மந்தனா அணி சாம்பியன் * ‘டுவென்டி–20’ சாலஞ்ச் தொடரில் அபாரம் ,

சார்ஜா: பெண்களுக்கான 'டுவென்டி-20' சாலஞ்ச் தொடரில் மந்தனாவின் டிரையல்பிளேசர்ஸ் அணி, முதன் முறையாக சாம்பியன் ஆனது. நேற்று நடந்த பைனலில் சூப்பர்நோவாஸ் அணியை, 16 ரன்னில் வீழ்த்தியது.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் பெண்களுக்கான 'டுவென்டி-20' சாலஞ்ச் தொடர் நடத்தப்படுகிறது. சார்ஜாவில் நடந்த மூன்றாவது சீசன் பைனலில் இரு முறை கோப்பை வென்ற ஹர்மன்பிரீத் கவுரின் சூப்பர்நோவாஸ், மந்தனாவின் டிரையல்பிளேசர்ஸ் அணியை சந்தித்தது. 'டாஸ்' வென்ற ஹர்மன்பிரீத் கவுர், பீல்டிங் தேர்வு செய்தார்.
மந்தனா அபாரம்
டிரையல் பிளேசர்ஸ் அணிக்கு கேப்டன் மந்தனா, டாட்டின் (20) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. மந்தனா 49 பந்தில் 68 ரன்கள் எடுத்தார். 14.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்த டிரையல்பிளேசர்ஸ் அணி, பின் திடீரென சறுக்கியது. ராதா வீசிய 18 வது ஓவரில் தீப்தி (9), ரிச்சா (10) அவுட்டாகினர். ராதாவின் கடைசி ஓவரில், சோபி (1), ஹர்லீன் (4), ஜூலன் கோஸ்வாமி (1) வீழ்ந்தனர்.
டிரையல்பிளேசர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 118 ரன்கள் மட்டும் எடுத்தது. சுழலில் அசத்திய ராதா, இத்தொடரில் 5 விக்கெட் சாய்த்த முதல் வீராங்கனை என்ற பெருமை பெற்றார்.
'சூப்பர்' ஏமாற்றம்
எளிய இலக்கைத் துரத்திய சூப்பர்நோவாஸ் அணியை ஜெயங்கனி (6), ஜெமிமா (13), தானியா (14), ஷஷிகலா (19) கைவிட்டனர். அனுஜா 8, ஹர்மன்பிரீத் 30 ரன் எடுத்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன் தேவைப்பட்டன. இதில் 7 ரன் மட்டும் எடுக்கப்பட்டன.
சூப்பர்நோவாஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 102 ரன் மட்டும் எடுத்தது. சல்மா 3, தீப்தி 2 விக்கெட் வீழ்த்தினார். 16 ரன்னில் வெற்றி பெற்ற மந்தனா அணி, இத்தொடரில் முதல் கோப்பை வென்றது.