சகாருக்கு தோனி ‘ஐடியா’ ,

துபாய்: தோனி கொடுத்த 'ஐடியா' காரணமாக, தோழியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார் சகார்.
ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. இதில் சென்னை அணி தோல்வியடைந்தது. போட்டி முடிந்ததும் காலரியில் அமர்ந்திருந்த தனது நீண்ட நாள் தோழி ஜெயா பரத்வாஜிடம் சென்ற சென்னை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சகார், திடீரென முழங்காலிட்டு காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு, மோதிரம் அணிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட ஜெயா, மற்றொரு மோதிரத்தை சகாருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
தோனி 'ஐடியா'
உண்மையில் சென்னை அணியின் 'பிளே ஆப்' போட்டி முடிவுக்கு பிறகு தான் காதலை வெளிப்படுத்த இருந்தார் சகார்.
இதுகுறித்து கேப்டன் தோனியிடம் ஆலோசித்துள்ளார். அவர், 'டில்லி போட்டிக்குப் பின் மோதிரம் அணிய 'அட்வைஸ்' செய்துள்ளார். ஆனால் அதில் சென்னை அணி தோற்க, முடிவை மாற்றினார் சகார். பின் பஞ்சாப் அணியிடமும் தோற்றாலும், வேறு வழியில்லாத நிலையில், தோழியிடம் காதலை வெளிப்படுத்தினார் சகார்.