இந்த வரலாறு தோன்றிய வரலாறு!

ஐம்பதுகளில், நானும், என்போன்ற பல இளைஞர்களும், எழுத்தாளர் கள், கவிஞர்கள், பத்திரிகை ஆசிரியர்களது ரசிகர்களாகத்தான் இருந்து வந்தோம். கலைஞர்கள் கூட அப்படித்தான். அக்காலத்தில் திரைப்படங்களில் கொடி கட்டிப் பறந்த எம்.கே.டி., பாகவதரும் இதற்கு விதிவிலக்கல்ல. பத்திரிகை ஆசிரியர்கள் தங்களைப் பற்றி ஒரு வரி பாராட்டி எழுத மாட்டார்களா என ஏங்கிய காலமது.


அந்தக் காலத்தில் பத்திரிகைகளுக்கு இன்று போல ஊர் ஊருக்கு விற்பனையாளர்கள் கிடையாது. மாத, வார இதழ்கள் எல்லாம் தபாலில்தான் வரும். அவை வரும் கிழமைகளில், நாங்கள் தபாலா பீசுக்கு முன்னதாகவே போய் இதழ்களை வாங்கி, அங்கேயே குப்பையும், இடிபாடுகளும் நிறைந்த படிக்கட்டுகளில் உட்கார்ந்து படித்துவிட்டுத் தான் வீட்டிற்கு வருவோம். நானும் இதற்கு விதிவிலக்கல்ல.


பாரதி என்ற கவிஞன் எங்கள் ஊரில் பிறந்தவன். அப்போது கவிஞன் என்றால் தெரியாது. புலவன் என்றுதான் கூற வேண்டும். பாரதியின் நினைவாக ஒரு வாசகசாலை ஊரில் உருவாக்க இளைஞர் களான நாங்கள் ஆசைப்பட்டோம். இதற்காக பிரபலமான கல்கி ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியை ஊருக்கு அழைத்திருந்தோம். அவரது வருகையும், நினைவு மண்டபம் எழுந்ததும் தனியான பெரிய கதை. பாரதி மண்டபம் எழுந்ததும், ஏராளமான எழுத்தாளர் கள், பாரதிக்கு அஞ்சலி செய்ய ஊருக்கு வந்த வண்ணம் இருந்தனர். நாங்கள் சிலர் அவர்கள் பின்னால் சுற்றினோம். அவர்களது சம்பா ஷணைகளை ஆவலுடன் கேட்டோம். எழுத்தாளர்கள் மீது அசாதாரணமான காதல் கொண்டோம்.
பாரதியாரை, கவிஞர், தேசிய கவிஞர், மகாகவி என்றெல்லாம் அழைப்பர்; ஆனால், அவன் ஒரு பத்திரிகையாளன் என்பதே என்னை கவர்ந்தது.


நானும் பத்திரிகையாளனாக வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். அன்றைக்கு பத்திரிகையாளன் என்றால் எங்களைப் போன்ற சிலரைத் தவிர யாருமே மதிப்பது இல்லை. பத்திரிகை ஒரு தொழிலாக இல்லாத காலம் அது. எழுதப் படிக்கத் தெரியாத பெரும் கூட்டம் எங்கே காசு கொடுத்து பத்திரிகை வாங்கப் போகிறது? பத்திரிகைகளில் கொடுக்கப்பட்ட சம்பளம் வெளியில் சொல்ல முடியாதது. பத்திரிகை நடத்துபவர்களுக்கு ஒருநாளைத் தள்ளுவது ஒரு யுகத்தைத் தள்ளுவது போலாகும். பத்திரிகைதான் என் லட்சியம் என்று துணிந்த பின், எனக்கு என் உடன்பிறந்த சகோதரியே தன் பெண்ணை மணம் செய்து தர சம்மதிக்கவில்லை. அந்தக்காலம் எப்படி என்பதை சுட்டிக் காட்டவே இந்த சுயபுராணம்.


