மீளுமா நம்ம சென்னை * தொடர் தோல்வியால் ஏமாற்றம் ,

மும்பை: 'டி-20' தொடரில் முதன் முறையாக பங்கேற்ற முதல் மூன்று போட்டியிலும் தோற்ற சோகத்தில் உள்ளது சென்னை.
மும்பையில் நடக்கும் 'டி-20' தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கியுள்ளது சென்னை. ரூ. 14 கோடிக்கு வாங்கப்பட்ட முன்னணி 'ஆல் ரவுண்டர்' தீபக் சகார் காயத்தால் விலகியது, டுபிளசியை ஏலத்தில் கோட்டை விட்டது, ஷர்துல் தாகூர், லுங்கிடி, ஹேசல்வுட் என முன்னணி பவுலர்கள் இல்லாதது என துவக்கத்திலேயே சென்னை தள்ளாடியது.
தொடர் துவங்கும் இருநாள் முன்பு, தோனி விலகிக்கொள்ள ஜடேஜா கேப்டனாக அறிவிக்கப்பட்டதும், அணியின் மன உறுதியை பாதித்து விட்டது போல. முதல் இரு போட்டியில் கோல்கட்டா, லக்னோ, அடுத்து பஞ்சாப்பிடம் வீழ்ந்தது. சென்னை அணி தொடரின் முதல் மூன்று போட்டியில் தோற்பது இது தான் முதன் முறை.
தவிர 2014, 2018ல் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய மும்பை அணி, முதல் மூன்று போட்டியில் தோற்றது. கடைசியில் லீக் சுற்றுடன் வெளியேறி கோப்பை வாய்ப்பை இழந்தது. இதுபோல சென்னை அணிக்கும் ஏற்படுமோ என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இதுகுறித்து சென்னை அணி கேப்டன் ஜடேஜா கூறியது:
சென்னை அணி கேப்டனாக இருப்பதால் எவ்வித நெருக்கடியும் இல்லை. கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளது குறித்து சில மாதங்களுக்கு முன்பே தோனி என்னிடம் தெரிவித்தார். இதனால் மனதளவில் கேப்டனாக இருப்பதற்கு தயாராகவே இருந்தேன்.
லக்னோ அணிக்கு எதிராக 210 ரன் எடுத்திருந்தோம். இதனால் பவுண்டரி எல்லைக்கு அருகில் பீல்டிங் செய்ய தேவை ஏற்பட்டது. ஏனெனில் அதிக 'கேட்ச்' வாய்ப்புகள் வரும் என்பதால், சிறந்த பீல்டர் அந்த இடத்தில் வேண்டும் என்பதால் நான் நின்றேன்.
இதனால் தான் பவுலர்களுக்கு தேவையான 'டிப்ஸ்' தர முடியவில்லை. ஆனால் தோனியின் அனுபவம், வழிகாட்டி எங்களுக்கு கிடைத்தது அதிர்ஷ்டம். சரியான நேரத்தில் 'அட்வைஸ்' தருகிறார் என்பதால் வேறு இடங்களில் இருந்து எவ்வித ஆலோசனையும் தேவையில்லை.
கடந்த போட்டியில் துவக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். முதல் பந்தில் இருந்து வெற்றிக்கான வழியில் செல்லவில்லை. இதில் இருந்து வலிமையான முறையில் சிறப்பாக எப்படி மீண்டு வருவது என்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.