Dinamalar

சீறிய சென்னை ‘சிங்கங்கள்’: கோஹ்லி அணி ஏமாற்றம் ,  
 

சீறிய சென்னை ‘சிங்கங்கள்’: கோஹ்லி அணி ஏமாற்றம்

சார்ஜா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சிங்கம் போல சீறிய சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, தேவ்தத் படிக்கல் விளாசல் வீணானது. எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. பாலைவன மணல் புயல் காரணமாக போட்டி துவங்குவதில் தாமதமானது. சென்னை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. பெங்களூரு அணியில் சச்சின் பேபி, கைல் ஜேமிசன் நீக்கப்பட்டு நவ்தீப் சைனி, டிம் டேவிட் (அறிமுகம்) சேர்க்கப்பட்டனர். 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.



சூப்பர் துவக்கம்: பெங்களூரு அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி, தேவ்தத் படிக்கல் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. தீபக் சகார் வீசிய முதல் ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசினார் கோஹ்லி. இந்த ஓவரில் படிக்கல், தன்பங்கிற்கு ஒரு பவுண்டரி அடிக்க 13 ரன் கிடைத்தன. சகார் வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி உட்பட 10 ரன் எடுக்கப்பட்டது. ஹேசல்வுட் பந்தில் படிக்கல், ஷர்துல் தாகூர் பந்தில் கோஹ்லி தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டனர். 'பவர்-பிளே' ஓவரின் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன் எடுத்திருந்தது.



இரு அரைசதம்: ஜடேஜா பந்தை சிக்சருக்கு அனுப்பிய படிக்கல், தீபக் சகார் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் அசத்திய கோஹ்லி, ஜடேஜா பந்தில் பவுண்டரி அடித்து ஐ.பி.எல்., அரங்கில் தனது 41வது அரைசதமடித்தார். இவர்களை பிரிக்க சென்னை பவுலர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் 14வது ஓவரை வீசிய டுவைன் பிராவோ திருப்பம் தந்தார். இந்த ஓவரின் 2வது பந்தில் கோஹ்லி (53) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய படிக்கல், ஹேசல்வுட் பந்தில் சிக்சர் விளாசினார்.



ஷர்துல் தாகூர் வீசிய 17வது ஓவரின் கடைசி இரண்டு பந்தில் டிவிலியர்ஸ் (12), படிக்கல் (70 ரன், 3 சிக்சர், 5 பவுண்டரி) அவுட்டாகினர். அடுத்து வந்த மேக்ஸ்வெல், டுவைன் பிராவோ பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். அறிமுக வீரர் டிம் டேவிட் (1), தீபக் சகார் 'வேகத்தில்' சரணடைந்தார். பிராவோ வீசிய கடைசி ஓவரில் மேக்ஸ்வெல் (11), ஹர்ஷல் படேல் (3) அவுட்டாகினர்.



பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்தது. ஹசரங்கா (1) அவுட்டாகாமல் இருந்தார். சென்னை சார்பில் டுவைன் பிராவோ 3, ஷர்துல் தாகூர் 2 விக்கெட் கைப்பற்றினர்.



நல்ல துவக்கம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், டுபிளசி ஜோடி நல்ல துவக்கம் தந்தது. சிராஜ், ஹசரங்கா, ஹர்ஷல் படேல் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார் ருதுராஜ். மறுமுனையில் அசத்திய டுபிளசி, நவ்தீப் சைனி பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்த போது யுவேந்திர சகால் 'சுழலில்' ருதுராஜ் (38) சிக்கினார். மேக்ஸ்வெல் பந்தில் டுபிளசி (31) அவுட்டானார்.



பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை துவக்கிய அம்பதி ராயுடு, மேக்ஸ்வெல் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த மொயீன் அலி, சகால், ஹசரங்கா பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்தார். ஹர்ஷல் படேல் பந்தில் மொயீன் (23), ராயுடு (32) அவுட்டாகினர். ஹசரங்கா வீசிய 17வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் ரெய்னா. சிராஜ் வீசிய 18வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த கேப்டன் தோனி வெற்றிக்கு வித்திட்டார்.



