Dinamalar

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை ,  
 

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் 'சுழல்' வலை விரிக்க காத்திருப்பதால், விறுவிறு மோதலை எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடந்தது. 29 போட்டிகள் முடிந்த நிலையில் வீரர்கள் சிலருக்கு கொரோனா ஏற்பட காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 31 போட்டிகள் எமிரேட்சில் நடந்தன. இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கும் பைனலில் தோனியின் சென்னை அணி, இயான் மார்கனின் கோல்கட்டாவை சந்திக்கிறது.

ஐ.பி.எல்., அரங்கில் பங்கேற்ற 12 தொடர்களில் சென்னை அணி 9வது முறையாக இன்று பைனலில் மோதுகின்றது. இதற்கு முன் 2010, 2011, 2018 என மூன்று முறை கோப்பை வென்றது.

துவக்கம் நம்பிக்கை

சென்னை அணிக்கு துவக்கத்தில் இளம் வீரர் ருதுராஜ், அனுபவ டுபிளசி (547) கைகொடுக்கின்றனர். அதேநேரம் கடந்த 3 போட்டிகளில் முதல் விக்கெட்டுக்கு 3, 18, 28 ரன் தான் சேர்த்தனர். இன்று சுதாரித்துக் கொள்ளும் பட்சத்தில், சென்னை அணி நான்காவது முறையாக கோப்பை வெல்லலாம்.

'மிடில் ஆர்டரில்' மொயீன் அலி (320) ஏமாற்றம் தொடர்கிறது. ரெய்னாவுக்குப் பதில் களமிறங்கிய 'சீனியர்' உத்தப்பா, ரன் மழை தொடர வேண்டும். அம்பதி ராயுடு (257), ஜடேஜா (227), பிராவோ என பேட்டிங் வரிசை நீள்வது சென்னை அணியின் பலம்.

தோனி எதிர்பார்ப்பு

கேப்டன் தோனி 15 போட்டியில் 114 ரன் தான் எடுத்துள்ளார். தகுதிச்சுற்று 1ல் கடைசி நேரத்தில் ஜடேஜாவுக்கு முன்னதாக களமிறங்கிய தோனி, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு 6 பந்தில் 18 ரன் எடுத்து அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றார். சிறந்த 'பினிஷரான' இவர் 'கூலாக' செயல்பட்டு சாதிப்பதில் கில்லாடி. கோப்பை வென்று கம்பீரமாக விடைபெற முயற்சிக்கலாம்.

பவுலிங் எப்படி

பந்துவீச்சில் 15 போட்டியில் 18 விக்கெட் வீழ்த்திய ஷர்துல் தாகூர் மீது நம்பிக்கை காணப்படுகிறது. கடந்த போட்டியில் திடீரென எழுச்சி பெற்ற ஹேசல்வுட் (9 விக்.,), தீபக் சகார் (13), பிராவோ (13) இன்றும் சிறப்பாக செயல்பட வேண்டும். சுழலில் ஜடேஜா (11), மொயீன் அலி (6) உதவலாம்.

திடீர் எழுச்சி

கோல்கட்டா அணி முதல் 7 போட்டியில் 2ல் மட்டும் வென்றது. இதன் பின் எமிரேட்சில் களமிறங்கிய 9 போட்டியில் 7ல் வெற்றி பெற்று, 2012, 2014க்குப் பின் மூன்றாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது. இரண்டு முறை கோப்பை வென்ற அனுபவம் உண்டு.

பேட்டிங்கில் சுப்மன் கில் (427), டில்லிக்கு எதிராக சிக்சர் அடித்து வெற்றிபெறச் செய்ய திரிபாதி (395), நிதிஷ் ராணா (383), துவக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் (320), தினேஷ் கார்த்திக் (214) கைகொடுக்கின்றனர். கேப்டன் மார்கன் (16 போட்டி, 129 ரன்) தொடர்ந்து ஏமாற்றுகிறார்.

'சுழல்' பலம்

பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி (18 விக்.,), சுனில் நரைன் (14), சாகிப் அல் ஹசன் (4) என மூவரும் சுழற்பந்து வீச்சில் துல்லியமாக செயல்படுகின்றனர். வேகத்தில் ஷிவம் மாவி (10), பெர்குசன் (13) அசத்துகின்றனர்.

இது கடைசியா

கடந்த 2008 ஐ.பி.எல்., தொடர் துவங்கியது முதல் சென்னை அணி கேப்டனாக உள்ளார் தோனி. இத்தொடரில் மூன்று முறை (2010, 2011, 2018), சாம்பியன்ஸ் டிராபியில் (2010, 2014) இரு முறை என சென்னை அணிக்காக இதுவரை 5 கோப்பை வென்று தந்துள்ளார்.