திருவனந்தபுரத்தில் இருந்து, ‘தினமலர்’ பத்திரிகை திருநெல்வேலிக்கு வந்த நேரம் அது. அப்போது நான் ஒரு பிரபலமான பத்திரிகை யின் நிருபராக இருந்து வந்தேன். எனக்கு, ‘தினமலர்’ பிடித்தது. அதன் கண்ணோட்டம், செய்திகள், தலைப்புகள் என்னைக் கவர்ந்தது. ஏன், ‘தினமலர்’ பத்திரிகைக்கும் நிருபராக இருக்கக் கூடாது என எண்ணி திருநெல்வேலி சென்றேன். ஆனால், எனக்கு முன்னதாகவே ஒரு செல்வாக்கான பத்திரிகை நிருபர், ‘தினமலர்’ பத்திரிகை நிருபர் பதவியை தனக்கே வாங்கி வைத்து இருந்தார் என்பது அங்கு சென்ற பின்னர் தெரிந்தது.இருந்தாலும், றிபரவாயில்லை, நானும் எழுதுகிறேன். . . பிடிக்கிறதா பாருங்கள்றீ என, அப்போது மானேஜராக அங்கு இருந்த இளைஞரிடம் கூறி, செய்திகள் அனுப்பத் தொடங்கினேன். ஒரே வாரத்தில் நானே எட்டயபுரம் நிருபர் என டி.வி.ஆரே கையப்பம் செய்து உத்திரவு அனுப்பி இருந்தார்.


பின்னர் டி.வி.ஆரை அடிக்கடி சந்திக்கும் நிலை. பல, அவரது அழைப்பால் சென்றதாக இருக்கும். ‘அந்தக் கிராமத்துக்குப் போய் வா! இது ஒரு பிரச்னை நன்றாக விசாரித்து விரிவாக எழுது!’ இப்படிப் பல வழிகாட்டல்கள். ஒருவனிடம் திறமை ஒளிந்து கொண்டிருந்தால் அதைக் கண்டுபிடித்து சிறப்பாக வேலை வாங்கத் தெரிந்தவர் டி.வி.ஆர்., அப்போது என்னிடம் இருந்த ஒரே வாகனம் சைக்கிள்தான். ரோடே இல்லாத கிராமங்களில், காய்ந்து கிடக்கும் கண்மாய்களின் ஊடே, கருவமுள்களின் குத்தலுக்குத் தப்பித்து கிராமம் கிராமமாகச் சென்று அவைகளை சிறந்த சித்திரங்களாக்கி, ‘தினமலர்’ மூலம் படம் பிடித்து காட்டத் தொடங்கினோம்.


‘தினமலர்’ புதிய, புதிய வாசகர்களைப் பெற்றது; வளர்ந்தது. அத்துடன் அந்தக் கால அரசியல்வாதிகள், அதிகாரிகள், ‘தினமலர்’ சுட்டிக்காட்டும் பிரச்னைகளை படித்து, முடிந்த அளவு தீர்வுகளும் செய்து வந்தனர். ‘தினமலர்’ பத்திரிகையாளன் பெரிதும் மதிக்கப் பட்டான்.


என் சொந்த வாழ்க்கையில் ஒரு பேரிடி விழுந்தது 1970-71ல். பேனாவைத் தூக்கி எறிந்துவிட்டு, பித்துப்பிடித்தவன் போல் ஆனேன். இதைக் கேள்விப்பட்ட டி.வி.ஆர்., என்னை திருநெல்வேலிக்கு வரச்சொல்லி பேனாவை மீண்டும் கையில் கொடுத்து எழுதத் துபண்டினார். அன்று மட்டும் அவர்கள் அதைச்செய்யாதிருந்தால் எனக்கு எழுத்தாளன் என்ற முகவரியே இல்லாமல் போயிருக்கும்.


என்னை அழைத்த நேரம், திண்டுக்கல்லில் உபதேர்தல் வர இருந்தது. தி.மு.க.,விலிருந்து எம்.ஜி.ஆர்., பிரிந்து, அண்ணா தி.மு.க., வை உருவாக்கி, இந்தத் தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நேரம். திண்டுக்கல் தேர்தலுக்கு நானே விசேட நிருபர். என் சொந்த மன உளைச்சலையும் அது தீர்த்து புதிய மனிதனாக்கியது. ஏற்கனவே பத்திரிகையாளன் பாரதி மேல் காதல் கொண்ட நான், அதற்கான ஆதாரங்களை வெகு பாடுபட்டு சேர்த்து,பெரிய நுபல் எழுதி, அச்சுக்கு கொடுத்திருந்தேன். அப்போதே தமிழக பத்திரிகையாளர்களது வாழ்க்கை முழுவதும் தொகுக்கப்பட வேண்டு மென்ற ஆசை உதித்தது. ஒரு தனி நபர் செய்யக்கூடிய பணி அல்ல அது.


