குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டு அரிஜனங்களின் நிலை எப்படி இருந்தது? எவ்வளவு சொத்துடையவர்களாக இருந்தாலும், ஏன் ராஜாக்களாக இருந்தவர்கள் கூடத் தாங்கள் அன்னியருக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறோமே என்று நினைக்காத காலமது. சுதேச சமஸ்தானமோ இன்னும் மோசம். கல்வி வளர்ச்சியே இல்லாத காலமது. தான் அன்னியனுக்கு அடிமையாக இருந்தாலும் பரவாயில்லை, தனக்குக் கீழ் பல அடிமைகள் இருக்க வேண்டுமென்பதில் விடாப்பிடியாக இருந்தவர்களே அன்று அதிகம்.
1948ல் மகாத்மா காந்தி தேசிய நினைவு நிதி அமைப்பாளர். 1944ல் இருந்து மூன்று ஆண்டுகள் ஸ்ரீமூலம் சட்டமன்ற உறுப்பினர். 1957ல் தீண்டாமை ஒழிப்புக்கான தமிழ்நாடு அரசின் தங்கப் பதக்கம் பெற்றார். |
தேரூர் டாக்டர் முத்துக்கருப்ப பிள்ளை
அப்போதெல்லாம் டி.வி.ஆர்., அரிஜன இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டார். சேரிக்குச் சென்று சுத்தமாக்குவது, தீண்டாமை விலக்குப் பிரசாரங்கள் செய்வது, அரிஜனங்களுக்கு உதவுவது என் பதைத் தினசரிப் பழக்கமாகக் கொண்டு அவர் நடந்த காலமது. ‘கா அண்ணாச்சி’ என்று அழைக்கப்படும் பி.எஸ்.சுப்பிர மணியப் பண்டாரத்துடன் சேர்ந்து, தீண்டாமை ஒழிப்புப் பிரசாரத்திற் காக, ‘நந்தனார்’ நாடகத்தை நாகர் கோவிலிலும், பின்னர் திருவனந்த புரத்திலும் நடத்தினோம். அதன் மூலம் வசூலான தொகை, அரிஜன சமுதாய நிதிக்காக செலவிடப்பட் டது. இதில் எல்லாம் டி.வி.ஆர்., முன்னணியில் இருந்தார் என்கிறார்.
* ஏ.சி.சுந்தரம் பிள்ளை (படேல் சுந்தரம் பிள்ளை) நாகர்கோவில் பொது வாழ்வில் பெரும் பங்கு கொண்ட முதுபெரும் அறிஞர் படேல் சுந்தரம் பிள்ளை, கொல்லம் ஆண்டு 1085ல் பிறந்தவர். இவரது தொழில்நுட்பத் திறனைப் பாராட்டி லண்டன் தொழில் கல்வி நிலையத்தார் 1935ல் இவருக்கு எப்.சி.ஐ., பட்டம் வழங்கினர். தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டவர். கன்னியாகுமரி மாவட்டத்தின் சமீப 50 ஆண்டுக்கால வரலாற்றை ஆவணங்களோடு சேர்த்து வைத்துள்ளார். |
![]() |
படேல் சுந்தரம் பிள்ளை
அஅந்தக் காலத்தின் அரிஜன முன் னேற்றப் பணிகளில் டி.வி.ஆர்., தீவிர மாக ஈடுபட்டிருந்தார். ஜூன் 13, 1940ல் வடசேரி வி.எஸ்.ஆறுமுகம் பிள்ளை எம்.எல்.சி., தலைமையில் திருவிதாங்கூர் சாம்பவர் மகாஜன சங்கச் சார்பில் ஒரு கூட்டம் நடத் தப்பட்டது. அக்கூட்டத்தில் அரிஜனங்களின் முன்னேற்றத்தின் அவசியம் குறித்து டி.வி.ஆர்., அருமையாகச் சொற் பொழிவு ஆற்றினார். பேச்சோடு மட்டும் நிற்பதில்லை; சேரிகளுக்கு நாங்கள் சென்று அரிஜன சகோதரர் களைக் கூட்டி வைத்து, அவர்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேற்ற வும் பாடுபட்டோம் என்கிறார்.
