரூ. 2க்கு அரிசி வினியோகிக்கப்படுகிறது.தமிழக அரசு எச்சரித்தது: இத்திட்டத்தில் வழங்கப்படும் ரேஷன் அரிசி, கேரள, ஆந்திர மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு கிலோ ரூ. 10க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் அரிசி கடத்துவது அதிகரித்ததால், உணவு வழங்கல் துறையின் பறக்கும் படை, குடிமைப்பொருள் தனி தாசில்தார் ஆகியோர், இரவு பகலாக வாகனத் தணிக்கை நடத்தி பல கடத்தல் லாரிகளை மடக்கினர். "ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்' என தமிழக அரசு எச்சரித்தது. ஆனால், ஆளும்கட்சியினர் சிலரது ஆதரவோடு, இன்றும் ரேஷன் அரிசி கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது.கோவையில் ம.தி.மு.க., தலைமைச் செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மூன்று முக்கிய கேள்விகளைக் கேட்டு, 2008 மார்ச் 12ம் தேதி , சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த தகவல் வழங்கும் அலுவலருக்கு மனு அனுப்பினார்.அந்த மனுவுக்கு, தகவல் வழங்கும் அலுவலர் கோதண்டன், 2008 மே 5ம் தேதி பதில் அனுப்பினார். அதன் விபரம்:தமிழகம் முழுவதும், பொது வினியோக திட்டத்தின் கீழ் 2007ம் ஆண்டு 33 லட்சத்து 44 ஆயிரத்து 444 டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, ரூ. 1,950 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.2007 ஜனவரி மாதம் முதல், டிசம்பர் மாதம் வரை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 654 குவிண்டால் ( ஒரு கோடியே 11 லட்சத்து 65 ஆயிரத்து 400 கிலோ) ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 10.95 கோடி.கடத்தல் ரேஷன் அரிசி : சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மட்டும், 10 ஆயிரத்து 569 குவிண்டால் ( ஒரு குவிண்டால்= 100 கிலோ) கடத்தல் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 933 குவிண்டால், திருவள்ளுர் மாவட்டத்தில், 3,216 குவிண்டால், வேலூரில், 8,007 குவிண்டால், திருவண்ணாமலை மாவட்டத்தில், 2,685 குவிண்டால், விழுப்புரம் மாவட்டத்தில், 2,742 குவிண்டால், கடலூர் மாவட்டத்தில், 1,197 குவிண்டால் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தர்மபுரியில், 1,973 குவிண்டால், சேலத்தில், 4,605 குவிண்டால், நாமக்கல்லில், 3,807 குவிண்டால், ஈரோட்டில், 5,423 குவிண்டால், கோவையில், 11 ஆயிரத்து 826 குவிண்டால், நீலகிரியில், 1,753 குவிண்டால், கரூரில், 2,000 குவிண்டால், பெரம்பலூரில், 769 குவிண்டால், திருச்சியில், 3,265 குவிண்டால், தஞ்சாவூரில், 2,679 குவிண்டால், திருவாரூரில், 487 குவிண்டால், நாகப்பட்டினத்தில், 861 குவிண்டால் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது.புதுக்கோட்டையில், 1,376 குவிண்டால், திண்டுக்கல்லில், 5,155 குவிண்டால், தேனியில், 2,542 குவிண்டால், மதுரையில், 5,624 குவிண்டால், சிவகங்கையில், 2,264 குவிண்டால், விருதுநகரில், 3,659 குவிண்டால், ராமநாதபுரத்தில், 2,428 குவிண்டால், தூத்துக்குடியில், 4,257 குவிண்டால், திருநெல்வேலியில், 2,595 குவிண்டால், கன்னியாகுமரியில், 2,994 குவிண்டால், கிருஷ்ணகிரியில், 9,963 குவிண்டால் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த, தகவல் வழங்கும் அலுவலர் கோதண்டன் தகவல் தெரிவித்துள்ளார்."இதைவிட அதிக அளவில் ஆந்திர, கேரள மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு இருக்கும்' என கூறுகின்றனர். உணவு வழங்கல் துறை அதிகாரிகள். ரேஷன் அரிசி கடத்தலுக்கு ஆளும் கட்சி பிரமுகர்கள் சிலர், உடந்தையாக இருக்கின்றனர். அவர்களின் "ஆசி'யுடன் அமோகமாக கடத்தல் நடக்கிறது. சில ரேஷன் கடை பணியாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் உள்ள சில அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், உணவு வழங்கல் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளுக்கும் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறது.இவர்கள் மீதும் நடவடிக்கையை கடுமையாக்கினால்தான், ரேஷன் அரிசி கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்படும் தமிழக ரேஷன் அரிசி, அங்கு பாலிஷ் செய்யப்பட்டு கப்பல்கள் மூலம் வங்கதேசம் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடத்தலில் பிடிபட்ட அரிசி மிக சொற்ப அளவுதான். பிடிபட்டதைப்போல் பல மடங்கு அளவு அரிசி வெளியேறியிருக்கும் என்கின்றனர் அதிகாரிகள். மக்களின் வரிப்பணம் மூலம் ஏழைகளுக்கு குறைந்த விலையில் கொடுக்கப்படும் அரிசி, வேறு யார், யார் கைகளுக்கோ செல்வதை அரசு தடுத்து நிறுத்துமா?- நமது சிறப்பு நிருபர் -

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்