வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா... ,

லண்டன்: இப்படி ஒரு 'மெகா' தோல்வியை இந்திய ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவர்களது இடிந்து போன இதயங்களை ஓவல் மைதான காட்சிகள் படம் பிடித்து காட்டின. தோல்வி உறுதி என தெரியவர, மூவர்ணக்கொடியை போர்த்தியவாறு அரங்கைவிட்டு முன்னதாகவே கண்ணீர்மல்க கிளம்பினர். இவர்களில் பலர் ரூ. 33 ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள். இந்திய 'பேட்டிங்' துவங்கிய வேகத்தில் சரிய, போட்டி இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என மனம் நொந்து போயினர். கோஹ்லியின் தவறான முடிவு, பும்ராவின் 'நோ-பால்' என பைனலில், பல வேதனை தருணங்களை ரசிகர்கள் சந்திக்க நேர்ந்தது. இங்கிலாந்தில், 'மினி உலக கோப்பை' என்று அழைக்கப்படும் 8வது ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்தது. லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த பைனலில், 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய உற்சாகத்தில் இருந்த நம்மவர்கள், 'டாஸ்' வென்று 'பீல்டிங்' தேர்வு செய்தனர்.
பாகிஸ்தான் அணிக்கு, பகர் ஜமான் (114), அசார் அலி (59), முகமது ஹபீஸ் (59*) கைகொடுக்க, 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 338 ரன்கள் குவித்தது. கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் (0), கேப்டன் கோஹ்லி (5), தோனி (4) உள்ளிட்டோர் சொற்ப ரன்னில் அவுட்டாகினர். ஹர்திக் பாண்ட்யா (76) ஆறுதல் தந்தார். இந்திய அணி 30.3 ஓவரில் 158 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணி, முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.இப்போட்டியில் கேப்டன் கோஹ்லி சில தவறான முடிவுகளை எடுத்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்திய அணியின் பலம் 'பேட்டிங்' தான். இந்நிலையில் 'டாஸ்' வென்ற கேப்டன் கோஹ்லி, 'பீல்டிங்' தேர்வு செய்தது தவறு. இப்போட்டியில் ஒருவேளை முதலில் 'பேட்' செய்திருந்தால் ரோகித் சர்மா, ஷிகர் தவான் நெருக்கடியின்றி நல்ல துவக்கம் தந்திருப்பர். இதனால் வலுவான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்து, பவுலிங்கில் நெருக்கடி தந்திருக்கலாம்.
* பொதுவாக ஆசிய அணியினர், சுழற்பந்துவீச்சை எளிதாக சமாளித்து ரன் சேர்ப்பர். ஆனால் இந்திய அணி, அஷ்வின், ரவிந்திர ஜடேஜா என 2 சுழற்பந்துவீச்சாளருடன் களமிறங்கியது. இவர்கள் வீசிய 18 ஓவர்களில் 137 ரன்கள் எடுக்கப்பட்டன. ஒரு விக்கெட் கூட வீழ்த்தப்படவில்லை.
* சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இம்முறை பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், வெற்றிக்கு வித்திட்டார். இவரை அணியில் சேர்க்காதது தவறு. பாகிஸ்தானின் துவக்க வீரர்களான அசார் அலி, பகர் ஜமான், 'ஷார்ட் பிட்ச்' பந்துகளின் திணறினர். உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டிருந்தால், இவர்களது விக்கெட்டை விரைவில் கைப்பற்றி இருப்பார்.
* பும்ரா வீசிய 'நோ-பால்' காரணமாக 3 ரன்னில் தப்பினார் ஜமான். இதற்கு பின் இவரை வீழ்த்த இந்திய பவுலர்கள் உருப்படியான திட்டம் எதுவும் வகுக்கவில்லை. இதனால் சதம் கடந்து தொல்லை தந்தார்.
* வங்கதேசத்துக்கு எதிரான அரையிறுதியில் சுழற்பந்துவீச்சில் திருப்பம் தந்த கேதர் ஜாதவுக்கு, பைனலில் முன்கூட்டியே பந்துவீச வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும்.
* வேகப்பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட புவனேஷ்வர் குமாருக்கு, 'மிடில்-ஓவரில்' பந்துவீச வாய்ப்பு வழங்கியிருக்கலாம். இதனால் ரன் வேகத்தை கட்டுப்படுத்தி நெருக்கடி தந்திருப்பார்.
* முகமது ஆமிர் வீசிய 3வது ஓவரின் 3வது பந்தில் 'அவுட்' வாய்ப்பில் இருந்து தப்பிய கேப்டன் கோஹ்லி, அடுத்த பந்தில் தேவையில்லாமல் 'ஷாட்' அடித்து அவுட்டானது தவறு.இது ஆப்-சைடுக்கு வெ ளியே வீசப்படும் பந்துகளை எதிர்கொள்வதில் இவருக்கு உள்ள பலவீனத்தை சுட்டிக் காட்டியது.
இது போன்ற தவறுகள் தொடரக் கூடாது. 'விளையாடு அல்லது வெளியேறு' என்ற கொள்கையை பி.சி.சி.ஐ., பின்பற்றுவது அவசியம். சோபிக்க தவறும் யுவராஜ், ஜடேஜா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்க வேண்டும். 2019ல் இங்கிலாந்தில் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கு சிறந்த இந்திய அணியை உருவாக்க இப்போதே கவனம் செலுத்த வேண்டும்.