டி.வி.ஆர்., 1984ல் அமரரானார். அதற்கு மூன்றாண்டுகள் முடிந்த பின், டி.வி.ஆரது வாழ்க்கை வரலாற்றை எழுதலாமே என்ற ஆசை எழுந்தது. டி.வி.ஆரது வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் திரட்டுவதில் பல சிக்கல்கள் இருந்தன. டி.வி.ஆர்., நாட்குறிப்பு ஏதும் வைத்திருந்ததாகத் தெரிய வில்லை. அவரது குமாரர்கள் கல்லூரிகளில் படிக்க ஊரை விட்டுச் சென்றுவிட்டதால், டி.வி.ஆரது நடுவயது வாழ்க்கைப் பற்றி முழுமை யாக அவர்களால் கூற இயலவில்லை. திருநெல்வேலி வந்த பின்னர் அவரது வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன் உள்ள வாழ்க்கை எப்படி இருந்தது? தடயம் கிடைப்பது மிகக் கடினமாகவே இருந்தது.


நான் சோர்வடையவில்லை. தமிழில் வெளிவந்துள்ள வாழ்க்கைச் சரித நூல்கள் ஒன்று விடாமல் படித்தேன். தமிழ்த்தாத்தா உ.வே.சாமி நாதய்யர், ‘என் சரிதம்’ எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் அவரோ, தேதி வாரியாக எழுதி உள்ளார். நானோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டவனாக இருந்தேன்.


இந்த நிலையில் ‘கல்கி’ பற்றி சுந்தா எழுதி, 1976ல் வெளிவந்த, ‘பொன்னியின் புதல்வன்’ நுபலைப் படிக்க நேர்ந்தது. அதில், உலகில் வெளிவந்த வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் பலவற்றையும், அதன் ஆசிரியர்கள் கையாண்ட யுக்திகளையும், சுந்தாவும், ‘கல்கி’ ஆசிரியர் ராஜேந்திரனும் படித்து பார்த்த விவரங்கள் இருந்தன. அதில் ஒன்று, ‘பேர்ல் பக்கின்’ வாழ்க்கை வரலாறு. இது பேட்டி வடிவில் அமைந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்கு இப்போது புதிய வழி கிடைத்துவிட்டது. டி.வி.ஆரது பழைய நண்பர்கள் பலரைக் கண்டு, அவர்களிடம் பேட்டிகள் கேட்டு, நுபலை எழுதி முடிக்கலாம் என்பதே எனக்குக் கிடைத்த புதிய வழி.


டி.வி.ஆரின் நண்பர்கள் யார் யார்? எங்கே இருக்கிறார்கள்? இதுவெல்லாம் புதிராகவே இருந்தது. திருவனந்தபுரம், ‘தினமலர்’ பழைய இதழ்களின் தொகுப்புக்கள் அனைத்தையும் கவனமாகப் படித்தேன். அதில் உள்ள செய்திகளில் அடிக்கடி வரும் பெயர்களை குறித்துக்கொண்டேன். சில பெயர்களுக்கு, பதவிகளும், இன்னும் சிலருக்கு சிறிய படத்துடன் செய்திகளும் இருந்தன. இவைகளை கொண்டு, கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருவனந்தபுரத்தில் தேடத் தொடங்கினேன்.


நான் சேகரித்த பெயர்கள் 164. இவர்களுக்கு இப்போது வயது 75க்கும் அதிகம் இருக்கும். பலரைப் பற்றி விவரம் கிடைக்கத்தான் செய்தது. ஆனால், அவர்கள் இப்போது எங்கே இருக்கின்றனர் என்பதைத்தான் தெரிந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. ஒரு சிலர் வயது அதிகமானதால் சொன்ன வரிகளையே மணிக்கணக்கில் கீறல் விழுந்த ரெக்கார்டுகள் ஒலிப்பது போல ஒலித்தனர். பலர் படுத்த படுக்கை. மிகவும் கஷ்டப்பட்டு வீட்டைக் கண்டுபிடித்துப் போனால், ‘ஒரு வாரம் முன்னால் வரக்கூடாதா? அவர் காலமாகி ஒரு வாரமாகிறதே!’ என்ற சொல்லைக் கேட்கும் நிலை.


