ஊருக்குழைத்திடல் யோகம்


இளமைக் காலம் முதல், பொதுப் பணிகள் ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற அடக்க முடியாத ஆர்வம் டி.வி.ஆரிடம் இயல்பாகவே இருந்து வந்துள்ளது. ‘தினமலர்’ தொடங்கு வதற்கு முன் அன்றைய நாஞ்சில் நாட்டில் அவர் பொதுக் காரியங்கள் பலவற்றை தானே முன்னின்று நிறைவேற்றி உள்ளார். ஒரு தனி மனிதர் தாம் எண்ணும் பொதுக் காரியங்களை நிறைவேற்ற ஒரு சக்திமிக்க ஆயுதம் தேவை என்ற நினைப்பிலேயே அவர் பின்னர் பத்திரிகை தொழிலைத் தேர்ந்தெடுத்தார் என்று கூடச் சொல்லலாம். அன்றைக்கு அவர் ஈடுபட்டுச் சிறப்பாகச் செய்து வைத்த சில பொதுப் பணிகளைப் பார்க்கலாம்.


நாகர்கோவில் குடிநீர்த் திட்டம்


நாகர்கோவில் நகருக்கான இன்றைய முக்கடல் குடிநீர்த் திட்டம் குறித்து டி.வி.ஆர்., அவர்களே கூறுகிறார் . . .
திருவிதாங்கூர் இராஜவம்சத்தினர், பரம்பரையாகவே சரித்திரப் பூர்வமான காரணங்களால் நாஞ்சில் நாட்டு மக்களிடத்தில் தனிப்பற்று உடையவர்களாக இருந்தனர். திவான் சர்.சி.பி.இராமசாமி ஐயருக்குத் தமிழ் மக்களிடம் பாசம் மிகவும் அதிகமாக இருந்தது. நாகர்கோவில் நகரம் குடிதண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டி ருந்தது. அழகிய பாண்டியபுரம், கன்னியாகுமரி சாலைக்குக் கீழ்ப்பகுதி முழுவதும் எங்கு தோண்டினாலும் உப்பு கலந்த நீரே வரும். அந்தச் சாலைக்கு மேற்குப் பகுதியில் கிணறுகளில் நல்ல தண்ணீர் உண்டு. அதுவும் எல்லா இடங்களிலும் நல்ல தண்ணீர் கிடைக்கும் என்று கூறுவதற்கில்லை. பெரும்பான்மையான இடங்களில் கிணற்றின் ஆழம் 80 முதல் 100 அடி வரை இருந்தது.


குடிதண்ணீருக்காக மக்கள் வெகுகாலமாகப் போராடி வந்தனர். லாரிகளில் பெரிய ‘டாங்க்’ வைத்து நல்ல தண்ணீரைக் கொண்டுவந்து ஒவ்வொரு வார்டிலும் குறைந்த விலைக்கு விற்று வந்தனர். சோறு சமைக்கவும், குடிக்கவும் மட்டும் பொதுமக்கள் அந்த தண்ணீரை வாங்கிக் கொண்டு, மற்ற தேவைகளுக்குக் கிணற்று நீரை உபயோகித்து வந்தனர்.
இந்த நிலைமையில் சர்.சி.பி.இராமசாமி ஐயர் நாகர்கோவில் குடிதண்ணீர் திட்டத்திற்காக பத்து இலட்ச ரூபாய் அனுமதித்து, பாதி மான்யமாகவும், மீதம் கடனாகவும் தரப்படும் என்று அறிவித்தார்.


நாகர்கோவிலில் இருந்து ஏழு மைல் தொலைவில், வடதிசையிலிருக் கும் முக்கடல் என்ற ஊரில் ஒரு சிறிய அணையைக் கட்டி, அங் கிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வருவதுதான் திட்டத் தின் தொடக்கம். தீவிரமாக வேலை நடந்து கொண்டிருக்கும்போது, இராவ்பகதுவர் நீலகண்டய்யர் என்ற ஓர் ஓய்வுபெற்ற இன்ஜினியர், திடீரென்று ஓர் அபாய அறிவிப்பை விடுத்தார். அது பின்வருமாறு:


அரசாங்கத்தாரால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த குடிநீர்த் திட்டம் வீண் பணச்செலவு; நகரசபையையும், மக்களையும் வருங் காலத்தில் பெரிய கடனாளியாக்கிவிடும். அதற்குப் பதில், செலவு மிகக் குறைந்த ஒரு திட்டத்தை நான் வகுத்திருக்கிறேன். அதை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லி ஒரு நீண்ட மனுவை, சர்.சி.பி.இராமசாமி ஐயரிடமும், மகாராணி அம்மையாரிட மும் கொடுத்தார். அவர் ஒரு பெரிய இன்ஜினியர். ஆகவே, அவரது திட்டத்தை அலட்சியம் செய்வதிற்கில்லை. அவரது திட்டம் நியாயமாக இருக்கும் என்று கருதி, அதைக் குடிநீர் வாரியத்தின் பரிசீலனைக்கு அரசாங்கம் அனுப்பி வைத்தது. நாகர்கோவில் நகரக் குடிநீர்த் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டது போலவே தோன்றியது.


