‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை ,

மும்பை: 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற சென்னை உட்பட 9 அணிகள் போட்டியிடுகின்றன.
இந்தியாவில் 15வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' சென்னை உட்பட 10 அணிகள் குரூப் 'ஏ', குரூப் 'ஏ' என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 74 போட்டிகள் நடக்கின்றன.
* இதன் படி ஒவ்வொரு பிரிவிலும் உள்ள 5 அணிகள், தங்களுக்குள் தலா 2 முறை மோதும் (8 போட்டி).
* 'ஏ' குரூப்பில் உள்ள அணிகள், 'பி' குரூப்பில் உள்ள அணிகளுடன் தலா 1 முறை மோதும் (தலா 5 போட்டி).
* தவிர, ஒவ்வொரு பிரிவிலும் எதிரெதிராக உள்ள அணியுடன் மட்டும் கூடுதலாக ஒரு போட்டியில் பங்கேற்கும்.
சென்னை அணி, தனது பிரிவில் 8 போட்டி, 'ஏ' குரூப்பில் மும்பை அணியுடன் 2, மற்ற அணிகளுடன் தலா 1 முறை என, மொத்தம் 14 போட்டிகளில் மோதும்.
இதுவரை 9 போட்டியில் 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளி பெற்ற சென்னை, பட்டியலில் 9வதாக உள்ளது. அடுத்து, தனது பிரிவிலுள்ள பெங்களூரு (நாளை), குஜராத் (மே 15), 'ஏ' பிரிவில் டில்லி (மே 8), மும்பை (மே 12), ராஜஸ்தான் (மே 20) அணிகளுடன் மோதவுள்ளது.
இந்த 5 போட்டியிலும் வென்றால் 16 புள்ளிகள் பெறலாம். பிறகு 'ரன் ரேட்' அடிப்படையில் 'பிளே ஆப்' செல்ல முயற்சிக்கலாம். ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால் கூட, லீக் சுற்றுடன் வெளியேற நேரிடும்.
தவிர மீதமுள்ள 8 அணிகளுக்கும் 'பிளே ஆப்' செல்ல வாய்ப்புள்ளது. குஜராத்தை பொறுத்தவரையில் (9ல் 8 வெற்றி 16 புள்ளி) ஏறக்குறைய அடுத்த சுற்றை உறுதி செய்து விட்டது. லக்னோ (10ல் 7 வெற்றி, 14 புள்ளி), மீதமுள்ள 4 போட்டியில் ஏதாவது ஒன்றில் வென்றால் போதும்.
ராஜஸ்தான் (9ல் 6 வெற்றி, 12 புள்ளி) 5ல் 2 வெற்றி, ஐதராபாத் (9ல் 5 வெற்றி, 10 புள்ளி), பெங்களூரு (10ல் 5 வெற்றி, 10 புள்ளி) அணிகள் மீதமுள்ள போட்டிகளில் குறைந்தது 3ல் வென்றாக வேண்டும்.
இதுபோல 9 போட்டிகளில் தலா 4 வெற்றி பெற்ற டில்லி (8 புள்ளி), பஞ்சாப் (8) அணிகள் மீதமுள்ள தங்களது 5 போட்டியில் தலா 4ல் வெல்ல வேண்டும். கோல்கட்டா அணி (9ல் 3 வெற்றி) மீதமுள்ள 5 போட்டியிலும் வென்றால் 'பிளே ஆப்' செல்லலாம். தொடர்ந்து 8 போட்டிகளில் தோற்ற மும்பை அணி கோப்பை வாய்ப்பை இழந்தது.
குரூப் 'ஏ' குரூப் 'பி'
மும்பை சென்னை
கோல்கட்டா ஐதராபாத்
ராஜஸ்தான் பெங்களூரு
டில்லி பஞ்சாப்
லக்னோ குஜராத்