சென்னைக்கு வாய்ப்பு எப்படி ,

மும்பை: 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இன்னும் உள்ளது.
இந்தியாவில், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசன் நடக்கிறது. இதுவரை நடந்த (மே 8) போட்டிகளின் முடிவில், 'ஐந்து முறை சாம்பியன்' மும்பை அணி 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்தது. முதலிரண்டு இடத்தில் உள்ள லக்னோ, குஜராத் அணிகளுக்கு 'டாப்-4' இடம் உறுதி. அடுத்த இரு இடங்களில் தலா 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள், தங்களுக்கு மீதமுள்ள போட்டிகளில் ஒன்றில் வென்றால் போதுமானது.
சிக்கலில் சென்னை: 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய தோனி தலைமையிலான சென்னை அணி, இதுவரை விளையாடிய 11 போட்டியில் 4ல் வெற்றி பெற்று, 8 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற முதலில், மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் (எதிர்: மும்பை-மே 12, குஜராத்-மே 15, ராஜஸ்தான்-மே 20) நல்ல 'ரன் ரேட்டில்' வெற்றி பெற வேண்டியது அவசியம். அதன்பின் மற்ற போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
அடுத்து வரும் போட்டிகளின் முடிவு பின்வருமாறு அமைந்தால் சென்னை அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறலாம். ராஜஸ்தான் (எதிர்: டில்லி, மே 11), பஞ்சாப் (எதிர்: பெங்களூரு, மே 13), கோல்கட்டா (எதிர்: ஐதராபாத், மே 14), டில்லி (எதிர்: பஞ்சாப், மே 16), மும்பை (எதிர்: ஐதராபாத், மே 17), குஜராத் (எதிர்: பெங்களூரு, மே 19), மும்பை (எதிர்: டில்லி, மே 21), ஐதராபாத் (எதிர்: பஞ்சாப், மே 22) அணிகள் வெற்றி பெற வேண்டும்.
இப்படி நடந்தால் சென்னை, பெங்களூரு அணிகள் தலா 14 புள்ளிகளுடன் 4வது இடத்தை பகிர்ந்து கொள்ளும். நல்ல 'ரன் ரேட்' இருந்தால், சென்னை அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறலாம்.