டில்லி ‘ஹீரோ’ ஹெட்மயர் *அஷ்வின் பாராட்டு ,

துபாய்: ''டில்லி அணியின் 'ஹீரோ'வாக ஜொலிக்கிறார் ஹெட்மயர். பல போட்டிகளை வெற்றிகரமாக 'பினிஷிங்' செய்துள்ளார்,'' என அஷ்வின் பாராட்டினார்.
துபாயில் நடந்த பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில் டில்லி அணி, சென்னையை வீழ்த்தியது. இதில் கடைசி கட்டத்தில் கலக்கலாக ஆடிய ஹெட்மயர் 18 பந்தில் 28 ரன் எடுத்து டில்லி அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.இது குறித்து டில்லி அணிக்காக விளையாடும் தமிழக வீரர் அஷ்வின் கூறுகையில்,''பொதுவாக 'டாப்-ஆர்டரில்' வரும் பேட்டர்கள் தான் அதிக ரன் குவிப்பர். இதனால் கடைசி கட்டத்தில் களமிறங்கி 25-30 ரன்களை எடுப்பவர்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஹெட்மயரை பொறுத்தவரை பல போட்டிகளை வெற்றிகரமாக முடித்து கொடுத்துள்ளார். டில்லி அணி 6-8 புள்ளிகள் பெற காரணமாக இருந்துள்ளார். எங்களது 'ஹீரோ'வாக திகழ்கிறார். இவருக்கு அணியின் 'டிரஸ்சிங் ரூமில்' உரிய அங்கீகாரம் அளிக்கிறோம். இவரது முயற்சிகளை பாராட்டுகிறோம்.
எனது பந்துவீச்சு, பேட்டிங் திருப்தி அளிக்கிறது. ஒரு போட்டியில் 24 பந்துகளே வீச முடியும். இந்த 24 பந்துகளில் விக்கெட் கைப்பற்ற முழுமையாக முயற்சி மேற்கொள்கிறேன். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவது தான் முக்கியம்,''என்றார்.
ஹெட்மயர்(விண்டீஸ்) கூறுகையில்,''போட்டிகளை சிறப்பாக 'பினிஷிங்' செய்வதே எனது முக்கிய பணி. இதற்காக தான் எனக்கு சம்பளம் தருகின்றனர். தொடர்ந்து கடைசி கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித் தர முயற்சிப்பேன்,''என்றார்.
தனிப்பட்ட மோதல் அல்ல
டில்லி-கோல்கட்டா மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டியில் அஷ்வின் இரண்டாவது ரன்னுக்கு ஓடியது சர்ச்சையை கிளப்பியது. இப்போட்டியில் பீல்டர் எறிந்த பந்து, டில்லி கேப்டன் ரிஷாப் மீது பட்டுச் சென்றது. உடனே அஷ்வின் இரண்டாவது ரன்னுக்கு ஓடினார். பொதுவாக பேட்டர்கள் மீது பந்து பட்டுச் செல்லும் போது ரன் எடுப்பதில்லை. விதிமுறைப்படி ரன் எடுக்கலாம்.
இவ்விஷயத்தில் கிரிக்கெட் உணர்வுடன் அஷ்வின் நடந்து கொள்ளவில்லை என கோல்கட்டா கேப்டன் மார்கன் குற்றம்சாட்டினார். அஷ்வினும் பதிலடி கொடுக்க, பிரச்னை பெரிதானது.
இது குறித்து அஷ்வின் கூறுகையில்,''ரிஷாப் மீது பந்து பட்டதை நான் பார்க்கவில்லை. கலாசார ரீதியாக நாம் வேறுபட்டு இருக்கிறோம். யாருடனும் தனிப்பட்ட மோதல் இல்லை. பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே விரும்புகிறேன்,''என்றார்.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!