பிரிக்க முடியாதது... மும்பையும் கோப்பையும் * ஐந்தாவது முறையாக சாம்பியன் ,

துபாய்: ஐ.பி.எல்., கோப்பை, மும்பை அணியை பிரிக்க முடியாது போல. நேற்று நடந்த பைனலில் டில்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஐந்தாவது முறையாக கோப்பை வென்றது.
ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. எட்டு அணிகள் பங்கேற்ற இத்தொடரில் மூன்று முறை சாம்பியன் ஆன தோனியின் சென்னை அணி, முதன் முறையாக லீக் சுற்றுடன் திரும்பியது. நடப்பு சாம்பியன் மும்பை, டில்லி அணிகள் பைனலுக்கு முன்னேறின.
துபாயில் நடந்த இப்போட்டியில்'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார்.
ரிஷாப் அரைசதம்
டில்லி அணிக்கு ஸ்டாய்னிஸ், ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தர, மும்பை தரப்பில் டிரன்ட் பவுல்ட் முதல் ஓவரை வீசினார். முதல் பந்தில் ஸ்டாய்னிசை 'டக்' அவுட்டாக்கி 'ஷாக்' கொடுத்தார்.அடுத்து ரகானேவை (2) அவுட்டாக்கினார் பவுல்ட். தவான் (15) போல்டாக, டில்லி அணி 22 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
பின் ஸ்ரேயாஸ், ரிஷாப் பன்ட் இணைந்தனர். குர்னால் பாண்ட்யா வீசிய 10 வது ஓவரில், 2 சிக்சர் அடித்து நம்பிக்கை கொடுத்தார் ரிஷாப். 35வது பந்தில் அரைசதம்அடித்த ரிஷாப், 56 ரன்னுக்கு அவுட்டானார்.
ஸ்ரேயாஸ் நம்பிக்கை
மறுபக்கம்கேப்டனுக்குரிய பொறுப்பானஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ், ஐ.பி.எல்., அரங்கில் 16வது அரைசதம் அடித்தார். இத்தொடரில் இவர் அடித்த 3வது அரைசதம் இது. ஹெட்மயர்(5) ஏமாற்ற,டில்லி ஸ்கோர் உயர வழியில்லாமல் போனது.
டில்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டும் எடுத்தது. ஸ்ரேயாஸ் (64) அவுட்டாகாமல் இருந்தார். மும்பை சார்பில் பவுல்ட் 3, கூல்டர் நைல் 2 விக்கெட் வீழ்த்தினர்.
'மின்னல்' வேகம்
எளிய இலக்கைத் துரத்திய மும்பை அணிக்கு ரோகித் சர்மா, குயின்டன் டி காக் ஜோடி 'மின்னல்' வேக துவக்கம் கொடுத்தது. ரபாடா வீசிய 2வது ஓவரில் 18 ரன்கள் எடுத்தார் குயின்டன். முதல் பந்தில் அவுட்டான சோகத்தில் இருந்த ஸ்டாய்னிஸ், தனது பவுலிங்கில் முதல் பந்தில் குயின்டனை (20) அவுட்டாக்கினார்.
ரோகித் அபாரம்
சூர்யகுமார் (19) ரன் அவுட்டானார். ரோகித், ஐ.பி.எல்., அரங்கில் 39வது அரைசதம் அடிக்க, மும்பை அணி வெற்றியை வேகமாக நெருங்கியது. ரோகித் (68), போலார்டு (9), ஹர்திக் பாண்ட்யா (3) அவுட்டான போதும், மும்பை அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இஷான் கிஷான் (33) அவுட்டாகாமல் இருந்தார். டில்லி அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஐந்து முறை
டில்லியை வீழ்த்திய மும்பை அணி, ஐ.பி.எல்., அரங்கில் 5வது முறையாக (2013, 2015, 2017, 2019, 2020) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
அடுத்த இரு இடங்களில் சென்னை (2010, 2011, 2018), கோல்கட்டா (2012, 2016) அணிகள் உள்ளன. ராஜஸ்தான் (2008), டெக்கான் (2009), ஐதராபாத் (2016) அணிகள் தலா ஒரு முறை கோப்பை வென்றன.
பி.சி.சி.ஐ.,க்கு வெற்றி
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நடக்க இருந்த 13வது சீசன் ஐ.பி.எல்., தொடர் பல முறை தள்ளிப் போனது. கடைசியில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முடிவு செய்யப்பட்டது. துபாய், சார்ஜா, அபுதாபி என மூன்று மைதானங்கள், 8 அணிகளில், 200 க்கும் மேற்பட்ட வீரர்கள், பல்வேறு பயிற்சியாளர்கள் பங்கேற்றனர். கடைசி வரை எவ்வித சிக்கலும் இல்லாமல் தொடரை வெற்றிகரமாக சவுரவ் கங்குலி தலைமையிலான பி.சி.சி.ஐ., நடத்தியது. இது விளையாட்டு உலகத்துக்கு கிடைத்த வெற்றி.
ரூ. 20 கோடி
மும்பை அணிக்கு கோப்பையுடன் ரூ. 20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த டில்லி அணிக்கு ரூ. 12.50 கோடி தரப்பட்டது.