நீலகண்டய்யரின் திட்டம் இதுதான்: நாகர்கோவில், கோட்டார் பகுதிகளில் அச்சன்கிணறு என்று ஒரு கிணறும், ஜில்லாக் கோர்ட் காம்பவுண்டிற்குள் இருக்கிற ஒரு கிணறும், கிருஷ்ணன் கோவில் கிணறும் வற்றாத கிணறுகள். இவற்றை நன்றாக ஆழப்படுத்தி, மேல்நிலைத் தொட்டி கட்டி, மின்சார பம்புசெட் வைத்து, நகரை மூன்று பிரிவுகளாக்கி, குழாய்கள் மூலம் எல்லா வீடுகளுக்கும் தண்ணீர் கொடுத்துவிடலாம். மிகக்குறைந்த செலவில் இத்திட்டம் அமலாகும் என்றும், திட்ட விளக்கத்தில் கூறப்பட்டிருந்தது. நான் அடிக்கடி திருவனந்தபுரத்திற்குப் போய்வரக்கூடியவன். ஒரு தடவை போகும்போது, ஒரு முக்கியக் காரியமாகத் தலைமைச் செயலகத்திற்குப் போனேன். தலைமைச் செயலக அதிகாரி என்னிடம் கூறினார்: ‘உங்கள் ஊர்க் குடிநீர்த் திட்டம் கோவிந்தா ஆகிவிடும் போலிருக் கிறதே!’ என்று. ‘என்ன. . . ஏது. . .’ என்று நான் பரபரப்புடன் கேட்க, மேலே கண்ட விஷயம் முழுவதையும் என்னிடம் கூறினார். உடனே எனக்கு மனதில் பெரிய அச்சம் வந்துவிட்டது. கிணற்று தண்ணீர் இறைப்பு என்பது நடைமுறைக்கு ஒத்துவராது என்பது என் கணிப்பு. இன்னும் இதை வெளிப்படையாகச் சொன்னால், பைத்தியக்காரத்தனமான திட்டம் என்றே தோன்றியது.


உடனே நான் திருவனந்தபுரத்தில் எனக்குள்ள வேலையை அவசர அவசரமாக முடித்துவிட்டு, நாகர்கோவிலுக்கு வந்து, ஒரு மனுவைத் தயாரித்தேன். அதில், கிணற்றுத் திட்டம் வேண்டாம். அரசாங்கம் ஏற்கனவே தயாரித்த திட்டம்தான் நாகர்கோவில் மக்களுக்கு வேண்டும். அதற்கான கடன் சுமையைத் தாங்க நாங்கள் தயார் என்று விபரமாகக் குறிப்பிட்டேன். அந்த மனுவை நானே நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு எடுத்துச் சென்று, அவர்களிடம் விஷயத்தை எடுத்துக் கூறி, அந்த மனுவில் எழுபது, எண்பது வழக்கறிஞர்களிடம் கையெழுத்து வாங்கினேன். மனுவை அரசாங்கத் துக்கு, திவானுக்கு, அரண்மனைக்கு என்று தனித்தனியாக அனுப்பி வைத்தேன்.


இதுதவிரவும், அப்பொழுது நகரசபைத் தலைவராக இருந்த என் நண்பர் சத்திய வாகீஸ்வர ஐயரிடம் நாகர்கோவிலுக்கு வர இருக்கும் ஆபத்தை விளக்கினேன். அவர் ஒரு பி.இ., பட்டதாரியான தால், அவருக்கு முழு விஷயமும் விளங்கிவிட்டது. இருவரும் கலந்து நகரசபைக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டினோம். அதில் கலந்துகொள்ள நீலகண்டய்யருக்கும் விசேஷ அழைப்பு அனுப்பப் பட்டிருந்தது. அவரும் வந்து தனது திட்டத்தைக் கூட்டத்தில் விளக்கிச் சொன்னார். ஓர் உறுப்பினருக்குக் கூட அது சரியெனப்பட வில்லை.


