கன்னங்கரிய கடலில் ஒரு சின்னஞ்சிறிய பூ

 

தமிழ் நாட்டின் எல்லையைச் சொல்ல வந்த மகாகவி பாரதி, நீலத்திரைக்கடலையும், குமரி அம்மனின் தவத்தையும் இணைத்து, மிகப் பெருமையாக, அற்புதமாக வர்ணித்துவிடுகிறார். 1910ம் ஆண்டை ஒட்டி, பாரதி இவ்வாறு கூறி இருக்கலாம். உண்மையில் அதுதான் தமிழகத்தின் எல்லையா? குமரியைத் தமிழகத்தின் எல்லை யாக உருவாக்க எத்தனை பெரிய போராட்டம் நடந்திருக்கிறது!


அந்தப் போராட்டத்தில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள ஒரு குழந்தை 1908ல் பிறந்தது. அந்தக் குழந்தையின் வர லாற்றை வாசகர்கள் முன் பெருமையுடன் படைக்கிறோம். முக்கடல், சுற்றிலும் மலைக் கூட்டம், இயற்கைச் செல்வங்கள் இணைந்த, அழகு கொஞ்சும் நாஞ்சில் நாட்டில் நாம் குறிப்பிட்ட குழந்தை பிறந்து வளர்ந்தது.
அன்றைய நாஞ்சில் நாடு எப்படி இருந்தது? நடை, உடை, கலை, கலாசாரம், உணவு, திருக்கோயில்கள், ஆட்சி முறை, மொழி, அனைத்துத் துறைகளிலும் நாஞ்சில் நாடு, தமிழ்நாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டே இருந்தது.


சூழ்நிலைகள் ஒரு மனிதரின் எண்ண உணர்வுகளுக்குத் துணையாக இருந்ததா அல்லது சூழ்நிலைகளை ஒருவர் மாற்றி அமைக்க முன் வந்தாரா என்பது நமக்குள் எழும் கேள்விகள். இக்கேள்விகளுக்குப் பதிலைக் காண, இப்போது நாம், முக்கால் நுபற்றாண்டுக்கு முன் உள்ள நாஞ்சில் நாட்டின் தலைநகர் நாகர்கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்தது நாஞ்சில் நாடு. நாட்டின் பெயரே அதை ஒட்டி எழுந்ததுதான். பச்சைப் பசும் ரத்தினக் கம்பளங்கள் போர்த்தியது போன்ற மலைச்சிகரங்கள். ஒரு பக்கம் எப்போதும் பொங்கி எழுந்து வானத்தைத் தொட்டு விளையாடும் அலைகடல், நிலமோ சமதளமானது அன்று. எங்கும் மேடும், பெரும் பள்ளங்களும்!

தனித்தனியாக அழகான வீடுகள். பெரும்பாலும் கள்ளிக்கோட்டை ஓடுகளையே கூரைகளாகக் கொண்டவை. வீட்டைச் சுற்றிச் சிறு மதில் சுவர். வீடுகள் அனைத்தும் கேரள பாணிக் கட்டடங்கள். முன் கதவுகள் இரண்டுக்குப் பதில் நான்காகக் காட்சி தரும். யாராவது அழைத்தால், மேல் கதவுகள் இரண்டை - ஜன்னல் களைத் திறந்து பார்ப்பது போலப் பார்க்கும் புதிய காட்சிகள். வீட்டைச் சுற்றி, தென்னைகள், பூச்செடிகள். சாலை ஓரங்களில் ஏராளமான காய்கள் தோரணங்களாகத் தொங்கும் பலாமரங்கள். எங்கு நோக்கினும் பசுமைக் கோலத்துடன் வயல்கள். அவை எப்போதும் நீர் தேங்கிக் குளங்களாகக் காட்சி தரும். அதைத் தொட்டு வீசும் குளிர்ந்த காற்று. ஆண்டில் பன்னிரண்டு மாதங்களும் மழை கொட்டும் அதிசயம். எங்கும், யார் கையிலும், எந்த நேரத்திலும், தாழம் குடைகள். அபூர்வமாக துணிக் குடைகளையும் காணலாம். மழை தொடர்ந்து இருந்தபோதிலும், அதிகாலையில் வீட்டு முற்றத்தில் கோலமிட்டு, அழகான குத்து விளக்கு ஏற்றி, லட்சுமிகரமான காட்சியை உருவாக்கும் இல்லத்தரசிகள்.

பத்மநாபபுரம்

இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, ‘நாஞ்சில் நாடு’ என்று அன்றைக்குப் பெயர். இப்பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்திற் குள் இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதல் தலைநகர் நாஞ்சில் நாட்டில் உள்ள பத்மநாபபுரம்தான். இன்றைய குழித்துறைக்கருகில் உள்ள இவ்வூர், கி.பி., 1550லிருந்து, பதினெட்டாம் நுபற்றாண்டின் இறுதி வரை, திருவிதாங்கூரின் (வேணாடு) தலைநகராக இருந்து வந்துள்ளது. தர்மராஜா கார்த்திகைத் திருநாள் ராமவர்மாவின் (கி.பி., 1759-1798) ஆட்சி முடியும் வரை பத்மநாபபுரம்தான் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகர். இன்றைக்கும் பத்மநாபபுரத்தில் பழைய அரண்மனை, கோட்டை முதலானவை உள்ளன. இவை, இன்றும் கேரள அரசின் பராமரிப்பில்தான் உள்ளன. அரசர் இங்குக் கடவுளாக மதிக்கப்பட்டார். அரசர்களும் மக்களிடம், குறிப்பாக நாஞ்சில் நாட்டு மக்களிடம் மிகுந்த அபிமானம் கொண்டிருந்தனர். இன்றைக்கும் இங்குள்ள மக்கள் அரசர்களைப் பற்றிப் பெருமையாகவே கூறுகின்றனர்.


