கும்ளேவுடன் மோதலா :என்ன சொல்கிறார் கோஹ்லி ,

பர்மிங்காம்: ''பயிற்சியாளர் கும்ளேவுடன் மோதல் என்பது வெறும் வதந்திதான். என் கவனம் முழுவதும் போட்டியில் மட்டும்தான் உள்ளது,'' என, கோஹ்லி தெரிவித்தார்.
இந்திய அணியின் தலைமைப்பயிற்சியாளராக கும்ளே, கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் சாம்பியன்ஸ் டிராபியுடன் முடிகிறது. இவர் தொடர்ந்து செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய பயிற்சியாளருக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு, கோஹ்லியுடனான மோதல் தான் காரணம் என கூறப்படுகிறது. இநிலையில், இந்திய அணி இன்றைய சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.இது குறித்து கோஹ்லி கூறியது: இந்திய அணியின் 'டிரசிங் ரூமில்' ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால், இல்லாத ஒன்றை பற்றி அதிகமாக எழுதுகின்றனர். பயிற்சியாளர் கும்ளேவுடன் மோதல் என்பது வதந்தி மட்டுமே. கருத்து வேறுபாடு என்பது எப்போதும் இருக்கத்தான் செய்யும். நமது வீட்டில் கூட ஒற்றுமை சில நேரங்களில் இருக்காது. இது மனிதனின் குணம்.
கிரிக்கெட்டில் கவனம்:
தற்போது, அதிகமானோர் பொறுமையை கடைபிடிப்பது இல்லை. ஒரு விஷயத்தை பற்றி முழுமையாக தெரியாத நிலையில், அதை பரப்ப வேண்டாம். இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பு குறித்து, என் மீது விமர்சனம் செய்கின்றனர். இதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. என் கவனம் முழுவதும் கிரிக்கெட்டில் மட்டும்தான் உள்ளது.
நெருக்கடி இல்லை:
களத்திற்கு வெளியே நடப்பதை, போட்டியின் போது சிந்திப்பது கிடையாது. இதை எண்ணி நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ள மாட்டேன். பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியை சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறோம். தவிர, ஒரு போட்டியின் முடிவை வைத்து அணியை மதிப்பிடக்கூடாது. இவ்வாறு கோஹ்லி கூறினார்.
கங்குலி 'அட்வைஸ்'
இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில்,''கோஹ்லி- கும்ளே இடையே பிளவு என கூறப்படுகிறது. இப்பிரச்னையை கேப்டன், பயிற்சியாளர் என்ற முறையில் இவர்கள்தான் தீர்க்க வேண்டும். இதற்கு, கோஹ்லி, கும்ளே மட்டுமே பொறுப்பானவர்கள். என்ன செய்ய வேண்டும் என இவர்களுக்கு தெரியும். இதை விட்டுவிட்டு போட்டியில் கவனம் செலுத்துவது அவசியம்.
விளையாட்டு நட்சத்திரங்களில் பலர் சர்ச்சைகளை சந்திக்கின்றனர். ரியல் மாட்ரிட் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அடிக்கடி சர்ச்யைில் சிக்குகிறார். இதையும் தாண்டி, அணிக்காக சாதிக்கிறார். விளையாட்டு வீரர்கள் விமர்சனங்களை எண்ணி கவலைப்படக்கூடாது. இதன்படி, கோஹ்லியும் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்,'' என்றார்.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!