* சுவாமி செல்லையா விவசாயத் தொழிலாளி. குமரி மாவட்ட அரிஜனங்களின் அவல நிலை கண்டு இளம் வயதிலேயே வேதனைப்பட்டு அரிஜன முன்னேற்றத்திற்காக உழைக்கச் சபதம் ஏற்றார். இவரது அரிஜனத் தொண்டுகளைப் பாராட்டி, அன்றைய முதல்வர் காமராஜர், அமைச்சர் கக்கன் ஆகியோர் தங்கப் பதக்கங்கள் வழங்கி உள்ளனர். | ![]() |
சுவாமி செல்லையா
அரிஜன சேவைகளைப் பாராட்டி தமிழக அரசு தங்கப் பதக்கம் வழங் கிய, கன்னியாகுமரி மாவட்டத்தின் பழம்பெரும் அரிஜனத் தொண்டர் சுவாமி செல்லையா தன் நினைவு களைக் கூறுகிறார் . . . நான் இப்போது சொல்லப் போவது 45 ஆண்டுகளுக்கு முன் உள்ள செய்திகளாகும். அன்றைய நாட்டு நிலை, சமூகப் பிரச்னை போன்றவற்றை நினைவில் கொண்டு இதைப் பார்க்க வேண்டும். அந்தக் காலங்களில் சமூக நீதிக்காக அரிஜனங்களிடையே பல கூட்டங்கள் நடைபெறும். இம்மாதிரி நடைபெற்ற கூட்டங்களுக்கு டி.வி.ஆர்., பலமுறை தலைமை தாங்கியுள்ளார்.
டாக்டர் நாயுடு அன்றைக்கு அரிஜனங்களின் இயக்கத் தலைவர். அவருடனும் ஜீவானந்தம் போன்றவர்களுடனும் பல ஊர்களுக்கு அரிஜன முன்னேற்றக் கூட்டங்களுக்கு டி.வி.ஆர்., போவதுண்டு. எங்களுக்குப் பக்கத்துணை அவர்தான். 1960ல் அரிஜனத் தொண்டிற் காக டாக்டர் நாயுடுவுக்கு அரசு பதக்கம் தந்த போது, டி.வி.ஆர்.,க்கும் தந்ததாக என் நினைவு. பொருளாதாரத்திலும், கல்வியிலும் அரிஜனங்கள் முன்னேற வேண்டு மென்று அடிக்கடி சொல்வார். அரி ஜனங்களிடையே அடிக்கடி தோன்றும் பூசல், சிறு பொருளா தாரப் பிரச்னைகளினால் தான் வரும். டி.வி.ஆர்., தானே அந்தச் சிக்கல்களைத் தீர்க்கப் பணம் தந்து, பிரச்னைகள் கிராமங்களில் எழா மல் பார்த்துக்கொள்வார். போலீஸ், கோர்ட் இவற்றுக்கு அரிஜனங்கள் செல்வதை அவர் சுத்தமாக வெறுத்தார், தடுத்தார் என்று கூடச் சொல்லலாம்.
* தேரூர் சிவன்பிள்ள |
டாக்டர் எம்.இ.நாயுடு உடன் 1930-40 வரை சேர்ந்து நாஞ்சில் நாட்டில் அரிஜன சேவைகளில் தீவிரமாக உழைத்தார். 1938, 1939 ஆண்டுகளில் கைதியாக 14 மாதங்களுக்கு மேல் சிறை வாழ்க்கை. 1942 போராட்டத்தில் ஏழு மாத சிறை அனுபவித்தார். இவர் மீது ஜன., 6, 1947ல் சுசீந்தரம் தேரில் கொடி ஏற்றியதற்காக கிரிமினல் வழக்கு போடப்பட்டது.
குடும்பத்துடன் 1946ல் சென்னையில் காந்திஜியைச் சந்தித்தார் சிவன் பிள்ளை. இதன் எதிரொலியாக வக்கீல் தொழிலை விட்டு விட்டுத் தேரூரில் கஸ்தூரிபாய் ஆதாரப்பள்ளியைத் தொடங்கினார்; இன்று அது நடுநிலைப்பள்ளி. 1950 முதல் 1952 வரை இரண்டாண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராயிருந்தார்.