திவான்

திவான் என்ற சொல்லோ, பதவியோ இன்று இந்தியாவில் கிடையாது. பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு முன், இந்தியாவில், திருவிதாங்கூர், ஐதராபாத் போன்ற ஏராளமான சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. அவை எல்லாம் தனித் தனியான மன்னர் ஆட்சிக்குப்பட்ட பகுதிகள். இவ்வாறான சமஸ்தானங்களில் புகழ் பெற்றது திருவிதாங்கூர் சமஸ்தானம். இது அரசருடைய ஆளுகைக்குட்பட்ட பகுதி. இங்கு முழு அதிகாரமும் அரசருக்குத்தான். ஆங்கிலேய அதிகாரி ஒருவர் இருப்பார்.


ஆங்கிலேயர், அதிகாரத்தை இந்தியருக்கு மாற்றவிருந்த நேரத்தில், நவாபுகளாலும், ராஜாக்களாலும், மகாராஜாக்களாலும் ஆளப்பட்ட 565 சமஸ்தானங்கள் இருந்தன. பெரிய பெரிய மாகாணங்கள் சென்னை, பம்பாய் போன்றவை இணைந்த இந்தியாவிற்குச் சுதந்திரம் என்று ஆங்கிலேயர்கள் அறிவித்தபோதே, ‘சுதேச சமஸ்தானங்களும் சுதந்திரமாகத் தம் இஷ்டம் போல செயல்படலாம்’ என்று கூறி, ஒரு விஷ விதையையும் துபவி விட்டே சென்றனர். சுதந்திரம் பெற்ற சிற்றரசுகள் ஏராளமாக இருப்பது, நாட்டின் ஒற்றுமை யைச் சீர்குலைக்கும் என்பதோடு மட்டுமின்றி, விடுதலை இயக்கத்தின் குறிக்கோளையே பயனற்றாதாக்கிவிடும் சூழ்நிலையும் உருவானது.
ஆக., 15, 1947 நெருங்க 40 நாட்களே இருந்தன. சிற்றரசுகளுக்குப் பட்டேல் அறை கூவல் விடுத்தார். ஜூலை 25ம் தேதிக்குள் 562 சமஸ்தானங்கள். இந்தியாவுடன் சேரச் சம்மதித்தன. ஐதராபாத், போபால், திருவிதாங்கூர் அரசுகள் தயங்கின. இறுதியில் பரபரப்பான முயற்சிகளுக்குப் பின், இவை இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.


அரசர், பரம்பரையாக வருபவர். ஆனால், சமஸ்தானத்தின் முழு நிர்வாகம், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நேரடியாகக் கவனிப்பவருக்குத் ‘திவான்’ என்று பெயர். அரசருக்கு அடுத்து ஆட்சியில் மிகப்பெரும் சக்தி படைத்தவர் திவான்தான். இந்தத் திவான்களை அரசரே நியமிப்பார். இந்திய சுதேச சமஸ்தானங்களில் அன்றைக்கு மிகப் பிரபலமாகப் பேசப்பட்ட திவான்கள் ஒரு சிலரில், சர்.சி.பி.இராமசாமி ஐயர் குறிப்பிடத்தக்கவர். அன்று அரச ருடைய விஜயம் சர்வ சாதாரணமாக இருக்கும். ஆனால், திவான்களின் விஜயம்தான் மிகப் பிரபலமாக இருக்கும். சர்.சி.பி., காலம் வரை, அவர் எப்போதாவது, எந்த ஊருக்காவது வருவதானால் குதிரைகள், காலாட்படைகள், வண்டிகள் இப்படி ஏகப்பட்ட ஆடம்பரத்துடன் தான் அவரது பவனி இருக்கும்.


நாகர்கோவில்

நாகர்கோவில், இப்பகுதியின் மிகப் பெரிய நகர். அதன் மக்கள் தொகை அன்று 30 ஆயிரம். 1894 முதல் நகரின் துப்புரவைக் கவனிக்க அரசாங்க அலுவலர்கள் கொண்ட ஒரு குழுவை சமஸ்தானம் வைத்திருந்தது. அதற்கு வரி விதிக்கும் அதிகாரம் கிடையாது. 1901ல் தான் வரி விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. 1920ல் தான் நகராட்சிச் சட்டம் கொண்டு வரப்பட்டு, நாகர்கோவில் நகராட்சியாகி உள்ளது.


