டில்லி அணி மீண்டு வரும்: ரிஷாப் பன்ட் நம்பிக்கை ,

சார்ஜா: ''அடுத்த ஐ.பி.எல்., சீசனில் டில்லி அணி வலிமையுடன் மீண்டு வரும்,'' என, ரிஷாப் பன்ட் தெரிவித்துள்ளார்.
சார்ஜாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீனுக்கான 2வது தகுதிச் சுற்றின் கடைசி ஓவரில் ஏமாற்றிய டில்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கோல்கட்டாவிடம் தோல்வியடைந்து பைனல் வாய்ப்பை பறிகொடுத்தது. அஷ்வின் வீசிய 20வது ஓவரின் 5வது பந்தில் சிக்சர் அடித்த ராகுல் திரிபாதி கோல்கட்டா அணிக்கு 'திரில்' வெற்றி தேடித்தந்தார்.இதுகுறித்து டில்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட் கூறியது: இத்தோல்வி குறித்து என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில் நாங்கள் கடைசி வரை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தோம். வெற்றிக்காக கடைசி வரை போராடினோம். இதற்காக எங்கள் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் அன்றைய நாள் எங்களுக்கானதாக இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.
'மிடில் ஓவரில்' துல்லிமாக பந்துவீசிய கோல்கட்டா பவுலர்கள் எங்களது ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர். இதனால் இமாலய இலக்கை நிர்ணயிக்க முடியாமல் போனது. இத்தோல்வியின் பிடியில் இருந்து எப்படி மீள்வது என்று எங்களுக்கு நன்றாக தெரியும். எனவே அடுத்த சீசனில் டில்லி அணி வலிமையுடன் மீண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு ரிஷாப் பன்ட் கூறினார்.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!