உடனே அவரது திட்டத்தை நிராகரித்து, அரசின் முந்தைய திட்டத்தை அமலாக்கக் கோரியும், கடன் பொறுப்புக்களை ஏற்பதாக வும் ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி, மகாராஜாவிற்கும், திவானுக்கும் அடுத்த நாள் அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் குடிநீர் வாரியப் பொறுப்பாளர் பாலகிருஷ்ணராவ் கிணற்றுத் திட்டத்தில் உள்ள மூன்று கிணறுகளையும் சோதித்துக்கொண்டிருந் தார். பொதுமக்கள், நகரசபை மனுக்களைப் பார்த்து அரசாங்கம் விழித்துக் கொண்டது. திரைமறைவில் ஏதோ சூது நடக்கிறது என்றும் அது கருதியது. முதல் திட்டத்தை கைவிடும் எண்ணத்தை அவர்கள் மாற்றிக்கொண்டனர்.


‘ஒவ்வொரு கிணற்றிலும் 3 இஞ்ச் விட்டமுள்ள பம்பு வைத்து 15 நிமிடம் அடித்தவுடன் கிணறு வற்றிவிடுகிறது. 15 நிமிடம் தண்ணீர் ஏற 12 மணி நேர இடைவெளி வேண்டும். ஆகவே இது அர்த்தமற்றது. தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றும் அறிக்கை சமர்ப்பித்தார் பாலகிருஷ்ணராவ். இது கிடைத்தவுடன் மகாராஜாவும், திவானும் பழைய திட்டத்தை வேகமாக நிறைவேற்ற உத்தரவு போட்டனர்.


பின்னர் ஒரு நாள் நான் பாலகிருஷ்ணராவைச் சந்தித்து நன்றி கூறினேன். அப்போது அவர் என்னிடம் சொன்னார்: நீலகண்டய்யர் ஒரு பெரிய இன்ஜினியர் என்பதால், அவரது திட்டம் ஏற்கப்பட்டு நாகர்கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட பத்து லட்ச ரூபாய் கோட்டயத்திற்கு மாற்றி உத்தரவாகிவிட்டது. தக்க சமயத்தில் நீங்கள் அனுப்பிய மனு வந்தது, நகரசபைத் தீர்மானமும் உடனே அதைத் தொடர்ந்து வந்தது. இந்த நெருக்குதல் காரணமாக போட்ட ஆர்டரை நிறுத்தி (அதாவது கோட்டயத்திற்கு போக வேண்டிய பணத்தை நிறுத்தி) கிணற்றுத் திட்டத்தைப் பரிசோதிக்கக் கூறினர். இப்போது எல்லாம் சுமூகமாக முடிந்தது. இனி விரைவில் நாகர்கோவிலுக்குக் குடிநீர் தந்துவிடுகிறேன் என்று கூறினார்.


ஒரு பெரிய விஷயம் தடைபடாமல் முடிவதற்கு என்னுடைய ஒரு சிறு முயற்சி காரணமாக இருந்தது. இதை நினைத்துப் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. சில காரியங்கள் சில வேளை களில் நடைபெறாமல் போனால், இருபது, முப்பது வருடம் கழித்துத் தான் நடக்கும் என்ற நிலை வந்துவிட்டது. ஒரு சிறிய உதாரணம், பி.எஸ்.குமாரசாமி ராஜா முதல் மந்திரியாக இருந்தபோது, இராஜ பாளையம் நகருக்குக் குடிநீர்த் திட்டம் வந்தது. இராஜாவோ, தான் முதன்மந்திரியாக இருக்கும்போது தன் ஊருக்குச் செய்தார் என்று கூறுவார்கள் என யோசித்தார். தன்னிடம் அதிகாரம் இருந்தும் கூட, அவரது நியாயமான போக்குக் காரணமாக அதை செய்யாமல் தள்ளிப்போட, இராஜபாளையம் எவ்வளவு கஷ்டப்பட்டது என்பது எனக்குத் தெரியும் என்றார்.

காலா காலத்தில் பணியைத் திட்டமிட்டு முடுக்கிவிடுவதில் டி.வி.ஆர்., சளைத்ததே இல்லை. ஜூன் 20, 1945ல் திருவனந்தபுரம் இளையராஜா மார்த்தாண்ட வர்மா நாகர்கோவில் குடிநீர்த் திட்டத்தை தொடங்கி வைத்தார். மக்கள் தொகை 33 ஆயிரம். நாகர்கோவிலில் இருந்து 12 கி.மீ., துபரத்தில் முக்கடல் குடிநீர்த் தேக்கம் அமைக்கப்பட்டது.நாகர்கோவில் குடிநீர்த்திட்ட அனுபவங்கள், டி.வி.ஆருக்கு, குடிநீர்த் திட்டங்கள், அதற்கான நடைமுறைகள், செயல்படுத்துவதில் காட்ட வேண்டிய ஊக்கம் இவற்றை மிகவும் தெளிவாக்கி இருந்தது.


கோவில்பட்டி பெரிய நகரம், தாலுகாவின் தலைநகர். அது போல அதை அடுத்துள்ள எட்டயபுரம் நகருக்கும் பல சிறப்புக்கள் உண்டு. இவை வானம் பார்த்த பூமி, குடிதண்ணீர் இங்குக் கிடையவே கிடையாது. இருந்த ஒருசில கிணற்றுத் தண்ணீரை விற்றே சிலர் லட்சாதிபதியாகி விட்டனர். பிரச்னை தீர வேண்டுமென்றால், அங்கிருந்து 35 கி.மீ., துபரத்தில் உள்ள தாமிரபரணிக்கு செல்வதைத் தவிர வேறு வழியே கிடையாது. 20 ஆண்டுகளாக இதற்காகக் கடும் முயற்சி. இதில் ஈடுபட்டவர்களும் மக்களும் சோர்ந்து போகாமல் தொடர் செய்திகள், கட்டுரைகள் வெளியிட்டு, ‘தினமலர்’ தனது முழுப்பங்கையும் செலுத்தியிருந்தது. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் இத்திட்டம் பற்றி ஏதாவது சிறு தகவல் தந்தாலும் உடனே அது, ‘தினமலர்’ இதழில் மிகப் பெரியதாக வரும். அப்பகுதி நிருபர் இந்தச் செய்திகளுக்காகக் கடுமையாக அலைந்து வேலை செய்ய டி.வி.ஆர்., தனி உத்தரவே போட்டிருந்தார். கோவில்பட்டி குடிநீர்த் திட்டம் நிறைவேறத் ‘தினமலர்’ எடுத்த முயற்சிகளை 15 ஆண்டுக்கால, ‘தினமலர்’ இதழ் நெடுகப் பார்க்க முடிகிறது.


நாம் இதுவரை டி.வி.ஆரின் சமுதாயப் பார்வைகளையும், சமுதாயப் பணிகளையும் பார்த்தோம். இவை அனைத்தும், ‘தினமலர்’ தொடங்கு வதற்கு முன், 30 ஆண்டுகள் அவரால் நடத்தப்பட்ட பணிகளாகும்.


பேராசிரியர் டாக்டர் வி.ஐ.சுப்பிரமணியம் இதுபற்றி விமர்சிக் கையில்: இப்படிப்பட்ட குணநலன்கள், செயல்களை நாங்கள், ‘கடல் வட்டம்’ என்போம். கடலில் முதலில் ஒரு சிறு புள்ளி வட்டம் தோன்றி, அது, அடுத்தடுத்துப் பெரிதாகிக் கொண்டே பலவட்டங் களாகப் பெருகும். அதை, பொதுநலத் தொண்டுள்ளவர்களது வாழ்க்கையிலும் பார்க்கலாம். டி.வி.ஆர்., தனது கிராமத்தில் இருந்த காலத்தில் அக்கிராமக் கமிட்டிக்கு அவர்தான் தலைவர். ஏற்கனவே இருந்த கல்யாண மண்டபத்தைப் புதுப்பித்துப் பழைய பாத்திரங்களை விற்று, நல்ல பாத்திரங்கள் வாங்கி பயன்படுத்த முன் வந்ததும், தழுவிய மகாதேவர் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டதும், நல்ல வாசகசாலை அமைத்துப் பலரின் அறிவு விருத்திக்குப் பாடுபட்டதை யும், அப்பகுதி மக்கள் இன்றும் பெருமையுடன் கூறுகின்றனர். இதுதான் அவரது வாழ்க்கை என்னும் கடலில் தோன்றிய, முதல் கடல் வட்டமாகும்.


அதன்பின்னர், நாகர்கோவில் நகரில் மேற்கொண்ட பணிகள். அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டப் பணிகள். அதன் பின்னர் தமிழர், தமிழர் உரிமைகளுக்கானப் பிரச்னைகள். பின்னர் கன்னியாகுமரிக்குக் காஷ்மீரில் இருந்து ரயில் பாதை இணைப்பு. கன்னியாகுமரியில் ஒரு பல்கலைக்கழகம். இப்படியாகப் பிறந்த ஊர், அவ்வூரின் தலைநகர், மாவட்டம், மொழி, இனம் என்றெல்லாம் இந்தக் கடல் வட்டங்கள் பெரிதாகிக் கொண்டே செல்வதைப் பார்க்கலாம். இதுவே பின்னர் மிகவும் பெரிதாகி திருநெல்வேலி மாவட்டம், மதுரை, ராமநாதபுரம் மாவட்டம், திருச்சி, சென்னை, கோவை என்றெல்லாம் மக்கள் பிரச்னைகளில் அவரை, அவரது பத்திரிகை மூலம் ஆழமாகப் பார்க்க வைத்தது என்று கூறினார்.


வி.ஐ.சுப்பிரமணியத்தின் விமர்சனம் மிகச் சரியானதே என்ற முடிவுக்கு டி.வி.ஆர்., வந்து வெகு காலமாயிற்று. தேசமும் சுதந்திரம் பெற்றுவிட்டது. இனி நாஞ்சில் நாட்டு மக்கள் பிரச்னையைச் செயலாக்கத் தனக்கு ஒரு பெரிய கருவியைத் தயார் செய்தாக வேண்டும் என்ற உந்துதலின் காரணமாகவே அவர் பத்திரிகைத் தொழிலில் காலடி எடுத்து வைத்துள்ளார்.


டி.வி.ஆரது பொதுநலப் பணிகள் சில: ஒவ்வொரு பணிக்கும் அவர் தனித்தனிக் குழு அமைத்து, அவர் களை ஜனநாயகப் பூர்வமாக இயங்க அனுமதித்திருந்தார். தன்னுடன் பழகிய நண்பர்கள் பலரை இப்படிப்பட்ட இயக்கங்களில் ஒருங்கிணைத் துக்கொண்டார். தனது நண்பர்களைத் தன்னுடன் பழகியவர்களை அவர் கடைசிக்காலம் வரை மறக்கவே இல்லை. அது ஒரு குடும்ப பாசமாகவே அவரிடம் வளர்ந்திருந்தது.

கவிமணி

தேசிய விநாயகம் பிள்ளை (கவிமணி) ஜூலை 14, 1876ல் தேரூரில் பிறந்தார். தேரூரில் ஆரம்பக் கல்வி. கோட்டாரில் ஆங்கிலப் பள்ளியில் மெட்ரிக்குலேஷன். பின்னர் கல்லூரிப் படிப்பு. 19ம் வயதிலேயே குருவின் ஆணையின் பேரில் தேரூரில் குடி கொண்டுள்ள அம்பாளின் பெயரால், "அழகம்மை ஆசிரிய விருத்தம்' எனும் சிறு நூலை வெளியிட்டார்.

கோட்டார் ஆரம்பப் பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி, திருவனந்தபுரம் பெண்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி இங்கெல்லாம் ஆசிரியர் பணி. 1936ல், 'காந்தளூர்ச் சாலை' ஆங்கில ஆராய்ச்சி நூல் வெளியிடப்பட்டது. 1940ல் சென்னை மாநிலத் தமிழ்ச்சங்க 7வது ஆண்டு விழாவில், "கவிமணி' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

மலரும் மாலையும், நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி, உமர் கயாம் பாடல்கள், இளந்தென்றல் போன்ற ஏராளமான புகழ் பெற்ற நூல்களைத் தமிழ் உலகிற்கு வழங்கியவர். கவிஞரது 70வது ஆண்டுப் பாராட்டு விழா, 1945ல் நாகர்கோவிலில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.


கவிமணிக்கு முதல் பாராட்டு விழா

டி.வி.ஆர்., கூறுகிறார்:


ககவிமணி தேசிய விநாயகம் பிள்ளை புத்தேரியில் வசித்து வந்தார். வயது நிரம்ப ஆகிவிட்டது. பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் தோன்றிய மிகச்சிறந்த கவி. அவருடைய கவிதையில் விசேஷம் ஒன்று உண்டு. இதற்கு முன், தமிழ் இலக்கியத்தில், ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்துத் தமிழ்க் கவிதை போன்றே இருக்கும்படி செய்தவர் யாருமிலர். அப்போதைய கவிதைகள், தமிழ்ப் பண்பாட்டில் ஊறிப் போனதாகவோ, வடமொழியிலிருந்து எடுத்தாண்டதாகவோ இருக்கும்.


கவிமணி ஒருவர்தான், துணிந்து ஆங்கில மூலத்திலிருந்து தமிழ்க் கவிதையைப் போலவே எளிமையா கத் தமிழாக்கம் செய்தார். அதில் பிட்ஜரால்டு (திமிஜிஞீணிஸிகிலிஞி) எழுதிய, ‘லைட் ஆப் ஆசியா’ என்ற புத்தரின் கவிதையும், இராம காவியத்தின் கவிதைகளும் முக்கிய மானவை. வேறு சில கவிகள் இவற் றைத் துணுக்குத் துணுக்காகத் தமி ழாக்கம் செய்திருந்தாலும், கவி மணி ஒருவரே அதில் முழு வெற்றி யும் பெற்றார். அவர்களிடத்தில் அநேகமாக வாரந்தோறும், அல்லது சமயம் கிடைக்கும் போதெல்லாம், நான் போய் அளவளாவுவது உண்டு. வேறு பலரும் சில நாட்களில் அங்கு வந்ததுண்டு. கவிமணி உற் சாகமாகப் பேசிக் கொண்டிருப் பார். ‘எக்ஸிமா’ என்ற நோயால் கவிமணி துன்பப்பட்டுக் கொண்டி ருந்தார். எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் நிரம்ப உண்டு. ஆனாலும், என்னிடத்தில் அவர் தனி அபிமானம் கொண்டிருந்தார். அது என் பாக்கியம் என்றே கருதி வந்தேன். அவர்களிடத்தில் அவர் இயற்றிய கவிதையை நாம் புகழ்ந்து பேசினால், அதை அவர் ரசிப்ப தில்லை. அவர் புகழ்ச்சியைச் சிறிதும் விரும்பியதில்லை. இவ்வ ளவு உயர்ந்த கவியை நாஞ்சில் நாட்டு மக்கள் பெருமைப் படுத்தா மலே இருந்தனர். எனக்கு அது மனவேதனையைத் தந்தது. அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற உந்துதலி னால் அன்னாரது 70வது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்தேன்.


நான் கவிமணியிடம் இந்தக் கருத்தைத் தெரிவித்து, நீங்கள் அந்தப் பிறந்த தினக் கூட்டத்திற்கு வரவேண்டுமென கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர், ‘உங்களுக்கு வேறு வேலையும் சோலியும் இல்லையா’ என்று கூறி என்னை உதறித் தள்ளிவிட்டார். நான் இதைப் பல நண்பர்களிடம் கூறி, மிகவும் வற்புறுத்தி, அவர்களைச் சம்மதிக்க வைத்தேன். என்னைத் தலைவராகவும், ஏனைய பிரமுகர்களை அங்கத்தினர்களாகவும் கொண்ட ஒரு கமிட்டி அமைத்து, நாகர் கோவில் நகரில் நடுநாயகமாக உள்ள எஸ்.எல்.பி., உயர்நிலைப்பள்ளியில் ஒரு பாராட்டு விழா நடத்தினோம். அதற்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர் வந்திருந்தனர். அந்த அரங்கம் மிகப் பெரியது என்பது பார்த்தவர்களுக்குத் தெரியும். அந்த விழாவிற்குத் தலைமை வகிக்க அப்போது திருவனந்தபுரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சத்தியநேசனை அழைத்தபோது, அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இதுதான் கவி மணிக்கு நாஞ்சில் நாடு செலுத்திய முதல் பாராட்டு விழா என்பதைப் பணிவுடன் கூறிக் கொள்கிறேன். இதன் பிறகு கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நாகர்கோவில் நகரத்தில் சரஸ்வதி டாக்கீஸில் கவிமணிக் குப் பாராட்டு விழா நடத்தினார். அதற்கு பி.டி.ராஜன் மற்றும் பல பெரியவர்கள் வந்திருந்தனர். கவிமணியின் முக்கிய பக்தர் கலைவாணர். எப்போது சென்னையிலிருந்து, நாகர்கோவிலுக்கு வந்தாலும் கவிமணியைப் பார்க்காமல் போகமாட்டார்.