அன்று சாலையெல்லாம் சல்லிக்கல்தான். அதுவும் கூட, ஒரு சில சாலைகள் தாம் உண்டு. வயல் வரப்புக்கள் வழியாகத்தான் பெரும்பாலும் நடந்தனர். குடிதண்ணீருக்கு ஒரு சில கிணறுகளை மட்டுமே, மக்கள் நம்பி இருந்தனர். அதில் முக்கியமானது அச்சங்கிணறு. குடிதண்ணீருக்கு மக்கள் பட்ட பாட்டை, நமது வரலாற்று நாயகர் அழகாக விமர்சிக்கிறார்: அழகிய பாண்டியபுரம், கன்னியா குமரி ரோட்டுக்குக் கிழக்குப் பகுதி முழுதும் எங்குத் தோண்டினாலும் உப்புத்தண்ணீர்தான் வரும். அது சமையலுக்கு லாயக்கில்லாதது. அந்த ரோட்டிற்கு மேற்குப் பகுதிக் கிணறுகளில் நல்ல தண்ணீர் உண்டு. அதுவும் சிற்சில இடங்களில் மட்டுமே கிடைக்கும். கிணற்றின் ஆழம் 80 முதல் 100 அடி வரை இருக்கும்.


நகரசபை லாரிகளில் டாங்கு வைத்து, இந்த நல்ல தண்ணீரைக் கொண்டு வந்து, கீழ்ப் பகுதிக்குக் குறைந்த விலையில் கொடுத்து வந்தனர். சோறு சமைக்கலாம்; குடிக்கலாம். அதற்கு மட்டுமே இந்தத் தண்ணீரைப் பாதுகாக்க வேண்டும். . .
வருடம் முழுவதும் மழை பெய்யும் வளமான நீர் ஆதாரம் கொண்ட நாகர்கோவில் மக்களும் கூட, அன்று குடி தண்ணீரை விலைக்கு வாங்கித்தான் காலத்தைக் கழித்துள்ளனர் என்பது அதிசயமான செய்திதானே. பெரிய மருத்துவமனை எதுவும் கிடையாது. போலீஸ் ஸ்டேஷன் பக்கமுள்ள இன்றைய அரசு மருத்துவமனை உள்ள இடம், முன்பு ஒரு மைதானம். முன்பெல்லாம் பொதுக் கூட்டங்கள் இங்குதான் நடக்கும். மருத்துவமெல்லாம் நாட்டு வைத்தியம்தான். ஆசான்கள் பலர் சிறந்த வைத்தியர்களாக இருந்தனர். நாஞ்சில் நாட்டில் மருத்துவாள்மலை (மருந்து வாழ் மலை) என்ற நல்ல மூலிகைகள் கொண்ட மலை இருக்கிறது. வைத்தியர்கள் வீடுகளில் பெரிய பெரிய வெண்கல வார்ப்புகளில் மருந்துகள் கொதித்த வண்ணம் இருக்கும். எல்லாம் சூரணம், குளிகைகள்தான்.


நகரின் பெயரே நாகராஜா கோயிலை அடிப்படையாகக் கொண்டது. வயலும், தோட்டங்களும், செடி கொடிகளும் நிரம்பிய ஒரே ஈரமான பகுதியில் பாம்புகள் தாராளமாக நடமாடும். பாம்புக் கடியில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நாகராஜாவிடம் இவ்வூர்மக்கள் மிகுந்த பயபக்தி கொண்டிருந்ததில் வியப்பேதும் இல்லை. பெரும் குற்றவாளிகளுக்குத் துபக்குத் தண்டனை விதிக்கப்படும் வழக்கம் இருந்த காலம் அது. இப்படிப்பட்ட தண்டனையை நிறைவேற்றுகிறவர், தண்டனை வழங்கப் போவதே ஒரு தனிக் காட்சியாகும். கையில் வாள் ஏந்தி, கழுத்தில் மாலை அணிந்து, முரசறைந்து கொண்டு புறப்பட்டு விட்டால், அவர் எதிரே யாரும் வரமாட்டார்களாம். பயத்தால் அல்ல; அவரது புனிதப் பணிக்குச் சகுனத் தடையாகக் கூடாது என்பதற்காகத்தானாம். ‘கடுவன் திட்டை’ என்று இதற்காகவே ஓர் இடம் இருந்தது. இப்பொழுது நாகர்கோவில் நகரின் முக்கியமான பகுதி அது. இப்பணியை மேற்கொண்டவர்கள், ‘ஆரச்சார்’ என்றழைக்கப்பட்டனர்.


அன்று தெரு விளக்குகள் எல்லாம் துபணில் வைக்கப்பட்டிருக்கும்; மண்ணெண்ணெய் விளக்குகள்தான். நிலவு வரும் நேரத்தைக் கணக்கிட்டே, அதுவரை எரியும்அளவில்தான் மண்ணெண்ணெய் தினசரி விடப்படும். அமாவாசையில் விளக்குகள் முழுநேரமும் இரவில் எரியும். பவுர்ணமி அன்று இந்த விளக்குகளுக்கு விடுமுறை. இப்போது மின்சாரத் தெரு விளக்குகள் பாதி எரிந்து, மீதி அவிந்த நிலை அன்றைக்குக் கிடையாதாம். இந்தச் சூழ்நிலையில், உலக விஞ்ஞான மாறுதல்களுக்கு ஏற்ப மின்சாரம் பழக்கத்திற்கு வந்ததும், பயோனியர் குடும்பத்தினர், ஜெர்மன் கம்பெனி ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து, ஜெனரேட்டர்கள் மூலம் தெரு மின் விளக்குகளுக்கும், வீடுகளுக்கும் மின்சாரம் கொடுத்தனர். ஆனால், ஓர் அதிசயம். . . அப்போது நகராட்சியின் தலைவராக இருந்தவர் மின்சாரத் தெரு விளக்குகளுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தாராம். தெருக்களில் மின் விளக்குகளும், அடுத்து மண்ணெண்ணெய் விளக்குகளும் வெகு காலம் எரிந்துகொண்டிருந்த தாம். மின்சாரத்தின் மீது அந்த நகராட்சித் தலைவருக்குக் கோபம் ஏதுமில்லை. யாருக்கு உரிமை என்பதில் எழுந்த போராட்டம்தான் அது என்று கூறுகின்றனர். 1935 வரை இந்தக் கூத்துத் தானாம். ’35க்கு பிறகு போனால் போகட்டும் என்று மின்சாரத் தெரு விளக்குகளை நகராட்சித் தலைவர் ஏற்றுக்கொண்டாராம்.