தேரூர் சிவன்பிள்ளை
இந்தப் பகுதியில் 35 ஆண்டு களுக்கு முன் தீண்டாமை ஒழிப் புப் போர் தீவிரமாக நடைபெற்றது. அதற்குத் தலைவர் டாக்டர் எம்.இ.நாயுடு. அந்த இயக்கத்தில் காசிப் பண்டாரமும், பிரபல காந் தியவாதியும், எழுத்தாளராகவும் இருந்த பொ. திரிகூடசுந்தரம் பிள்ளை, படேல் சுந்தரம்பிள்ளை, டி.வி.ஆர்., நான் ஆகியோர் இருந் தோம். இதில் முழுமூச்சாகச் செயல்பட்டவர் டி.வி.ஆர்., தான். அப்போது இந்தப் பணிக்காகத் ‘தீண்டாமை விலக்குச் சங்கம்’ என்ற ஒரு ஸ்தாபனத்தையும் வைத்திருந்தோம். மேல்ஜாதிக்காரர்கள், என அழைக்கப்பட்ட நாங்கள், கிராமங்களுக்குப் போய் காந்தி பஜனை செய்வோம்.
அப்போது கையாண்டது, ‘தாம்பூல விழா’ என்ற முறையாகும். சேரிகளுக்குப் போனதும் அரிஜனங்களின் வீடு வீடாகப் போய் தாம்பூலம் கொடுத்து, அவர்களை ஊரம்மன் கோயிலில், (சேரிக்குச் சேரி ஒரு கோயில் இருக்கும்) கூட்டுவோம். பின் அவர்கள் முன் னேற்றத்திற்காக பிரசாரம் செய்வோம். அப்போது சிறுசிறு வினியோகங் களும் அனைவருக்கும் தருவோம். சுண்டல், பொங்கல் இவற்றைத் தயாரித்துக்கொண்டு போய் நாங்களே பரிமாறுவோம். இதில் எல்லாம் முன்னிலையில் நின்றவர் டி.வி.ஆர்.,
அரிஜனங்களின் பெருமையை விளக்க நாகர்கோவிலில், ‘நந்தனார்’ நாடகம் போட்டோம். இறைச்சகுளம் ஐயர் ஒருவர் - பெயர் ஞாபக மில்லை, அதில் வேதியராக அருமையாக நடிப்பார். அப்போது பாபு ராமனுஜ தாஸ் என்ற நல்ல தொண்டர், கழுத்தில் தப்பட்டையை மாட்டி தானே அதை அடித்துச் சேரி மக்களை ஒன்று கூட்டுவார். அந்த இயக்கத்திற்கு எல்லாம் மிகவும் உதவியவர், எங்களுடன் சேரிகளுக்கு அலைந்தவர் டி.வி.ஆர்., இதற்கெல்லாம் பணம் வேண்டுமே? அரிஜன இயக்கத்தில் நாயுடு ஈடுபாடு கொண்டவர்தான். ஆனால், பணம் கொடுப்பதில் கொஞ்சம் கசறுவார். ஆனால், எந்தச் சமயம் போய் கேட்டாலும், 100 ரூபாய்க்குக் குறையாமல் டி.வி.ஆர்., தருவார். அந்தக் காலத்தில் 100 ரூபாய் சாதாரணமல்ல என்கிறார்.
‘நந்தனார் நாடகம்’ பற்றி அவர் விளக்குகையில், ‘நாடகத்தை நடத்த சாமானியமாக யாரும் அனுமதிப்பதில்லை. கடுமையான எதிர்ப்பு. நாடகத்திற்கு யாரும் போகக்கூடாது என்று அந்தந்த ஊர் மேல் ஜாதிக்காரர்கள் நாடகம் நடக்கப் போகும் இடத்தின் பக்கமே அன்றைக்குச் செல்லமாட்டார்கள். டி.வி.ஆர்க்கு ஒரு தனிக் குணம் உண்டு. நியாயமான ஒன்றைச் செயல்படுத்த முனையும் போது, அதற்கு எதிர்ப்பு வந்தால், மிக்க மகிழ்ச்சியுடன் அதை வரவேற்று முறியடிப்பதில் அவருக்கு அதிக ஆசை உண்டு. கடுமையான எதிர்ப்புக்கு இடையே நாடகக் கொட்டகையில், முன்வரிசையில் சேர் போட்டு மிக உற்சாகமாக, வழக்கமான அவரது பாணியில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருந்ததை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை என்கிறார்.
