ஐ.பி.எல்., அணி விலை ரூ. 4000 கோடி ,

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் இணையவுள்ள ஒரு அணியின் மதிப்பு ரூ. 3000 முதல் ரூ. 4000 கோடி வரை இருக்கலாம்.
ஐ.பி.எல்., தொடரில் சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, பஞ்சாப், ஐதராபாத், ராஜஸ்தான் என 8 அணிகள் பங்கேற்கின்றன. 2022 முதல் அணிகள் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. புதிய அணிக்கான அடிப்படை ஏலத் தொகை ரூ.2000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆமதாபாத்தில் உலகின் பெரிய மோடி மைதானம், லக்னோவில் பிரமாண்ட எகானா மைதானம் இருப்பதால், இவ்விரு நகரங்கள் பெயரில் புதிய அணிகள் வர அதிக வாய்ப்புள்ளன. இதற்கான ஏலம் வரும் அக். 25ல் துபாயில் நடக்கவுள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் அணி சக உரிசையாளர் நெஸ் வாடியா கூறியது:
புதிய அணிகளுக்கான அடிப்படை ஏலத் தொகை தான் ரூ. 2000 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனது அனுபவத்தை பொறுத்தவரையில் இத்தொகை மிகக் குறைவு. ஏலத்தின் போது இதன் மதிப்பு குறைந்தபட்சம் 50 முதல் 100 சதவீதம் வரை உயர்ந்தால் ஆச்சரியப்படப் போவதில்லை.
குறைந்தபட்சம் ஒரு அணியின் மதிப்பு எப்படியும் ரூ. 3000 முதல் ரூ. 4000 கோடி வரை செல்லலாம். ஏனெனில் ஒவ்வொருவரும் ஐ.பி.எல்., தொடரின் ஏதாவது ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் திறமையானவர்கள் மட்டுமே இடம் பெற முடியும். ஐ.பி.எல்., என்பது இந்திய கிரிக்கெட் போர்டை, நகை போல அலங்கரிக்கும் மகுடமாக திகழ்கிறது.
புதிய அணிகள் வருகையில் ஒவ்வொரு அணிகளின் மதிப்பு அதிகரிக்கும். இனிமேல் அடுத்த 5 அல்லது 7 ஆண்டுகளில் புதிய அணிகள் சேர்க்கப்பட வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.