கலை ஆர்வம்

அன்று இங்குக் கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் குறைவில்லை. ஆனால், பெரிய இசைக் கலைஞர்களின் கச்சேரிகளைப் பொது மக்களுக்கு மேடை போட்டுக் கேட்க வாய்ப்பில்லாத காலம். பெரும்பாலும் தலைநகர் திருவனந்தபுரத்தில், பெரிய பணக்காரர் வீட்டுக் கல்யாணங்களில், அரியக்குடி, மதுரை மணி ஐயர், செம்மங்குடி போன்றவர்களின் கச்சேரி நடக்கும். கல்யாண வீட்டார் அழைத்தாலும், அழைக்காவிட்டாலும், இசைப் பிரியர்கள் காசைச் செலவிட்டுத் திருவனந்தபுரம் போய்க் கச்சேரியைக் கூட்டத்தோடு கூட்டமாகச் கேட்கும் பழக்கம்தான் இருந்திருக்கிறது. ரேடியோ பற்றி இவர்களுக்கு அப்போது எதுவும் தெரியாது. நாஞ்சில் நாட்டிலும் பல புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் உருவாகியே வந்தனர். பத்மாவதி கதாகாலட்சேபம், ஐயாவுப் பாகவதர் இசை, பிடில் நயினார் பிள்ளை, ஒழுகினசேரி அனந்த நாராயண ஐயர் புல்லாங்குழல் இப்படிப் பலர் இசைக் கலையில் பெருமையுடன் மக்களை மகிழ்வித்து வந்தனர். வடிவீஸ்வரம் கோயில் திருவிழாவிற்கு ராஜரத்தினம் பிள்ளை முதன் முதலில் வந்தார். அதுமுதல் நாதஸ்வரம் பிரபலமானது. பல ஊர்களில் மிகச் சிறப்பாக வில்லுப்பாட்டு குழுக்களின் வில்லடி நடக்கும். கிராமக் கோயில் திருவிழாக்கள் என்றால் வில்லுப்பாட்டு பிரதானமாயிருக்கும்.


நாடகங்களுக்குத்தான் அன்று பெரும் செல்வாக்கு. கோவிந்தசாமிப் பிள்ளை, கிட்டப்பா நாடகங்கள் அடிக்கடி நடக்கும். ஆர்மோனியம் காதர் பாட்சா அப்போது பிரபலமானவர். கார்மேகக் கோனார் பபூன், தாணுப்பிள்ளை பபூன், பொக்கு சாயபு காமிக் இவை மக்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. இன்று கால்நடை மருத்துவமனை இருக்கும் இடம், அன்று வயலாக இருந்தது. கோடையில் விவசாயம் இல்லாதபோது, இதில் நாடகக் கொட்டகை போட்டு நாடகங்கள் நடத்தப்பட்டன. பெரும்பாலும் புராணக் கதைகள், அரிச்சந்திர மயான காண்டம் இவைதான்.  இதன் பின், ஒழுகின சேரியில் ஒரு நாடகக் கொட்டகையை நமது வரலாற்று நாயகரின் சொந்தக்காரர் ஒருவர் அமைத்தார். நாடகங்கள் இரவு 9 மணிக்குத் தொடங்கி 12 மணி வரை நடக்கும். அதில் மக்களுக்கு இருந்த ஆர்வமும் காரணமாக இப்பகுதியில் இருந்து, டி.கே.எஸ்., சகோதரர்கள், என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற புகழ்பெற்ற கலைஞர்கள் தமிழ்க் கலை உலகிற்குக் கிடைத்தனர்.


நாகர்கோவிலில் அன்று அதிகமாக டி.கே.எஸ்., சகோதரர்கள் நாடகங்களே நடந்தன. எல்லாம் சிறு பையன்களே நடித்தனர். ஒரு புதுப்பையன் வந்து சேர்ந்தான். அவன் பாடிய, ‘மூல மந்திரமான நற்பொருளே!’ என்ற பாடலைக் கேட்டு வியந்த சண்முகம், ‘இந்தப் பாட்டு எப்போது உனக்குத் தெரியும்?’ என்று கேட்டார். அதற்கு அந்தப் பையன், ‘நான் உங்கள் நாடகங்களை நாகர்கோவிலில் பல தடவை பார்த்து இதைப் படித்தேன்’ என்றான். அந்தப் பையன்தான் என்.எஸ்.கிருஷ்ணன். 1925ல் மதுரையில் பால சண்முகானந்தா சபாவின் முதல் நாடகம், ‘கோவலன்’ அரங் கேறியது. இது டி.கே.எஸ்., சகோதரர்கள் நடத்திய நாடகம். இந்நாடகத் தில்தான் முதன் முதலாக என்.எஸ்.கே., நடிக்கத் தொடங்கினார். நாகர்கோவில் ஒழுகினசேரியில் பின்னர் கோவலன் நாடகம் நடத்திய போது, பாண்டியன் வேஷத்தில் என்.எஸ்.கே., நடித்தார். அதைப் பாராட்டி, சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் இவ்வாறு கூறினார்:


நம் நாஞ்சில் நாட்டு இளம் சிறுவன், என்.எஸ்.கிருஷ்ணன், வருங்காலத்தில் மகா மேதையாக விளங்கப் போகிறான். இவனுடைய புகழால் நாஞ்சில் நாடு மட்டுமல்ல, தமிழ்நாடே பெருமைப்படப் போகிறது. . .  இதுவெல்லாம் 1925ம் ஆண்டு. அந்தக் காலத்தில் ஊமைப் படங்கள்தான் காட்டப்பட்டன. அதில் வசனம், பாட்டுக்கள் எதுவும் இருக்காது. கதையும், பரபரப்பான சம்பவங்களுமே நிறைந்திருக்கும். ஊமைப்படங்கள் திரையிடப்படும் போது, அவ்வப்போது காட்சியை நிறுத்தி, கதை வசனத்தை ஒருவர் ஒப்புவிப்பார். இந்த ஊமைப்படங்கள் நாகர்கோவிலில் சக்கைப் போடு போட்டன. பின்னர் பயோனியர் குடும்பத்தினர் முதல் திரைப்படக் கொட்டகை ஒன்றை நிறுவினர். இதுதான் கலைத்துறையின் அந்தக் காலத்தில் நாகர்கோவில் இருந்த நிலை.


போக்குவரத்து

பஸ் என்பது அன்று அதிசயமானது. அதற்கு முன் பொதுவாகப் பயணத்திற்கு மாட்டு வண்டிகள்தான் அதிகம். பெரிய பண்ணை யார்கள், இரட்டை மாட்டு வில் வண்டியைத்தான் பயன்படுத்தி உள்ளனர். பண்ணையார்கள் உட்பட, யாரும் வெளியே செல்லும் போது, சட்டை போடும் பழக்கமில்லாதவர்களாகத்தான் இருந் தார்களாம்.

"எயிட் சீட்டர்'

"எயிட் சீட்டர்’ என்ற வகைப் பஸ்கள் பின்னர் விடப்பட்டன. பக்கத்துக்கு எட்டுப் பேர் உட்காரலாம். இதனால், ‘எயிட் சீட்டர்’ எனப் பெயர் பெற்றது. ஆனால், இதில் மொத்தம் 16 பேர் பயணம் செய்யலாம். முன்புறம் டிரைவர்; அவருக்குப் பக்கத்தில் உள்ள முன் சீட் மிக மதிப்புள்ளது. அதிகாரிகள், பெரிய மனிதர்களுக்குத்தான் அது கிடைக்கும். கட்டியான ரப்பர் டயர்தான். அன்று டயர்களில் இன்றுள்ளது போல டியூப்பு, அதில் காற்று அடைப்பது கிடையாது. காற்றடைத்த டயர் வெகு காலத்திற்குப் பின்னரே பயன்படுத்தப் பட்டது. பஸ்சில் போய் வருவதற்குள் உடம்பு நொறுங்கிவிடுமாம்! அவ்வளவு உலுக்கல் குலுக்கல் - ரோடுகள் மோசமாக இருந்ததும் இதற்கு ஒரு காரணம்.
 

லட்சுமி விலாசம் பஸ்தான் முதல் பஸ்; திருவனந்தபுரம் வரை சென்று வரும். கட்டணம் திருவிதாங்கூர் நாணயமான 14 சக்கரம். அதாவது இப்பொழுதுள்ள 50 காசு. பயணத்திற்கு நான்கு மணி நேரம் ஆகும். தக்கலை வந்தால் பஸ்சை அரை மணிநேரம் நிறுத்தி விட்டு டிரைவர் எங்கோ போய்விடுவார்.


பதினாறு பேர் அன்றைக்குப் பஸ்சுக்குக் கிடைப்பது மிகக் கஷ்டம். வீடு வீடாகப் சென்று பயணிகளைச் சேர்ப்பர். ‘எங்கள் வீட்டுக்கே வந்து பஸ் காத்திருக்கும். டிரைவர், கண்டக்டர், கிளீனர் முதலானோர் களே லக்கேஜை ஏற்றி விடுவர். எங்கே போக வேண்டுமோ அந்தத் தெருவில் உள்ள வீட்டில் கொண்டுபோய் இறக்கிவிடுவர். பயணி களுக்கு ராஜ உபசாரம்தான். நேரம் எதுவும் கிடையாது; 16 பேர் சேர்ந்தால்தான் பஸ் புறப்படும். 1938க்கு பிறகுதான் கன்னியாகுமரிக்கே பஸ் போனது’ என்றார் பெரியவர் ஒருவர். பஸ்சுக்கே இந்தக் கதை என்றால், ரயில் பற்றிக் கற்பனையே கிடையாது. பெரிய பணக்காரர்கள்தான் திருவனந்தபுரத்தில் ரயிலைப் பார்த்தது உண்டு. சமீப காலம் வரை ரயில் பற்றி கன்னியாகுமரி மாவட்டத்துக் கிராமத்தாருக்கு எந்த அனுபவமும் கிடையாது.


