சூப்பர் சுழல் புயல் சகால்... * ஹாட்ரிக் சாதனையால் உற்சாகம் ,

மும்பை: மின்னல் வேக சதம், இரு அரைசதம், 100 ரன் 'பார்ட்னர்ஷிப்', 'ஹாட்ரிக்' சாதனை உட்பட 5 விக்கெட், 427 ரன்கள் என ஒரே போட்டியில் பல சாகசங்கள் அரங்கேறின. இதில் 'சுழல்' புயலாக மிரட்டிய சகால், வெற்றி நாயகனாக ஜொலித்தார்.
மும்பையில் நடந்த 'டி-20' கிரிக்கெட் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி(217/5), கோல்கட்டாவை(210) வீழ்த்தியது. இதில் ராஜஸ்தானின் ஜோஸ் பட்லர் 61 பந்தில் 103 ரன் விளாசினார். கோல்கட்டாவின் பின்ச்(58), கேப்டன் ஸ்ரேயாஸ்(85) சேர்ந்து 107 ரன் சேர்த்தனர். இந்த நேரத்தில் 17வது ஓவரை வீசிய ராஜஸ்தானின் சகால், திருப்புமுனை ஏற்படுத்தினார். 'கூக்ளியாக' வீசிய முதல் பந்தில் வெங்கடேஷ் ஐயரை வெளியேற்றினார். 4,5,6வது பந்தில் ஸ்ரேயாஸ், ஷிவம் மாவி, கம்மின்சை அடுத்தடுத்து அவுட்டாக்கி, இத்தொடரின் முதல் 'ஹாட்ரிக்' சாதனையை படைத்தார்.
இந்த உற்சாகத்தில் கால் மீது, வலது கையை வைத்து மைதானத்தில் வித்தியாசமாக அமர்ந்தார். இதற்கு சிறிய பின்னணி உண்டு. இலங்கைக்கு எதிரான உலக கோப்பை போட்டியின்(2019) போது இவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அப்போது மைதானத்திற்கு வெளியே உட்கார்ந்த இவரை கேலி செய்து, நிறைய 'மீம்ஸ்'கள் வெளியாகின. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மீணடும் அதே 'ஸ்டைலில்' அமர்ந்தார். 4 ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தி, ஆட்ட நாயகன் விருது வென்றார்.
சகால் கூறுகையில்,''போட்டியின் போக்கை எங்கள் பக்கம் மாற்ற, 17வது ஓவரில் கண்டிப்பாக விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற மனநிலையில் இறங்கினேன். நினைத்தது போல 'ஹாட்ரிக்' உட்பட 4 விக்கெட் வீழ்த்தியதில் மகிழ்ச்சி. 2019, உலக கோப்பை போட்டியின் போது என்னை கேலி செய்த 'மீம்ஸ்'கள் பிரபலமாகின. இந்த சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் மைதானத்தில் அமர்ந்தேன்,''என்றார்.
ராஜஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளர் மலிங்கா கூறுகையில்,''ஒரே ஓவரில் மாற்றத்தை ஏற்படுத்தினார் சகால். 'லெக் ஸ்பின்னர்களால்' வெற்றி தேடித் தர முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார்,''என்றார்.