எப்படியோ . . . இந்த துப்பறியும் வேலையில் 59 பேரை கண்டுபிடித்து விட்டேன். இதற்கு பெரிதும் உதவிய முழுப்பெருமையும் நாகர் கோவிலில் நீண்டகாலம் எங்கள் நிருபராக இருந்த ரிச்சர்டை சாரும். கிட்டத்தட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு மாதங்கள் என்னுடன் நடையாய் நடந்தார். திருவனந்தபுரத்தைப் பொறுத்தவரை, குழித்துறை நிருபர் கே.எஸ். ஆறுமுகம் பிள்ளையின் உதவி மறக்க முடியாதது. யாருமே அண்ட முடியாத மூன்று முக்கியமானவர்களை அன்றைய நிருபர் சம்சுதீன் அணுகி உதவிகள் பெற்றுத்தந்தார். ஒரு நபர் சிக்கினால், அவர், தனக்கும், டி.வி.ஆருக்கும் வேண்டிய ஒருவரது முகவரியைத் தருவார். இப்படியாக 60 பேரை பேட்டி கண்டு விவரங்கள் பெற்றேன்.


நான் பார்த்த அனைவருமே டி.வி.ஆர். மீது தேவதா விஸ்வாசம் உள்ள நண்பர்களாக இருந்தனர். ஒரு சில உதாரணங்களை கூறியே ஆக வேண்டும்.  மாறாயக்குட்டிபிள்ளை கடும் இதய நோயாளி, பேசவே கூடாது என்று டாக்டர்கள் தடை போட, அவரது வீட்டார், றிவீட்டில் பிள்ளை இல்லைறீ என, என்னைத் திரும்ப அனுப்பிவிட்டனர். தொடர்ந்து போன் மூலம் தொடர்புகொண்டதில், ஒருமுறை அவரே பேசினார். உடனே வீட்டுக்கு வரச் சொன்னார். மூன்று நிமிஷம் பேசினால் ஒரு மாத்திரை சாப்பிட்டாக வேண்டும். மாத்திரை பாட்டிலை மேஜை மீது வைத்துக் கொண்டு, ‘டி.வி.ஆரைப் பற்றி நினைத்தாலே வியாதி குறைந்துவிடும்’ என்று கூறிய தகவல்கள் என்னை உணர்ச்சிவசப்படச் செய்தது.


முன்னாள் எம்.பி., சிவன்பிள்ளை திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். என் கடிதம் கிடைத்ததும், தனக்கு உதவியாள ராக இருந்தவர்களிடம் ஒவ்வொரு நாளும் சில வரிகளை சொல்லி எழுதி அனுப்பியது மறக்க முடியாதது. புதுச்சேரி தேச பக்தரும், முன்னாள் அமைச்சருமான வ.சுப்பையா அவர்கள் உடல்நலம் கெட்டு நாக்கு பேச இயலாத நிலையில் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் பேச்சு வரும் என்றனர். பல நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் பேச முடிந்தது. உடனே அவரது மனைவியார் சரஸ்வதி மூலம் தந்தி கொடுத்து வரச்சொல்லி கூறிய தகவல்கள் அபூர்வமான தாகும்.


தஞ்சைப் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த வி.ஐ.சுப்பிர மணியத்திற்கும், டி.வி.ஆருக்கும் தொடர்பு உண்டு என தெரிந்து தஞ்சைக்கு தபால் எழுதினேன். உடனே புறப்பட்டு வரச்சொல்லி தந்தி கொடுத்தார். இந்த நுபல் எழுத தன்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வதாகவும், வேண்டுமானால் புரூப் கூட திருத்தித் தருவதாகவும் அவர் கூறியது எனக்கு புது தெம்பை உண்டாக்கியது. வயதான நிலையில் முன்னாள் ரயில்வே உதவி அமைச்சர் ஓ.வி. அழகேசன் அவர்களை செங்கல்பட்டில் அவரது வீட்டில் சந்தித்தேன். அவரோ, ‘நான் ரயில்வே அமைச்சராக இருந்தவன் என்பதை நினைவு வைத்துள்ளவர் நீங்கள்தான்’ என்று வேதனையுடன், வேடிக்கையாக கூறி, டி.வி.ஆர்., பற்றி நினைவுகளை கூறினார்.