கன்னியாகுமரி ஒன்று மட்டும்தான் யாரோ சிலர் வெளியில் இருந்து வந்துபோகும் தலமாகும். பகவதி அம்மன் கோயில், கடற்கரை யில் தனியாகப் பளிச்சென்று தெரியும். கோயில் தேவஸ்தான தங்குமிடங்கள் சில உண்டு. கடற்கரை அழகாக இருக்கும். கோயிலின் அழகு கம்பீரமானது. கோயில்களில் எல்லாம் ஏராளமான குத்து விளக்குகள். தேங்காய் எண்ணெய்தான் உபயோகிப்பர். தெய்வீகச் சூழ்நிலையே கோயில்களில் நிலவும். கோயில்களுக்குள் யாரும் சட்டை போட்டு இதுவரை போனதில்லை; போகவும் முடியாது. கேரளபாணி பூஜை. பளிச்சென்று சந்தனக் கீற்றுப்பூச்சு. நெற்றியில் விபூதி, குங்குமங்களுடன் பக்தர்கள் காணப்படுவர். கன்னியாகுமரி அம்மனின் மூக்கில் வைரம் பளிச்சிடும். கப்பலே அந்த ஒளியில் திசை திரும்பிவிடுவதாகக் கருதி, முன்கதவைப் பூட்டியே வைத்து விட்டனர்.


கி.பி., 1544ல் தூய பிரான்சிஸ் சவேரியார் என்ற கத்தோலிக்கத் தந்தையார், கோட்டார் என்ற ஊரைத் தனது தலைமை இடமாகக் கொண்டு சமயப் பிரசாரம் செய்து வந்தார். புனித சவேரியார் பெயரில் அமைந்த ஆலயம் மிகப் பிரபலமானது. நமது நாட்டில் மிகப் பெரிய கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக இந்நகரில், கி.பி., 1819ல் கிரேக்க கட்டடப் பாணியில் கட்டப்பட்ட கற்கோயில், கோட்டார் சவேரியார் ஆலயம். இந்நகர் முகமதியர்களுக்கும் ஒரு முக்கிய தலமாக உள்ளது. இங்கு ‘வேம்படிப் பள்ளி’ எனப்படும் முகமதியர் தொழுகைத் தலமொன்று, ‘ஆலிப் புலவர்’ என்ற தமிழ் அறிஞர் ஒருவரின் பெயரால் நிறுவப்பட்டுள்ளது. இதன் அருகில், ‘ஹஸ்ரத் ஞானியார் சாகிபு வலியுல்லாஹ்’ என்ற மேதையின் தர்காவையும் காணலாம். எந்த மதத்தினரிடையேயும் வேற்றுமை ஏதும் இருந்ததில்லை. ஒரே குடும்பமாக, பாசத்துடன், இணக்கமாகவே வாழ்ந்து வந்தனர். இது இங்குள்ள தனிச்சிறப்பு.

மணிக்கூண்டு

நநாகர்கோவிலின் அன்றைய மிகச் செல்வாக்குப் பெற்ற இடம் மணிக்கூண்டு. கிட்டத்தட்ட அதுவே அந்த நகரைப் பலருக்கு நினைவில் கொண்டுவரும். மணிக்கூண்டின் அன்றைய பிரபலம் ஏராளம். இந்த மணிக்கூண்டு, 1893ல் கட்டப்பட்டது. இதில் பொருத்தப்பட்ட கடிகாரம், 20 வருடங்கள் லண்டனில் ஓடிய பின், நாகர்கோவில் இங்கிலீஷ் மிஷனரிக்கு அன்பளிப்பாக வந்தது. அதை திருவிதாங்கூர் ராமவர்ம மகாராஜா வாங்கி, நிர்மாணித்தார். மணிக்கூண்டுக்குப் பேசும் சக்தி இருந்தால், 1893ல் இருந்து, நாகர் கோவில் வரலாற்றைக் கதை, கதையாகக் கூறக் கூடும். கோட்டார் மார்க்கெட்டும் - முன்பு அதற்கு கம்பள பஜார் என்று பெயர் - வடசேரிச் சந்தையும்தான் வியாபாரத் தலங்கள். அந்த மார்க்கெட் இன்று இல்லை. அவை கன்னியாகுமரி சாலை யில் பல கடைகளாகப் பெருகி விட்டன. திருவனந்தபுரத்தில் பயறுகள், வற்றல், மல்லி, போன்ற பலசரக்குகள் கிடையாது.

நல்ல மிளகு, ஏலம், சுக்கு, இவை தான் உண்டு. ஆகவே, அங்கிருந்தும் உணவுக் கான பலசரக்குகள் வாங்க இங்குதான் வருவர். உணவுப் பழக்கம், தமிழ்நாட்டைப் போலல்லாமல், மிகவும் மாறுபட்டே இருந்தது. ஒரு வகை மோட்டா சம்பா அரிசி, சிவப்பு வண்ணத்தில் இங்கு உண்டு. அதைத்தான் சகல பகுதி மக்க ளும் உணவாகக் கொள்வர். மரச்சீனிக் கிழங்கு அதிகமாக விளைந்தாலும், அதை உண்பது கேவலமாக கருதப்பட்ட காலம் அது. ஏந்தம்பழ அப்பம், ஏந்தம் பழ வறட்டு மிகப் பிரபலமானது. சர்க்கரை, நெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் வறட்டு, மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும். சென்னை போன்ற பல வெளியூர்களுக்கு இது அனுப்பப்பட்டது. சர்க்கரை உப்பேரி கல்யாண வீடுகளில் சிறப்பாகப் பயன்படுத்தப்படும்.


