உதயமாகிறது ஒன்பதாவது அணி: மோகன்லால் ஆர்வம் ,

மும்பை: ஐ.பி.எல்., தொடரில் புதிதாக ஒன்பதாவது அணியை களமிறக்க பி.சி.சி.ஐ., திட்டமிட்டுள்ளது. இதனை வாங்க நடிகர் மோகன்லால் ஆர்வமாக உள்ளார்.
ஐ.பி.எல்., தொடரில் தற்போது சென்னை, மும்பை, கோல்கட்டா உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. கொரோனா காரணமாக 13வது ஐ.பி.எல்., தொடரை இந்தியாவில் நடத்த முடியவில்லை. ஐக்கிய எமிரேட்சில் நடத்தியதால் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு(பி.சி.சி.ஐ.,) பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக 14வது ஐ.பி.எல்., தொடரில் கூடுதலாக ஒரு அணியை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய அணி குஜராத்தின் ஆமதாபாத் பெயரில் அறிமுகமாகலாம். இங்கு கட்டுப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய சர்தார் படேல் மைதானத்தில்(1,10,000 பேர் அமரும் வசதி) போட்டிகள் நடத்தப்படலாம்.
புதிய அணியை பைஜூஸ் நிறுவனத்துடன் சேர்ந்து வாங்க மலையாள நடிகர் மோகன்லால் திட்டமிட்டுள்ளாராம். துபாய் சென்று பி.சி.சி.ஐ., நிர்வாகிகளுடன் பேசியுள்ளார். குஜராத்தை சேர்ந்த அடானி குழுமமும் விருப்பமாக உள்ளது.
ஐ.பி.எல்., அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''அடுத்த ஆண்டு ஏப்-மே மாதங்களில் இந்தியாவில் 14வது ஐ.பி.எல்., தொடரை நடத்தும் பணிகளில் பி.சி.சி.ஐ., இறங்கியுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் 'மெகா' வீரர்கள் ஏலத்திற்கு தயாராகும்படி கேட்டுக் கொண்டுள்ளது. நட்சத்திர வீரர்களை தக்க வைக்கும் விதிமுறை தொடர விரும்புகிறோம். புதிய அணி ஒன்றும் அறிமுகமாக உள்ளது,''என்றார்.
சூதாட்ட பிரச்னையால் சென்னை, ராஜஸ்தான் அணிகள் தடை செய்யப்பட்ட போது, இரண்டு ஆண்டுகளுக்கு(2016,17) மட்டும் 'குஜராத் லயன்ஸ்' அணி ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்றது. இதற்கு கேப்டனாக ரெய்னா இருந்தார். தற்போது பி.சி.சி.ஐ., செயலராக உள்ள ஜெய் ஷா, குஜராத்தை சேர்ந்தவர். ஆமதாபாத் பெயரில் நிரந்தரமாக ஒரு அணி இடம் பெற விரும்புகிறாராம். புதிய அணி உருவானால் சென்னை அணிக்காக விளையாடும் ரவிந்திர ஜடேஜா தனது சொந்த ஊரான குஜராத் அணிக்கு மாறலாம்.