வெங்கடேஷுக்கு ‘ஜாக்பாட்’: மஞ்ச்ரேக்கர் கணிப்பு ,

மும்பை: ''அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐ.பி.எல்., ஏலத்தில் வெங்கடேஷ் ஐயர், 12 முதல் 14 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்,'' என, சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் 26. 'ஆல்-ரவுண்டரான' இவர், 14வது ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணி சார்பில் விளையாடுகிறார். இதுவரை விளையாடிய 5 போட்டியில், 2 அரைசதம் உட்பட 193 ரன் எடுத்துள்ளார். வேகப்பந்துவீச்சாளரான இவர், 3 விக்கெட் சாய்த்துள்ளார்.இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியது: கோல்கட்டா அணியில் அறிமுகமான வெங்கடேஷ் ஐயர், துவக்க வீரராக அசத்துகிறார். முதல் தரம் (10 போட்டி, சராசரி 36.33, ஸ்டிரைக் ரேட் 54.33), 'லிஸ்ட் ஏ' (24 போட்டி, சராசரி 47.16, ஸ்டிரைக் ரேட் 98.72), 'டுவென்டி-20' (43 போட்டி, சராசரி 38.20, ஸ்டிரைக் ரேட் 138.51) போட்டிகளில் இவரது செயல்பாடு சிறப்பாக உள்ளது. எப்படி 'பேட்' செய்ய வேண்டும் என்று நன்கு அறிந்துள்ளார். தவிர இவர், பவுலராக இருப்பது கூடுதல் பலம். 'டுவென்டி-20' போட்டியில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமை இவரிடம் உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐ.பி.எல்., தொடருக்கான 'மெகா' ஏலத்தில் இவரை ஒப்பந்தம் செய்ய கடுமையான போட்டி நிலவும். இவர், ரூ. 12 முதல் 14 கோடி வரை ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு மஞ்ச்ரேக்கர் கூறினார்.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!