அந்த உணவு வகைகளைக் கவிமணி அழகாகக் கூறுகிறார்:


அவியல், பொரியல், துவையல், தீயல், பச்சடி
தொவரன், கிச்சடி, சட்டினி, சாம்பார், கூட்டு
தயிர், புளிசேரி, பருப்பு, பப்படம், பாயசம்
பிரதமன், பழமிவையோடு படைத்துப் போட
எத்தனை நாளைக்கெங்களால் இயலும்?


பழங்கள் அன்றாட உணவில் இங்கு அதிமுக்கியத்துவம் பெற்றிருந் தன. அங்குக் கிடைத்த பழங்களின் வகைகளே கேட்க மிகச் சுவையாக இருக்கும். வாழைப் பழங்களில்தான் எத்தனை வகைகள்! ஏந்தன், செந்துளுவன், வெள்ளைத் துளுவன், சிறு துளுவன், மட்டி, கருமட்டி, சிங்கன், கூம்பில்லா சிங்கன், கதலி, பாளையங்கோட்டை, ரஸ்தாளி, ரசகதலி, மொந்தன், பேயன், நற்கதலி, பூங்கதலி இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம். நாஞ்சில் நாட்டின் நாணயச் செலாவணியிலும் மிகுந்த வித்தியாசம் உண்டு. ஒரு ரூபாய் நாணயம் அச்சடிக்க, திருவிதாங்கூர் சமஸ் தானத்திற்கு பிரிட்டிஷ் அரசு அனுமதிக்கவில்லை. அதற்குக் கீழ் உள்ள நாணயங்களை அவர்கள் அச்சடித்தனர். அந்த நாணயங்கள் மூன்று வகைப்படும். பணம், சக்கரம், காசு என்று பெயர். பணம் என்பது திருவிதாங்கூர் நாணயத்தில் 4 சக்கரம் மதிப்புடைய வெள்ளி நாணயம். காசு என்பது செப்புக் காசு. குறைந்த மதிப்புடையது. திருவிதாங்கூர் நாணயத்தில் ஒரு சக்கரத்திற்கு 16 காசு வழக்கத்தில் இருந்தது. இந்தக் காசு முன்பு புழக்கத்தில் இருந்த நயா பைசா போல அமைப்பில் இருந்தது. அரை ரூபாய், கால் ரூபாய் நாணயங் களும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்திருக்கின்றன.


நாகர்கோவில் நகரில் ஏராளமான பெரிய பெரிய குளங்கள் இருந்துள்ளன. கள்ளர்குளம் இன்று ஸ்டேடியமாகி விட்டது. இன்றைய முனிசிபல் கட்டடம் சிறைச்சாலையாக இருந்திருக்கிறது. கைதிகளை இக்குளத்திற்கு குளிப்பதற்காக சிறைச்சாலையிலிருந்து கூட்டி வருவார் களாம். அதனால், இதற்குக் கள்ளர்குளம் என்று பெயர். செம்மான் குளம் என்பதுதான் இன்றைய பஸ் ஸ்டாண்டு. பல குளங்கள் இப்போதும் உள்ளன. இவைதான் குளிப்பதற்கு, கால் நடைகளுக்கு என, எல்லா உபயோகத்திற்குமாக இருந்துள்ளன. கிராமியக் கலைத் தொழிலாளர் ஏராளம். பொதுவாக மர வேலையில் இங்குள்ளவர் கைதேர்ந்தவர். வீடுகளில் மரவேலைப்பாடு பிரதானமாகக் காணப்படும். மரங்களில் கடைசல் பிடிப்பது ஒரு கலை. அதற்கு மரங்களை குளத்தில் பல நாள் ஊறவைத்து இருக்க வேண்டும். அதற்கென ஒரு குளம். அதுதான் கடைசல்காரன்குளம். வீடுகளில் தென்னங்கீற்று சாதாரணமாகப் பயன்படுத்தப்படும். அழகும், பல ஆண்டுகள் கெடாமல் இருக்கும் வகையில் இவற்றை உருவாக்கி இருப்பர். இது, இங்குள்ள பிரபலமான கலைப்படைப்பாகும்.


பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள பெரிய இடம், வெள்ளைக்கார இன்ஜினியர் தங்கியிருந்த வீடு. அதைப் பூங்காவாக மாற்ற நினைத்த போது, அந்த வெள்ளைக்காரர், அந்த இடத்தை விட்டுக் கொடுக்க மறுத்தாராம். ஒரே நாளில் சமஸ்தான செல்வாக்கில் அவர் காலி செய்யப்பட்டாராம். இதுவரை, 85 ஆண்டுகளுக்கு முன்புள்ள நாகர்கோவில் நகரை முடிந்த அளவு வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளோம். இதிலும், முழுமையான சித்திரம் சொல்லப்பட்டு விட்டதாகக் கூற முடியாது. நாகர்கோவில் நகரம் செல்வாக்காக இருந்தாலும், அதன் தேவைகள் மிக அதிகமானதாகவே இருந்திருக்கின்றன. பழக்க வழக்கங்கள், கலை, கலாச்சாரம், மொழி, உடை, பாவனைகள். பழமையில் ஊறிப் போன கட்டுப்பெட்டித்தனம், தாய்மொழியே காதில் கேட்க முடியாத கல்வி. நாணய வேறுபாடு, உணவு வகைகளில் தனக்கு என ஒரு நடைமுறை. ஆட்சி, சட்ட திட்டங்களில் தனி மாறுதல் - இப்படியாக அந்த நகரம் இருந்தது என்பது உண்மை.
தொழில் அதிபர்கள், சமூக சேவையில் முன்னணியில் இருந்தவர்கள் மற்றும் தமிழ் எழுத்தாளர்களை வியப்பில் ஆழ்த்திய நமது வரலாற்று நாயகரான, டி.வி.ஆர்., 85 ஆண்டுகளுக்கு முன், நாகர்கோவிலின் ஒரு பகுதியான தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார்.