* தற்போது 41 வயதை எட்டிய இவர் அடுத்த சீசனில் சென்னை அணியில் இருந்தாலும், களமிறங்கி விளையாடுவது சந்தேகம் தான். இதனால் இன்றைய பைனல் சென்னை அணி வீரராக தோனிக்கு கடைசியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

அனுபவம் பலம்

சென்னை அணியின் தோனி 41, பிராவோ 38, டுபிளசி 37, அம்பதி ராயுடு 36, உத்தப்பா 35, மொயீன் அலி 34 என பெரும்பாலான வீரர்கள் வயதானவர்கள் தான். 'டாடிஸ் ஆர்மி' என சொல்வதுண்டு. இருப்பினும் இவர்களது அனுபவம் கோப்பை வெல்ல கைகொடுக்கலாம்.



இரு மடங்கு வெற்றி

சென்னை, கோல்கட்டா அணிகள் 26 போட்டிகளில் மோதின. இதில் சென்னை அணி 17ல் அதாவது இருமடங்கு போட்டிகளில் வெற்றி பெற்றது. கோல்கட்டா 9ல் வென்றது.

* இரு அணிகள் கடைசியாக மோதிய 6 போட்டிகளில் சென்னை 5ல் வெற்றி பெற்றது. கோல்கட்டா 1ல் மட்டும் வென்றது.



பேட்டிங் சாதகமா

கோல்கட்டா அணிக்கு எதிராக சென்னை அணி முதலில் பேட்டிங் செய்த 7 போட்டிகளில் 6ல் வென்றது (1 தோல்வி). அதேபோல 'சேஸ்' செய்ய போட்டிகளில் 11ல் வென்றது. 8ல் தோற்றது.



'சேஸ்' பலம்

ஐ.பி.எல்., தொடரின் 14 வது சீசனில் சென்னை அணி, எதிரணிகளின் இலக்கைத் துரத்துவதில் மன்னனாக திகழ்கிறது. இதுவரை 'சேஸ்' செய்த 6 போட்டிகளிலும் வென்றது. இன்றும் 'சேஸ்' செய்யுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



ருதுராஜ் 'டாப்'

எமிரேட்சில் நடக்கும் இரண்டாவது கட்ட ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணியின் ருதுராஜ், 8 போட்டிகளில் அதிகபட்சம் 407 ரன் எடுத்துள்ளார். கோல்கட்டா வீரர் வெங்கடேஷ் ஐயர் (320) இரண்டாவது இடத்தில் உள்ளார். லோகேஷ் ராகுல் (295, பஞ்சாப்), சுப்மன் கில் (295, கோல்கட்டா), மேக்ஸ்வெல் (290, பெங்களூரு) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.



தமிழர்கள் எங்கே

ஐ.பி.எல்., பைனலில் பங்கேற்கும் சென்னை அணியில் ஒரு தமிழக வீரர்கள் கூட இல்லை. கோல்கட்டா அணியில் தினேஷ் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் என மூன்று தமிழர்கள் உள்ளனர். இவர்கள் அணியின் தவிர்க்க முடியாத வீரர்களாக திகழ்கின்றனர். இதனால் இன்று யாருக்கு தங்களது ஆதரவை தருவது என தமிழக ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.



அந்த 12 ஓவர்...

கோல்கட்டா அணி சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி (எக்கானமி ரேட்: 6.40), சுனில் நரைன் (6.44), சாகிப் அல் ஹசன் (6.64). இவர்கள் மூவரும் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றனர்.

'பிளே ஆப்' சுற்றில் 'எலிமினேட்டர்' போட்டியில் இவர்கள் இணைந்து வீசிய 12 ஓவரில் எதிரணிக்கு 65 ரன் தான் விட்டுக் கொடுத்தனர். இதில் 4 விக்கெட் சாய்த்தனர். அடுத்து தகுதிச்சுற்று 2ல் 12 ஓவரில் 81 ரன் மட்டும் (2 விக்.,) கொடுத்தனர்.

இன்று இந்த மூவர் கூட்டணி வீசும் 12 ஓவரை, சென்னை பேட்டர்கள் எப்படி சமாளிக்கப் போகின்றனர் என்பதைப் பொறுத்து முடிவு அமையும்.



துபாய் எப்படி

துபாய் சர்வதேச மைதானத்தில் இந்த சீசனில் 12 ஐ.பி.எல்., போட்டிகள் நடந்தன. இதில் கடைசியாக நடந்த 8 போட்டிகள் உட்பட 9 போட்டிகளில் 'சேஸ்' செய்த அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த அணி 3ல் தான் வென்றது. இதனால் இன்று 'டாஸ்' வெல்லும் அணி 'பீல்டிங்' செய்யும் என நம்பலாம்.



ரூ. 12 கோடி

பைனலில் சாதித்து இன்று கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 12 கோடி பரிசாக கிடைக்கும். தோற்கும் அணி ரூ. 6 கோடி பெறும்.

* 'பிளே ஆப்' சுற்றுடன் வெளியேறிய பெங்களூரு, டில்லி அணிக்கு தலா ரூ. 3 கோடி வழங்கப்படும்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...
ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம்

ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம்

அக்டோபர் 13,2021 புதுடில்லி: ஐ.பி.எல்., புதிய அணிகளுக்கான ஏல விண்ணப்பத்தை பெறுவதற்கு வரும் அக். 20 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ...