சாம்சனுக்கு கவாஸ்கர் ‘அட்வைஸ்’ ,

துபாய்: ''தவறான 'ஷாட்' அடித்து, கடவுள் கொடுத்த திறமையை சஞ்சு சாம்சன் வீணடிக்கிறார்,'' என, கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 2 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், 5 பந்தில் 4 ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். தொடர்ச்சியாக 3 'டுவென்டி-20' போட்டியில் ஏமாற்றினார். கடைசியாக இலங்கைக்கு எதிராக (7, 0) சொதப்பினார். இதனால் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் தவிக்கிறார்.இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியது: பந்தை தேர்வு செய்து 'ஷாட்' அடிப்பதில் சஞ்சு சாம்சன் தவறு செய்கிறார். சர்வதேச போட்டியிலும் இதே தவறை செய்கிறார். சந்திக்கும் முதல் பந்தை சிக்சருக்கு அனுப்ப முயற்சிக்கிறார். இது கடினமானது. ஒரு பேட்ஸ்மேன் நல்ல 'பார்மில்' இருந்தாலும், முதல் பந்தில் இருந்து சிக்சர்களாக விளாச முடியாது. சில பந்துகளை நிதானமாக சந்தித்தால் மட்டுமே ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு அதிரடியாக ரன் சேர்க்க முடியும். பவுலர்களின் கையில் இருந்து வெளிவரும் பந்தை சரியாக கணித்து கால்களை நகற்றினால் நிறைய ரன் சேர்க்கலாம்.
சஞ்சு சாம்சன் திறமையான வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருக்கு கடவுள் கொடுத்த திறமையை வீணடித்துவிடக்கூடாது. 'டாப்-ஆர்டரில்' களமிறங்கி, 'டெயிலெண்டர்' போல விளையாடக் கூடாது. இதனை அவர் சரிசெய்து கொள்ளாவிட்டால், இந்திய அணிக்கு திரும்புவது கடினமாகிவிடும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
ரூ.12 லட்சம் அபராதம்
துபாயில் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி தாமதமாக பந்துவீசியது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல்., நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் தாமதமாக பந்துவீசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு, முதன் முறை என்பதால் ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,'' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!