தழுவிய மகாதேவர் கோவில்

நாகர்கோவில் ஒட்டி உள்ள பகுதி வடசேரி. அங்கு, ‘தழுவிய மகாதேவர் கோயில்’ பெயர் பெற்ற கோயிலாகும். இது, நாகர்கோவில் வடசேரியில் அன்றைக்குப் பிரபலமாக இருந்த கிராமமாகும். ஆரம்பத் தில், தழுவிய மகாதேவர் கோயிலாக இருந்து, பின்னர் தழியல் மகாதேவர் கோயில் என்றாகி, பின்னர் தடிமார் கோயில் என்று ஆகிவிட்டது. கோயிலுக்கான பழம் புராண வரலாறு எதுவும் இல்லை. ஆனாலும், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறப்படு கிறது. கோயிலின் மூலவர் சிவபெருமான். அழகான அமைதியான கோயில். கோயிலுக்கு ஏறும் நடையில் கிழக்காகப் பார்த்து அம்மன் அருள் காட்சி தருகிறாள்.


கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வடசேரி தழியலிங்கம், சுசீந்திரம் தாணுலிங்கம், பூதப்பாண்டி பூதலிங்கம் இம்மூவரில், தழியல் லிங்கமே மூத்தவராகக் காணப்படுகிறார். ஒவ்வொரு வருடமும் தழியல் கோயில் திருவிழா ஆரம்பமான பின், மறுநாள் சுசீந்திரம் தாணுலிங்கம் கோயில் திருவிழா தொடங்குவதில் இருந்து இது உறுதியாகிறது. கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. இரட்டை வரிசையாக சுமார் 30-35 வீடுகள். பிராமணக் குடும்பங்களே இங்கு வசிக்கின்றனர். பெரும்பாலும் ஓட்டு வீடுகளே. தரை செங்கல் பாவி இருக்கும். சுவர்கள் சுண்ணாம்பால் பளபளப்பாகத் தேய்க்கப்பட்டிருக்கும். பல ஆண்டுகளாகியும் அவற்றுள் சில இன்றும் கூட அழகு மாறாமலே இருக்கின்றன.

பழையாறு

ஊருக்குப் பக்கம், ‘பழையாறு’ உள்ளது. அதிலிருந்து குடிதண்ணீர் கொண்டுவர சிறிய பாதை வழியே செல்ல வேண்டும். பெண்களுக்கு அது பழகிப்போன பெரிய வேலை. அன்றைய ஆற்று நீர் மிகச் சுத்தமாக இருக்குமாம். காசு விழுந்தால் பளிச்சென்று தெரியும் அளவு சுத்தமான பளிங்குத் தண்ணீர். சுற்றுப்புறச் சூழல், சுத்தம் பற்றிப் பிரசாரம் இல்லாத காலம் அது. கோயிலுக்குப் பின்புறம் ஒரு பிரமாதமான பெரிய நல்ல குளம். வெளி உபயோகத்திற்காக உள்ளது.நாகர்கோவிலின் ஒரு பகுதியான வடசேரியில் நாலாம் வகுப்பு வரை ஒரு பள்ளிக்கூடம். அது மலையாளப் பள்ளி என்று அன்றைக்கு அழைக்கப்பட்டிருக்கிறது. இன்று அது, அரசு உயர்நிலைப் பள்ளியாகி விட்டது. பள்ளிக்குப் பக்கத்தில் ஒரு சாஸ்தா கோயில் இருக்கிறது.


நான்காம் வகுப்பு முடித்ததும், மேற்கொண்டு படிக்க, குழந்தைகள் நாகர்கோவில் நகருக்குத்தான் போக வேண்டும். ஒத்தக்காளை, ரெட்டைக் காளை வண்டியில், மதிய உணவையும் எடுத்துக்கொண்டு குழந்தைகள் செல்வர். அப்படிப் படிக்கப் போகும் குழந்தைகள், ஊருக்கு ஒன்று இரண்டு இருந்ததே அந்தக் காலத்தில் அதிசயம். இவ்வாறு மாட்டு வண்டியில் நாகர்கோவிலுக்குச் சென்று படித்து வந்த குழந்தை, படித்து வளரும்போதே, தான் பிறந்த பூமியின் விசித்திரங்களை ஒரு பார்வையாளனாக மட்டும் இருந்து பார்க்க மட்டுமே செய்யாமல், பல மாறுதல்கள் இங்கு உருவாக்கப்பட வேண்டும் என்ற தீவிரம் கொண்டவனாக இருந்தான்.


தகவல்கள் உதவி: படேல் சுந்தரம் பிள்ளை, பேராசிரியர் வி.ஐ.சுப்பிர மணியம், சுந்தர ராமசாமி, உமைதாணு, கவிமணியின் நுபல்கள் மற்றும் பல ஆவணக் குறிப்புகள்.Advertisement
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X