டி.வி.ஆரின் இளமைப் பருவ நிகழ்ச்சிகளை அவர்களது சொந்தக் காரர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். அதில் எனக்கு நம்பிக்கை யில்லை. கண்ணதாசன் ஒருசமயம் கூறினார்: புதுச்சேரி போய் இருந்தேன். பாரதியார் வசித்த வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரருக்கு 85 வயதிருக்கும். பாரதியார் காலம் முதல் அந்த வீட்டிலேயே உள்ளார். அவரிடம் பாரதியாரைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் என போய் கேட்டேன். அதற்கு அவர், ‘நன்றாகத் தெரியும். ஆனால் அவருக்கு (பாரதியாருக்கு) இத்தனை புகழ் வரும் என்று அன்றே தெரிந்திருந்தால் அவருடன் நெருங்கிப் பழகி இருப்பேனே!’ என்றா ராம். . . இதைப் போலத்தான் புகழ் வந்தபின் ஒவ்வொருவரும் பல கதைகளை சொல்வர்; அவைகள் வரலாறு ஆகாது.


ஆனால், றிசென்னையில் வசித்த எழுத்தாளர் பரந்தாமன் நிறைய தகவல் தரலாம்றீ என்று டி.வி.ஆருக்கு நெருக்கமானவர்கள் பலர் கூற, அவரை பல முறை சென்னை சென்று பார்த்தேன். எழுத்தாளர் களிடம் ஒன்றை எழுதி வாங்குவது எவ்வளவு கஷ்டம் என்பது அனுபவப்பட்டவர்களுக்கே தெரியும்! ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் நினைவுபடுத்தி சென்னைக்குத் தவறாமல் கார்டு ஒன்று போடுவேன். இது எட்டு மாதம் நடந்தது. இந்த கார்டு தொந்தரவு பொறுக்க முடியாமல் அபூர்வமாக ஏராளமான இளமை நினைவுகளை சுவையாக எழுதி அனுப்பினார் பரந்தாமன்.


தென்குமரி தமிழர் போராட்டம் என்றால் தேச பக்தர் மணி அண்ணாச்சி தான் நினைவுக்கு வருவார். பிடிவாதக்காரர், தன்மான உணர்வு மிக்கவர், பெரும் சாதனைகளைச் செய்தவர். எழுத்தாளர். நெருங்கிப் பழக பலரும் கொஞ்சம் பயப்படவே செய்தனர். நான் போய் பார்த்தபோது பழைய ரெக்கார்டுகள், மினிட்டுகள், புகைப் படங்கள் எல்லாவற்றையும் தேடித் தந்து, சந்தேகங்கள் பலவற்றைத் தீர்த்து வைத்தார். தமிழர் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு பற்றி திருவனந்தபுரம் உயர்நீதிமன்ற நீதிபதி சங்கரன் தலைமையில் நீதி விசாரணை நடைபெற்றது. அந்த தீர்ப்பு விவரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இல்லை. திருவனந்தபுரத்தில் தேடினால் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் சேர்ந்த பின்னர் அங்கிருந்து பல ரெக் கார்டுகளை கொண்டுவரவில்லை என்று கூறிவிட்டனர். தேடோ தேடென்று தேடினேன். நல்ல வேளையாக, பிரபல வழக்கறிஞரும், முன்னாள் எம்.பி.,யுமான ஏ.ஏ.இரசாக்கிடம் ஒரு பிரதி இருந்தது. ‘நான்கு மணிநேரம்தான் தர முடியும்’ என்ற கண்டிப்புடன் தந்து உதவினார்.


கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பொதுகாரியங்கள், அதற்காக அச்சான நோட்டீஸ்கள், பத்திரிகை செய்திகள் பலவற்றையும் தேதி வாரியாக பைண்டிங் செய்து வைத்திருப்பவர் படேல் சுந்தரம் பிள்ளை. அந்த முதியவர் வீட்டுக்கு பலதடவை போய் பல சந்தேகங் களை தீர்த்துக்கொண்டேன். நாகர்கோவில் தமிழ் எழுத்தாளர்கள் மகாநாட்டை 1958ல் டி.வி.ஆர்., முன்னின்று நடத்தினார். அது பற்றி ‘கல்கி’யில் வெளியான கட்டுரையை நகல் எடுத்துக்கொள்ள உதவினார், ‘கல்கி’ ஆசிரியர் ராஜேந்திரன்.