வழிகாட்டியது
திருவிதாங்கூர் சமஸ்தானம் தனது ஆளுகைக்குட்பட்ட திருக் கோயில்களை அரிஜனங்களுக்காக, இந்தியாவிலேயே முதன் முறையா கத் திறந்து விட உத்தரவிட்டது. நவ., 12, 1936ல் இதற்கான உத்தரவை மகாராஜா பிறப்பித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
நமது இந்து மதத்தின் மேல் பெரும் நம்பிக்கை உள்ளவன் என்ற முறையிலும், நமது தெய்வீகப் போதனைகள், நமது சகிப்புத் தன்மை இவைகளின் அடிப்படையில் பிறப்பு அல்லது ஜாதி அல்லது சமுதாயக் காரணங்களுக்காக நமது இந்து சமுதாயத்தினருக்கு, இந்து மதத்தின் சலுகைகள் எதுவும் மறுக்கப்படக்கூடாது என்று கருதுகிறோம்.
நமது இந்து மதம் மாறி வரும் காலத் தேவைகளுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. பல நுபற்றாண்டு வரலாறுகள் இவற்றை நமக்கு எடுத்துக்காட்டவே செய்கின்றன. இவற்றைக் கவனத்தில் கொண்டு நல்ல சூழ்நிலையைப் பாது காக்கவும், மதச்சடங்குகளைப் பேணவும், நமக்குள்ள விதிகளுக்கு உட்பட்டு இந்த உத்தரவைப் பிறப்பிக்கிறோம். இனிமேல் பிறப்பு அல்லது ஜாதி அடிப்படையிலான எந்த ஓர் இந்துவும், நமது கட்டுப் பாடுகளுக்குட்பட்டுள்ள திருக்கோயில்களில் நுழைய எந்த ஒரு கட்டுப்பாடும் இனி இருக்கக்கூடாது என்று உத்தரவிடுகிறோம்.
காந்தி அடிகள்
காந்தியடிகள் 1927, 1934, 1936 ஆகிய ஆண்டுகளில், நாகர்கோவிலுக்கு வந்திருக்கிறார். சர்.பி.சி.இராமசாமி ஐயர், தீண்டாமை ஒழிப்பில் தீவிரம் காட்டி, கோயில்களுக்குள் அரிஜனங்கள் செல்ல வகை செய்ததைப் பாராட்டுவதற்காகவே, 1936ல் காந்தியடிகள் நாகர் கோவிலுக்கு வந்திருக்கிறார். திருவிதாங்கூர் சமஸ்தானம் அரிஜனங் களுக்குக் காட்டிய சலுகையை எஸ்.எல்.பி., பள்ளி மைதானத்தில் காந்தியடிகள் பாராட்டிப் பேசியுள்ளார்.
