உம்ரானுக்கு கோஹ்லி ஆதரவு ,

அபுதாபி: ''உம்ரான் மாலிக்கின் திறமையை மேம்படுத்த வேண்டும்,'' என, கோஹ்லி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் 21. இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' இர்பான் பதானின் பயிற்சியின் கீழ் ஜம்மு-காஷ்மீர் அணிக்காக விளையாடினார். ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணியின் வலைப்பயிற்சி பவுலராக இருந்த இவர், காயத்தால் விலகிய தமிழக வீரர் நடராஜனுக்கு பதிலாக மாற்று வீரராக தேர்வானார்.கோல்கட்டாவுக்கு எதிரான அறிமுக ஐ.பி.எல்., போட்டியில் மணிக்கு 151.03 கி.மீ., வேகத்தில் பந்துவீசிய உம்ரான் மாலிக், பெங்களூரு அணிக்கு எதிராக மணிக்கு 152.95 கி.மீ., வேகத்தில் பவுலிங் செய்தார். இதன்மூலம் இம்முறை அதிவேகமாக பந்துவீசிய பவுலரானார். முன்னதாக கோல்கட்டாவின் பெர்குசன் மணிக்கு 152.75 கி.மீ., வேகத்தில் பந்துவீசியது சிறந்த செயல்பாடாக இருந்தது.
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறியது: ஐ.பி.எல்., தொடரில் ஒவ்வொரு ஆண்டும் திறமையான இளம் வீரர்களை அடையாளம் காண முடிகிறது. இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் பந்துவீசுவது மகிழ்ச்சி. இங்கிருந்து இவரை வளர்ச்சியை தொடர்ந்து கண்காணித்து, திறமையை மேம்படுத்த வேண்டும். சமீபகாலமாக இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். இது, இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயம். உம்ரான் போன்ற திறமையான இளம் வீரர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களை சிறந்த வீரர்களாக உருவாக்க வேண்டும்.
இவ்வாறு கோஹ்லி கூறினார்.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!