சென்னை அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 157 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரெய்னா (17), கேப்டன் தோனி (11) அவுட்டாகாமல் இருந்தனர்.





111 ரன்

கோஹ்லி, தேவ்தத் படிக்கல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 111 ரன் சேர்த்தது. இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் 8 ஆண்டுகளுக்கு பின், சென்னைக்கு எதிராக பெங்களூரு துவக்க ஜோடி 50 அல்லது அதற்கு மேல் ரன் எடுத்தது. கடைசியாக 2013ல் பெங்களூருவில் நடந்த போட்டியில் கோஹ்லி, கெய்ல் ஜோடி 67 ரன் சேர்த்திருந்தது.

* தவிர இந்த ஜோடி 2வது முறையாக 100 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது. இதற்கு முன், இந்த சீசனில் ராஜஸ்தானுக்கு எதிராக 181 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தது.

* இந்த ஜோடி, ஐ.பி.எல்., அரங்கில் சென்னைக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் சேர்த்த பெங்களூரு ஜோடியானது. இதற்கு முன், 2வது விக்கெட்டுக்கு கெய்ல்-கோஹ்லி (109 ரன்), குயின்டன்-டிவிலியர்ஸ் (103) ஜோடி அதிக ரன் சேர்த்திருந்தது.



948 ரன்

அபாரமாக ஆடிய கோஹ்லி, சென்னைக்கு எதிராக விளையாடிய 28 போட்டியில், 9 அரைசதம் உட்பட 948 ரன் எடுத்துள்ளார். இதன்மூலம் இவர், 'டுவென்டி-20' அரங்கில் எந்த ஒரு அணிக்கு எதிராக அதிக ரன் குவித்தார். தவிர இவர், டில்லி (933 ரன்), கோல்கட்டா (735), மும்பை (728), ஆஸ்திரேலியா (718) அணிகளுக்கு எதிராக அதிக ரன் எடுத்துள்ளார்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

யாருக்கு கோப்பை...  * ராஜஸ்தான்–குஜராத் பலப்பரீட்சை

யாருக்கு கோப்பை... * ராஜஸ்தான்–குஜராத் பலப்பரீட்சை

மே 28,2022 ஆமதாபாத்: 'டி-20' தொடரின் பைனலில் இன்று ராஜஸ்தான், குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் குஜராத் சாதித்தால், முதல் கோப்பை வெல்லலாம். ராஜஸ்தான் எளிதில் ...
ஹர்மன்பிரீத் அணி ‘சாம்பியன்’: கடைசி ஓவரில் ‘திரில்’ வெற்றி

ஹர்மன்பிரீத் அணி ‘சாம்பியன்’: கடைசி ஓவரில் ‘திரில்’ வெற்றி

மே 28,2022 புனே: பெண்களுக்கான 'டி-20' சேலஞ்ச் தொடரில் ஹர்மன்பிரீத் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணி கோப்பை வென்றது. பைனலில் 4 ரன் வித்தியாசத்தில் வெலாசிட்டி அணியை கடைசி ஓவரில் ...
பைனலுக்கு முன்னேறியது ராஜஸ்தான்: பட்லர் கலக்கல் சதம்

பைனலுக்கு முன்னேறியது ராஜஸ்தான்: பட்லர் கலக்கல் சதம்

மே 27,2022 ஆமதாபாத்: 'டி-20' கிரிக்கெட் லீக் தகுதிச் சுற்று-2ல் பட்லரின் கலக்கல் சதம் கைகொடுக்க ராஜஸ்தான் அணி பைனலுக்கு மின்னலாக முன்னேறியது. இதில் குஜராத்துடன் மோதுகின்றது. ...