‘தல’ தோனி போல வருமா... * தொடரும்‘ பினிஷிங்’ சாகசம் ,

மும்பை: ஐ.பி.எல்., அரங்கில் கடைசி ஓவரில் தோனி பேட்டிங் செய்த 29 போட்டிகளில் 28ல் வெற்றி தேடித் தந்துள்ளார். சிறந்த 'பினிஷராக' தொடர்ந்து அசத்துகிறார்.
சென்னை, மும்பை அணிகள் மோதிய 'டி-20' கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணியின் (155/7) இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு கடைசி 4 பந்தில் 16 ரன் தேவைப்பட்டன.
களத்தில் இருந்த தோனி, 6, 4, 2, 4 ரன் என விளாச, சென்னை அணி (156/7) 'திரில்' வெற்றி பெற்றது.
இதையடுத்து கடைசி ஓவரில் 15 ரன்னுக்கும் மேல் மூன்று முறை எடுத்து, அணிக்கு வெற்றி பெற்றுத் தந்த உலகின் முதல் வீரர் என சாதனை படைத்தார்.
தொடரும் ஜாலம்
தோனிக்கு 40 வயதான நிலையில், கேப்டன் பதவியை ஜடேஜாவிடம் கொடுத்து விட்டார். இருப்பினும் பேட்டிங்கில் தொடர்ந்து மிரட்டுகிறார். நடப்பு 'டி-20' தொடரின் முதல் போட்டியில் 50 ரன் குவித்தார்.
மும்பைக்கு எதிராக 13 பந்தில் 28 ரன் எடுத்து, வயதானாலும் பேட்டிங் திறனும், 'பினிஷிங்' திறன் போகவில்லை என நிரூபித்தார். ஐ.பி.எல்., அரங்கில் கடைசி ஓவரில் தோனி பேட்டிங் செய்த 29 போட்டிகளில் 28ல் வெற்றி பெற்றுத் தந்துள்ளார்.
சிக்சர் மழை
ஐ.பி.எல்., அரங்கில் 'சேஸ்' செய்த போட்டிகளில் 20 வது ஓவரில் அதிக சிக்சர் அடித்த வீரர் தோனி தான். இவர் 24 சிக்சர் அடித்துள்ளார். அடுத்த இடத்தில் உள்ள போலார்டு 9 சிக்சர் விளாசினார். 16 முதல் 20 வரையிலான ஓவர்களில் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் தோனி (168) முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் போலார்டு (143) உள்ளார்.
'டி-20' அரங்கில் முதல், 2வது இன்னிங்சின் 20 வது ஓவரில் மட்டும் தோனி ஒட்டுமொத்தமாக 51 சிக்சர், 48 பவுண்டரி விளாசியுள்ளார்.
8
சென்னை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது 8 வது முறையாக நடந்தது. இதுபோல 6 முறை வென்ற மும்பை அணி அடுத்த இடத்தில் உள்ளது.
39.88
ஐ.பி.எல்., அரங்கில் அதிக சராசரி உள்ள வீரர்களில் தோனி 'முதல்வன்' (39.88) ஆக திகழ்கிறார். அடுத்தடுத்த இடங்களில் கோஹ்லி (36.79), ரிஷாப் பன்ட் (35.22), சச்சின் (34.83) உள்ளனர்.
121 பந்து... 323 ரன்
ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் தோனி, கடைசி ஓவர்களில் (20 வது) மொத்தம் 121 பந்துகளை எதிர்கொண்டு, 323 ரன்கள் குவித்துள்ளார். இதில் 26 பவுண்டரி, 26 சிக்சர் விளாசியுள்ளார். 'ஸ்டிரைக் ரேட்' 266.94 ஆக உள்ளது.
தவறு செய்த ரோகித்
வேகப்பந்து வீச்சாளர் உனத்கட். 2017ல் புனே அணியில் இருந்த போது கேப்டன் தோனி 'அட்வைஸ்' காரணமாக, உனத்கட் (12ல் 24 விக்.,) சிறப்பாக செயல்பட்டார். 2018ல் ரூ. 11. 5 கோடிக்கு உனத்கட்டினை (15ல் 11 விக்.,) வாங்கி ஏமாந்தது ராஜஸ்தான்.
தவிர உனத்கட் பந்துவீச்சு குறித்து தோனிக்கு நன்கு தெரியும். இவரது 43 பந்தை எதிர்கொண்ட தோனி, 105 ரன் விளாசியுள்ளார். 2019 தொடரில் உனத்கட் வீசிய கடைசி ஓவரில் தோனி மூன்று சிக்சர் விளாசினார்.
இம்முறை மும்பை அணிக்கு வந்த உனத்கட்டிடம், ரோகித் கடைசி ஓவரை கொடுத்து தவறு செய்தார். வாய்ப்பை பயன்படுத்திய தோனி மிரட்டி விட்டார்.
ஜடேஜா 'மரியாதை'
மும்பைக்கு எதிராக வெற்றி பெற்றதும் பெவிலியன் திரும்பினார் தோனி. அப்போது வந்த கேப்டன் ஜடேஜா, தோனி முன்பு தலைகுனிந்து, மரியாதை செலுத்தினார்.