No.1 Tamil Newspaper Front Page News and Headlines Online - Dinamalar
முதல் பக்க செய்திகள் 

நித்யானந்தா ஆசிரமத்தில் செக்ஸ் ஒப்பந்தம் போட்டு சீடர்கள் சேர்ப்பு !
ஏப்ரல் 23,2010,00:00  IST

Front page news and headlines today

பெங்களூரு: நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் சேரும் பக்தர்களிடம் ஒப்பந்த ஆவணத்தில் செக்ஸ் தொடர்பு கொள்ளவும் சம்மதம் தெரிவிக்கும் ஒரு காலமும் சேர்க்கப்பட்டுள்து. இதில் ஆராய்ச்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் செக்ஸ் உறவு வைத்து கொள்ளவும் சீடர்கள் தயாராக இருக்க வேண்டும். இது குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் நிபந்தனையுடன் கூடிய ஆவணப்பத்திரம் சி.ஐ.டி., போலீசாரிடம் சிக்கியுள்ளது. இதனால் இன்னும் திடுக்கிடும் மர்மத்தகவல்கள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இமாச்சலபிரதேசத்தில் கைது செய்யப்பட்ட செக்ஸ் சாமியார் நித்யானந்தா நேற்றிரவு பெங்களூரு அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து ராம் நகர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். நடிகை ரஞ்சிதாவுடன், சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருந்த காட்சிகள் வெளியானது. சாமியார் மீது லெனின் என்பவர், சென்னை போலீசில் புகார் கொடுத்தார். இதை வைத்து, சாமியார் நித்யானந்தா மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு, கொலை மிரட்டல், சதி செய்தல் உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது. பின்னர் இந்த வழக்குகள் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம் அர்கி என்ற இடத்தில் நித்யானந்தாவும், அவருடன் இருந்த சிலரும் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


அவர்கள் தங்கியிருந்த வீட்டில், லேப்-டாப், கம்ப்யூட்டர்கள், வீடியோ கேமராக்கள், மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், ஏழாயிரம் அமெரிக்க டாலர், டிராவலர் செக்குகள், வெளிநாட்டு கரன்சிகள், சிம் கார்டுகள், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், சாமியார் நித்யானந்தாவும், அவருடன் இருந்தவர்களும் சிம்லா சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று, அர்கி நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில், நித்யானந்தா உள்ளிட்டோர் ஆஜர்படுத்த பட்டனர். முறைப்படி வாரன்ட் பெற்று, பெங்களூருவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தனர். நித்யானந்தாவை வேன் மூலம் சண்டிகாருக்கு கொண்டு வந்து, பின்னர் விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து பெங்களூருவுக்கு இரவு 7 மணிக்கு கொண்டுவந்தனர்.


பெங்களூரு தேவனஹள்ளி சர்வதேச விமான நிலையத்தில், போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு 7 மணியளவில் சாமியாருடன் விமானம் பெங்களூரு வந்தது. போலீஸ் காரில், நித்யானந்தாவை பாதுகாப்பாக ஏற்றி, ராம் நகருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டார். விமான நிலையத்தில் இருந்து சாமியாரை வெளியே அழைத்து வந்தபோது, கன்னட அமைப்புகளைச் சேர்ந்த சிலர் கேலி, கிண்டல் செய்தனர். ஒரு கட்டத்தில் சாமியாரைத் தாக்கவும் சிலர் முற்பட்டனர். நித்யானந்தாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, இன்று கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அவரை விசாரிக்கும் போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.


நித்யானந்தாவை தாக்க முயற்சி: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சாமியார் நித்யானந்தாவை கன்னட அமைப்பினர் கேலியும், கிண்டலும் செய்து தாக்க முயற்சித்தனர். ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கிடையில் சாமியார் அழைத்து செல்லப்பட்டார். சாமியார் நித்யானந்தா, மும்பையிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்றிரவு 7 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். விமான நிலையத்திலிருந்து போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வருவதற்குள், பெரும் நெரிசல் ஏற்பட்டது. போலீஸாரின் பலத்த கெடுபிடிக்கிடையே சாமியார் நித்யானந்தா காருக்கு அழைத்து வரப்பட்டார். பத்திரிகையாளர்களும் அதிகளவில் குழுமியிருந்தனர். சாமியார் நித்யானந்தா விமான நிலைய வாசல் பகுதிக்கு வரும் போது, அங்கு நின்றிருந்த கன்னட அமைப்பினர், அவரை பார்த்து கேலியும், கிண்டலும் செய்தனர். சிலர், அவரை தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. போலீஸாரின் கெடுபிடிக்கு இடையே, சாமியார் சிரித்தவாரே போலீஸ் காரில் ஏறினார்.


ஏப். 26 வரை போலீஸ் காவலில் நித்யானந்தா : பெங்களூரு: ராம்நகர் அரசு மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு, சுமார் ஒரு மணி நேரம் 'மருத்துவ பரிசோதனை' செய்யப்பட்டது.  வரும் 26ம் தேதி வரை 'போலீஸ் காவலில்' வைத்து விசாரிக்க, ராம்நகர் மாவட்ட நீதிபதி புஷ்பாவதி அனுமதியளித்தார். இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு வந்த நித்யானந்தா, அவரது சீடர் நித்ய பக்தானந்தா இருவருக்கும் ராம்நகர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.  பின்னர், நித்யானந்தாவும் அவரது சீடரும் நீதிபதி புஷ்பாவதி வீட்டில் இரவு 10.35 மணியளவில் ஆஜர் செய்யப்பட்டனர். பிறகு,  இருவரும் காரில் அழைத்து செல்லப்பட்டனர். வெளியே வந்த அரசு வழக்கறிஞர் வாரப் கூறுகையில், ' நித்யானந்தாவையும், அவரது சீடர் பக்தானந்தாவையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, இம்மாதம் 26ம் தேதி வரை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்'என்றார். இதற்கிடையில், தன் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி, நித்யானந்தா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.


ஆவணத்தில் உள்ள சரத்து என்ன ? :  இதற்கிடையில் நித்யானந்தா ஆசிரமத்தில் சோதனை நடத்திய போலீசாரிடம் முக்கிய ஆவணம் சிக்கியுள்ளது.  நித்யானந்தாவின் சீடர்களாக சேரும் போது  10 பக்கங்கள் கொண்ட ஒப்பந்தத்தில் ஆசிரம நிர்வாகிகள் கையெழுத்து வாங்குவர்.  அதில் செக்ஸ் வைத்துக் கொள்வது பற்றி சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சரத்தில் கூறப்பட்டிருப்பதாவது:



“ஆராய்ச்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் சீடர்களாக.. இருப்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ள நேரிடும். அதற்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்க கூடாது. செக்ஸ் உறவில் சம்பந்தப்பட்டவர்கள் அந்த விஷயத்தை வெளியே யாரிடமும் கூறக்கூடாது. நிர்வாணமும் உடலுறவும் ஆத்மாவின் விடுதலைக்கு அவசியம். யாரும் யாருடனும் உறவு வைத்துக்கொள்ளலாம். இதனால் சிலருக்கு உடல் அளவிலோ மனதளவிலோ சங்கடமாக இருந்தால் அதை தாங்கிக் கொள்ள வேண்டும் .


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது நித்தியானந்தர் வழக்குக்கு ஒரு முக்கிய ஆதாராமாக ‌எடுத்துக்கொள்ளப்படுகிறது.


Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்