படங்கள் வேண்டுமே. . . ஒரு படம்கூட டி.வி.ஆர்., வீட்டில் இல்லை. அந்தக்காலத்தில், ‘பிளாஷ்’ கிடையாது. கட்டிடங்களுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை படமாக்க முடியாது. முக்காலியில் கேமிரா, அதன் மீது ஒரு பெரிய கருப்பு போர்வை, எல்லாரையும் திறந்த வெளியில் வரிசையாக உட்கார்த்தி, றிகொஞ்சம் சிரியுங்கள்றீ என கூறி படமெடுப்பார் போட்டோ கிராப்பர்.


பெரிய, பெரிய குரூப் போட்டோக்கள் இரண்டு தலைமுறைக்கு முந்தியது. கன்னியாகுமரி மாவட்ட பங்களாக்களில் ஏதோ ஒரு கிடங்கில் கிடந்த படங்களைத் தேட, டி.வி.ஆரின் நண்பர்கள் அனுமதித்தனர். அவைகளை தேடி எடுத்து அழுக்கு நீக்கி அபூர்வமாக அழகாக மீண்டும் பிரதி எடுத்துத் தந்தார் நாகர்கோவில் நியூ ஸ்டூடியோ உரிமையாளர் என்.எஸ்.கே.பெருமாள். நல்லவேளையாக வாஞ்சியூர், திருநெல்வேலி தச்சநல்லுபர் அலுவலகங்களை அப்போதே படம் எடுத்து வைத்தேன். இன்று அங்கே பெரிய பெரிய பங்களாக்கள் காணப்படுகின்றன.


நுபலை வடிவமைக்க மதுரை, சென்னையில் உள்ள, ‘தினமலர்’ சகோதர, சகோதரிகள் தொடர்ந்து உதவினர். அவர்களது கடுமையான உழைப்பை மறக்க முடியாது. இதன் புரூப்களைப் பார்த்து பிழைகளை திருத்தி உதவியவர்கள் பேராசிரியர் வளன் அரசு மற்றும் தமிழப்பன்.  டி.வி.ஆரின் இளமைக் கால சம்பவங்கள் அதிகம் கிடைக்கவில்லை. மத்திய காலத்தில் - ‘தினமலர்’ ஆரம்பமாவதற்கு முன் - ஏராளமான பொது தொண்டுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். ‘தினமலர்’ தொடங்கிய பின் தனது பத்திரிகை மூலம் மக்கள் சேவையை பெரிய அளவில் செய்து முடித்துள்ளார். ஆகவே, பத்திரிகையை நேரடியாக டி.வி.ஆர்., கவனித்த கால் நுபற்றாண்டு பணிகள் சிலவற்றையும் தொட்டுக் காட்டி உள்ளேன்.


இது ஒரு தனி நபரது வரலாறு மட்டுமல்ல . . . கால் நுபற்றாண்டு கன்னியாகுமரி மாவட்ட, தமிழக வரலாறுகள் சிலவும் இணைந் துள்ளன. உண்மையில், ‘தினமலர்’ தொடக்க கால முதல் இன்று வரை செய்த மக்கள் பணிகள் பற்றி ஒரு பெரிய ஆய்வு நுபல் வருவதே நியாயம். அதை பிற்காலத்தில் யாராவது செய்வர் என்ற நம்பிக்கை உண்டு. பேட்டிகள் தந்து உதவிய 60 பெரியோர்களில் நுபல் வெளிவர வருஷங்கள் பல ஆனதால், இன்றைக்கு 10 பேர் இருப்பார்களா என்பதே சந்தேகம். பணியில் உதவிய அந்த அமரர்களுக்கு எனது மனப்பூர்வமான அஞ்சலிகளை கூறிக்கொள்வது அவசியமாகி உள்ளது. இந்த நுபலில் எல்லா தகவல்களையும் சொல்லிவிட்டதாக நினைக்கக்கூடாது. இது ஒரு சிறிய ஆரம்பம். எதிர்காலத்திலும் இதன் தொடர்ச்சியை யாராவது ஒருவர் செய்வார் என நம்புகிறேன்.

தி.முத்துகிருஷ்ணன்

நெல்லை
செப்டம்பர் 1, 1995.

மூன்று கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல் தந்த குழந்தை டி.வி.ஆர்,. அவரது மகத்தான சாதனையான, ‘தினமலர்’ இதழின் சின்னம் தாமரை. ஆகவே இவைகளை நினைவுபடுத்தும் வகையில் நுபலுக்கு, ‘கடல் தாமரை’ என்று பெயர் சூட்டி உள்ளேன்.Advertisement
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X