தீண்டாமை வெறி இப்பகுதியில் மிகக் கொடுமையாக இருந்திருக் கிறது. கொடுமை பலமாக இருந்ததால், உலக மாற்றங்களை, சமூக அமைப்புகளின் மாறுதல்களை விரும்புவோர், இந்தப் பழமைப் போக்கை எதிர்த்து துணிச்சலாகப் போராடவும் முன் வருவது இயற்கைதானே! அரிஜனங்களை மிகவும் அன்புடன் அரவணைக்கும் போக்கு, இங்கு முதல் முதல் தீவிரமாக உருவானதற்கும் சரித்திரப் பூர்வமான காரணங்கள் பல இருந்தன. அரிஜனக் கொடுமைகளை நீக்குவதற்குப் பலர் முன்வந்து செயல் பட்டதற்கான சான்றுகளும் உள்ளன. தீண்டாமைக் கொடுமை உச்சத்தில் இருந்த சமஸ்தானம் அது. அதை வலுக்கட்டாயமாகக் கடைப்பிடிக்கும் மக்களுக்குள்ளே நியாய உணர்வோடு அதை எதிர்த்து முறியடிக்கும் போர்க்குணமும் எழுந்துள் ளது என்பதையும் கவனத்தில் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்
ஆர்.எஸ்.ஆறுமுகம்
எம்.பி., - எம்.எல்.ஏ., போன்ற பதவிகளில் இருந்த ஆர்.எஸ்.ஆறுமுகம் தனக்கும், டி.வி.ஆர்க்கும் இருந்த 30 ஆண்டுக்கால தொடர்புகள் பற்றிக் கூறுகிறார்:
பொது வாழ்க்கையில் பல சமயம் நான் சோர்வடைந்து அவரிடம் செல்வேன். அப்போதெல்லாம் என்னை உற்சாகப்படுத்தி அனுப்புவார். நான் ஒரு தாழ்த்தப்பட்டவன் என்ற காரணத்திற்காகவே என் மீது அதிக அன்பும், பாசமும், பரிவும் அவர் காட்டி வந்தார். காந்திஜியின் உண்மையான சீடராகவே அவர் எனக்குக் காட்சி தந்தார். நான் பார்லிமெண்ட் உறுப்பினராக இருந்தபோது, ‘அரி ஜனங்கள் முன்னேற வேண்டும். அது ஒன்றுதான் நாடு முன்னேற வழி. அதற்கான திட்டங்களைப் பார்லிமெண்ட்டில் கொண்டு வாருங்கள்’ என அடிக்கடி என்னிடம் கூறுவார் என்று கூறினார்.
தங்கையா
தங்கையா அன்றைய திருவிதாங்கூருடன் இணைந்திருந்த தேவி குளம், பீர்மேடு பகுதியில் காங்கிரசைத் தோற்கடித்து வெற்றி பெற்ற (தி.தா.கா., அரிஜன) சட்டமன்ற உறுப்பினர். இது ஒரு இரட்டை மெம்பர் தொகுதி.
இனி, தங்கையா கூறுவதை கேட்கலாம். . .
எங்களுக்கு ஒரே தலைவர் குஞ்சன் நாடார்தான். அவருடன் நான் பலமுறை திருவனந்தபுரம், ‘தினமலர்’ ஆபீசுக்குப் போயிருக்கிறேன். குஞ்சன் நாடார் பெரிய படிப்பாளி. மலையாளம் சரளமாகப் பேசுவார். நான் சட்டமன்ற உறுப்பினர் என்ற போதிலும், இவ்விரு வருக்கும் இடையில் நான் மிகச் சாதாரணமானவன்தான். இருவரும் பேசுவதைப் பக்கத்தில் உட்கார்ந்து கேட்பேனே தவிர, அதில் கலந்துகொள்ள மாட்டேன். குஞ்சன் நாடார் போன்றோரே டி.வி. ஆரிடம் ஆலோசனை கேட்கும் அளவில் அவர் இருந்தார். அவர் ஒரு இராஜதந்திரி. இது எப்படி இருந்தாலும் டி.வி.ஆர்., எங்கள் இருவரையும் ஒரே பாணியில்தான் வரவேற்று மரியாதை கொடுப்பார் என்றார். பள்ளிக்கூடப் பருவம் முதல், தனது கடைசிக்காலம் வரை அரிஜனங்கள் மீது தனிப்பாசம் டி.வி.ஆருக்கு இருந்தது. அரசியல் வாதிகளோ, மற்றவர்களோ பாசம் வைத்திருந்தால் அதற்குக் காரணங்கள் இருக்கலாம். ஆனால், டி.வி.ஆர்., உளப்பூர்வமாக அரிஜனங்கள் முன்னேற்றம் காணாத ஒரு தேசத்தில், மற்ற முன்னேற்றங்கள் சாத்தியப்படாது என்று திடமாக நம்பினார். இதுவும் அவரை நமக்கு வித்தியாசமானவராகக் காட்டுகிறது.