சாதித்துக் காட்டிய வீரர்கள்: 13வது ஐ.பி.எல்., சீசனில் ,

துபாய்: எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடந்தது. இதில் லோகேஷ் ராகுல், டேவிட் வார்னர், தவான், ரபாடா, பும்ரா போன்ற சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்களுடன், ருதுராஜ் கெய்க்வாட், நடராஜன், தேவ்தத் படிக்கல் உள்ளிட்ட சில இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி திறமையை நிரூபித்தனர்.
இதன் விவரம்:
* ராகுல் (பஞ்சாப்): பஞ்சாப் அணி வீரர் லோகேஷ் ராகுல், ஐ.பி.எல்., அரங்கில் முதன்முறையாக கேப்டனாக செயல்பட்டார். பேட்டிங்கில் அதிகபட்சமாக 670 ரன்கள் குவித்த இவர், தொடர்ந்து 3 சீசனில் (593, 659, 670 ரன்கள்) 500 ரன்களுக்கு மேல் எடுத்தார். தோல்விகளால் துவண்டிருந்த பஞ்சாப் அணிக்கு தொடர்ச்சியாக 5 வெற்றி பெற்றுத் தந்தார். இதனையடுத்து இவர், ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய ஒருநாள், 'டுவென்டி-20' அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
* வார்னர் (ஐதராபாத்): ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், 16 போட்டியில், 548 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில், தொடர்ச்சியாக 6 சீசனில், 500 அல்லது அதற்கு மேல் ரன்கள் குவித்த வீரரானார். அணியை சிறப்பாக வழிநடத்தி 'பிளே-ஆப்' ('எலிமினேட்டர்') சுற்றுக்கு அழைத்துச் சென்றார்.
* ஷிகர் தவான் (டில்லி): டில்லி அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான், 17 போட்டியில், 618 ரன்கள் குவித்தார். ஐ.பி.எல்., வரலாற்றில் தொடர்ச்சியாக 2 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இவரது அபார ஆட்டம் டில்லி அணியை பைனல் வரை கொண்டு சென்றது.
* ரபாடா (டில்லி): டில்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா, அதிகபட்மாக 30 விக்கெட் வீழ்த்தினார். இவரது சிறப்பான செயல்பாடு டில்லி அணியை தொடர்ந்து 2வது முறையாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு அழைத்துச் சென்றது. நார்ட்ஜே (22 விக்கெட்) உடன் இணைந்து எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தந்தார்.
* பும்ரா (மும்பை): கொரோனா காரணமாக 6 மாதங்களாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காத மும்பையின் பும்ரா, 'வேகத்தில்' மிரட்டினார். மொத்தம் 27 விக்கெட் சாய்த்த இவருக்கு, டிரன்ட் பவுல்ட் (25 விக்கெட்) ஒத்துழைப்பு தர மும்பை அணி 5வது முறையாக கோப்பை வென்றது.
* ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை): இத்தொடருக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையின் ருதுராஜ் கெய்க்வாட், தான் பங்கேற்ற முதல் மூன்று போட்டியிலும் (0, 5, 0) ஏமாற்றினார். பின் எழுச்சி கண்ட இவர், ஐ.பி.எல்., அரங்கில் 'ஹாட்ரிக்' அரைசதமடித்த முதல் சென்னை வீரரானார். முதன்முறையாக சென்னை அணி 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்த போதிலும் திறமையான வீரரை அடையாளம் காட்டியது.
* நடராஜன் (ஐதராபாத்): ஐதராபாத் அணியின் தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜன், 'யார்க்கர்' பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தந்தார். மொத்தம் 16 விக்கெட் கைப்பற்றிய இவர், வருண் சக்கரவர்த்தி காயத்தால் விலகியதால் இந்திய 'டுவென்டி-20' அணியில் இடம் பிடித்தார்.
* வருண் சக்கரவர்த்தி (கோல்கட்டா): 'சுழலில்' அசத்திய கோல்கட்டா அணியின் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, 17 விக்கெட் வீழ்த்தினார். இம்முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் (எதிர்: டில்லி) கைப்பற்றிய ஒரே பவுலர் என்ற பெருமை பெற்றார். இவருக்கு, ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய 'டுவென்டி-20' அணியில் இடம் கிடைத்தது. ஆனால் காயத்தால் விலகினார்.
* இஷான் கிஷான் (மும்பை): மும்பை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான், 516 ரன்கள் குவித்து மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமானார்.
* தேவ்தத் படிக்கல் (பெங்களூரு): பெங்களூரு அணிக்காக அறிமுகமான தேவ்தத் படிக்கல், 'டாப்-ஆர்டரில்' நம்பிக்கை தந்தார். மொத்தம் 473 ரன்கள் எடுத்த இவர், சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!