No.1 Tamil Newspaper Front Page News and Headlines Online - Dinamalar
முதல் பக்க செய்திகள் 

ஆந்திராவுக்கு தேர்வு எழுதச் சென்ற தமிழக மாணவர்களுக்கு அடி, உதை
பிப்ரவரி 19,2010,00:00  IST

Front page news and headlines today

சென்னை : "பெல்' நிறுவன பணிக்காக தேர்வு எழுதச் சென்ற தமிழக மாணவர்களை, தெலுங்கானா ஆதரவு மாணவர்கள் தாக்கி, விரட்டியது குறித்து சென்னை கமிஷனரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்தியாவில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில், நவரத்தினா அந்தஸ்து பெற்ற நிறுவனங்களில் பாரத மிகு மின் நிறுவனமும் (பெல்) ஒன்று. இந்தாண்டில் இந்நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு மூலம் எடுத்து வருகிறது. இந்த வகையில் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராமச்சந்திராபுரம் என்ற இடத்தில் இந்த நிறுவனம், டெக்னீஷியன் பணிகளுக்கான தேர்வு கடந்த 14ம் தேதி நடத்தப்படும் என அறிவித்தது. இத்தேர்விற்காக தமிழகத்தில் பல பகுதிகளிலும் இருந்து 4,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ராமச்சந்திராபுரம் சென்றனர். தேர்வு நடந்து முடிந்த நிலையில், அடுத்த நாள் 15ம் தேதி முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், முடிவுகள் அறிவிக்கப்படாமல், பின்னர் இ-மெயில் மூலம் தெரிவிக்கப்படும் என கூறப் பட்டது. நேர்முகத் தேர்வு 17ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், தேர்வு முடித்த மாணவர்கள் அனைவரும் பெல் நிறுவன வளாகத்திலேயே தங்கியிருந்தனர். மாணவர்களில் சிலர், "பெல்' நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேர்வு செய்யப்பட்டு பணியில் உள்ள தமிழர்கள் வீட்டிலும் தங்கியிருந்தனர்.



இந்நிலையில் நேற்று காலை பெல் நிறுவன வளாகத் தில் புகுந்த தெலுங்கானா பகுதி மாணவர்கள், தமிழக மாணவர்களை தேடினர். ஓட்டல்களுக்கு சாப்பிட சென்றிருப்பதை அறிந்த அவர்கள், அங்கு சென்று சாப்பிட்டுக் கொண்டிருந்த தமிழக மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து, மாணவர்கள் தங்கள் உடைமைகளுடன் ஐதராபாத் ரயில் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து ரயில் மூலம் சென்னை தப்பி வந்தனர். சென்னையில் நேற்று காலை வந்திறங்கிய அவர்கள், நேராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வந்து கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் அளித்தனர்.



இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த குமார் என்பவர் கூறியதாவது: தேர்வு முடித்து முடிவை எதிர்நோக்கி தங்கியிருந்தோம். பல மாணவர்கள் நேற்று முன்தினமே ரயிலில் புறப்பட்டு வந்து விட்டனர். 17ம் தேதி காலை தெலுங்கானா மாணவர்கள், பெல் நிறுவனம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர். நானும், என்னுடன் சில மாணவர்களும் பெல் வளாகத்தை விட்டு வெளியில் வந்த போது, தெலுங்கானா மாணவர்கள் எங்களை தாக்கி எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து பெல் வளாகத்தில் உள்ள தமிழக பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று, அங்கிருந்த தமிழக மாணவர்களை அடித்து உதைத்ததுடன், அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர். பின்னர், எங்களை அங்கிருந்து அடித்து, உதைத்து ரயில் நிலையத்தில் கொண்டு வந்து விட்டனர். வேலை எங்களுக்குத் தான்; நீங்கள் இங்கு வந்தால் எங்களுக்கு பணி கிடைக்காது; வந்தால் உயிருடன் செல்ல மாட்டீர்கள் என்று எச்சரித்து விட்டு சென்றனர். நாங்கள் அங்கிருந்து அன்று மாலை புறப்பட்டு வியாழனன்று சென்னை வந்தோம். அதன் பின்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தோம்.



உண்ணாவிரதம் இருந்த தெலுங்கானா மாணவர்கள், பணியாளர்கள் தேர்வில் தங்களுக்கு 85 சதவீதமும், 15 சதவீதம் மற்றவர்களுக்கும் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், தேர்வு முடிவில் தமிழக மாணவர்கள் 65 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், தெலுங்கானா மாணவர்கள் 25 சதவீதம் பேரே தேர்வு பெற்றதாகவும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெல் நிறுவனமும் இதற்காக தான் தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது. விரைவில், நேர்முகத் தேர்வு நடக்க உள்ள நிலையில், எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சென்னை கமிஷனரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இன்னும் பலர் அங்கு தங்கியுள்ளனர். அவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. இவ்வாறு குமார் கூறினார்.



தமிழக போலீஸ் பாதுகாப்பு: இதுகுறித்து, நேற்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறும் போது, ""மாணவர்கள் நடந்ததை கூறினர். அவர்கள் நேர்முகத் தேர்விற்கு செல்லும் போது போலீசார் பாதுகாப்பிற்காக அனுப்பப்படுவர். மேலும், ஐதராபாத் கமிஷனருடனும் இது குறித்து பேசி, பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்