தமிழகத்திற்குத் தமிழக மக்களுக்கு, மொழிக்காகச் சிறப்பான சேவை செய்தவர்களைத் தானே முன்னின்று பாராட்டி உற்சாகமூட்டுவது என்பது டி.வி.ஆரின் பழக்கங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. இதில் ஜாதி, மதம், அரசியல் என்று எந்த பாகுபாடும் அவரிடம் குறுக்கிட்ட தில்லை. கவிமணியைப் போலவே ஜீவானந்தத்திடமும் அவர் மிகவும் அன்பு வைத்திருந்தார். அவர்கள் பள்ளித் தோழர்கள் என்பதை முன்பே பார்த்தோம். ஜீவானந்தம் தீவிரமான கம்யூனிஸ்ட். இவரோ நிலத்திற்குச் சொந்தக்காரர்; தொழில் அதிபர். ஆகவே, கம்யூனிஸ்ட் கட்சி என்பதால், அவர் ஜீவாவிடமிருந்து விலகி இருந்திருக்க வேண்டும். ஆனால், கட்சி, அரசியல் வேறு; மக்கள் நலப்பணிகளில் ஒருவர் தீவிரமாக ஈடுபடுகிறாரா, அப்படியானால் அவர் என்னுடைய உயிர் நண்பர் என்பது டி.விஆரின் கொள்கையாக இருந்திருக்கிறது.ஜீவானந்தம் மாஸ்கோ சென்று திரும்பியபோது, அவருக்கு மாபெரும் வரவேற்பு நாகர்கோவிலில் தரப்பட்டது. ‘விழாவிற்குத் தலைமை தாங்கி அன்று டி.வி.ஆர்., பேசிய அருமையான சொற் பொழிவை டேப் எடுத்து வைக்காமல் போய்விட்டேனே’ என்று கவலைப்பட்டார் பட்டேல் சுந்தரம் பிள்ளை. இதை ஒரு உதாரணத்திற்குக் கூறினோம். ஜீவா மட்டுமல்ல, தமிழுக்காக, தமிழருக்காக சேவை செய்தவர்கள் மேல் அவர் கொண்டிருந்த அன்பு, பாசம் அளவிட முடியாததாகவே இருந்தது என்பதை எப்போதும் பார்க்க முடிந்தது.

நீதிபதி ஆர்.சங்கர நாராயண ஐயர்

கேரளப் புண்ணியத் தலங்களில் ஒன்றான வைக்கத்தில் 1894 பிப்ரவரியில் பிறந்த சங்கர நாராயண ஐயர் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். திருவனந்தபுரத்தில் 1920ல் வழக்கறிஞராக பணி தொடங்கித் தனது தனிப்பட்ட ஆற்றலால் உயர்நீதிமன்ற நீதிபதியானவர்.

1914ல் சென்னையில் நடைபெற்ற தேசியக் காங்கிரஸ் மாநாட்டிற்குக் கல்லூரி மாணவராக இருக்கும் போதே சென்று வந்தவர். பின்னர் நாகர்கோவில் ஜில்லா உதவி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பல பொது நலப் பணிகளில் அவர் பங்கு அதிகம். அடுத்துக் கொல்லம் மாவட்ட நீதிபதியானார். படிப்படியாக நீதித்துறையிலும், பொதுப் பணிகளிலும் புகழ்பெற்ற சங்கர நாராயண ஐயர், உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றார். நூறு வயதை அடைந்த அவர் சமீபத்தில் காலமானார்.நீதிபதி சங்கர நாராயண ஐயர்


நீதித்துறையிலும் பொதுத்துறையிலும், தனது நீண்ட கால அனு பவங்களை நினைவு கூர்ந்து ஜஸ்டிஸ் ஆர்.சங்கர நாராயண ஐயர், ‘எ ஜட்ஜ் லுக்ஸ் பேக்’ என்ற ஒரு சிறந்த நூலை எழுதி வெளியிட்டுள் ளார். அந்நுபலில், என்றென்றும் தம் நன்றிக்கு உரியவர்கள் என்று இருவரைப் பாராட்டி உள்ளார். அந்த இரு முக்கிய நபர்கள் திரு விதாங்கூர் திவான் சர்.சி.பி. இராமசாமி ஐயர், ‘தினமலர்’ நிறுவன ஆசிரியர் டி.வி.இராமசுப்பையர் இருவருமாகும். மேலும் அவர் கூறுகையில்:

படம்: சர்.பி.சி.ராமசாமி ஐயர்

சர்.சி.பி.ராமசாமி ஐயர், வந்தவாசியில் நவ., 12, 1877ல் பிறந்து, சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் ஆங்கிலத்தில் முதல் வகுப்பிலும், கணிதத்தில் தங்க மெடல் வாங்கியும், சமஸ்கிருதத்தில் டபுள் கிராஜுவேட் பட்டமும் வாங்கியவர். பின் சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று, 1903 - 1916ல் சென்னை ஐகோர்ட் வக்கீலாக இருந்தவர்.

1916 - 1918ல் "நியு இண்டியா' பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர். 1917 - 1918ல் அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக இருந்தவர். 1919ல் சென்னை ஐகோர்ட் ஜட்ஜாக இருந்தவர். 1931ல் லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர். 1932 - 36ல் திருவிதாங்கூர் மகாராஜாவின் சட்ட ஆலோசகராக இருந்தவர். முதன்முதலில் இந்தியாவில் அரிஜன ஆலயப் பிரவேசத்தை 1936ல் மகாராஜா மூலம் அறிவித்து, அனைத்துக் கோயில்களையும் அரிஜனங்களுக்கு திறந்து விட்டவர்.

திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தை 1938ல் ஸ்தாபித்தார். 1936 - 47ல் நாஞ்சில் நாட்டிற்கு பேச்சிப் பாறை அணை மற்றும் நீர்ப்பாசன வசதிகளைச் செய்து தந்தவர். நிலத் தீர்வையை ரத்து செய்தவர்.


அந்தக் காலத்தில் திருவிதாங் கூர் சமஸ்தான திவானாக சர்.சி.பி. இராமசாமி ஐயர் இருந்தார். அவர் நாஞ்சில் நாட்டு விவசாயிகளு டைய நிலங்களுக்கான தீர்வையை ஒழுங்கு செய்து, மிகக் குறைவான நிலவரியைக் கட்ட ஏற்பாடு செய் தார். விவசாயிகளுடைய பிரச்னை யில் மிகுந்த அனுதாபம் காட்டி இந்த செயலை செய்ததற்காக, அவருக்கு நாகர்கோவிலில் ஒரு சிலை எழுப்ப அப்பகுதி மக்கள் விரும்பினர்.


டி.வி.ஆர்., இந்தக் கருத்தை என்னிடம் கூறி, சர்.சி.பி.,யிடம் அனுமதி கேட்கச் சொன்னார்கள். நான் மாவட்ட நீதிபதி என்ப தோடு, என் மீது சர்.சி.பி.,யும் தனி அன்பு வைத்திருந்தபடியால், நாஞ்சில் நாட்டு மக்களின் இந்த எண்ணத்தை சர்.சி.பியிடம் வெளி யிட்டேன். அதற்கு சர்.சி.பி.இராமசாமி ஐயர், ‘எனக்குச் சிலை வைப்பது அவசியமில்லை. ஏதாவது செய்து தான் ஆகவேண்டுமென்று விரும் பினால், ஒரு ஆஸ்பத்திரி கட்ட லாம் அல்லது நல்ல நூலகத்து டன் கூடிய பூங்கா ஒன்று அமைக்கலாம். அதுதான் எனக் குச் சரி என்று படுகிறது’ என்று கூறினார்.


நாகர்கோவிலில் பூங்கா


சர்.சி.பி.,யின் விருப்பப்படியே ஒரு பூங்கா அமைத்த பெருமை டி.வி.ஆருக்குத் தான் உண்டு. நாகர்கோவில் நகரில் இன்றும் மிகச் சிறப்பாகத் திகழும் இந்த பூங்கா பற்றி மேலும் தகவல்கள் சேகரித்தோம். இங்குப் பலவித மரங்கள், செடிகள், அருமையான பாதை கள், அவைகளுக்குச் சிமெண்ட் சாலைகள், நடுவில் சிறப்பான வாசக சாலை எல்லாமாக எட்டு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது, இந்த பூங்கா. இது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்த சர்.சி.பி.,யின் அறுபதாம் ஆண்டு மணிவிழா நினைவாக உருவாக்கப்பட்டது. இந்தப் பூங்கா அமைப்புக் குழுவின் செயலாளர் டி.வி.ஆர்., தான். இது, பொதுப் பணித்துறை இலாகா இன்ஜினியர் ஆபீஸ் மற்றும் அவர் தங்கும் பங்களா வாக இருந்தது. அது வெள்ளை யர்கள் ஆதிக்கமிக்க காலம். வெள்ளைக்கார இன்ஜினியர் களே இந்த இடத்தைப் பயன்படுத்தி வந்தனர். பூங்காவாக்க இது தீர்மானிக்கப்பட்டதும், இந்த இடம் கமிட்டி வசம் ஒப்படைக்கப்பட் டது. பின்னர், இதைச் சுற்றி அலங்கார சுற்றுச் சுவர் மற்றும் பாதை அமைக்க, வெறும் காடாக இருந்த இடத்தில் சிமெண்ட் பாதைகள் அமைக்கவும், பழைய இன்ஜினியர் தங்கியிருந்த பங்களாவை மாற்றி நூலகம் அமைக்கவும், மின்விளக்குகள் அமைக்கவும் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்று திட்டமிடப்பட்டது.

இந்தப் பணிகளுக்கான காண்டிராக்ட் அன்றைய பிரபல தேச பக்தரும், தாய்த் தமிழகத்துடன் குமரி மாவட்ட இணைப்புப் போராட்டத்தின் முக்கிய தளபதியாக இருந்தவரும், சிறந்த எழுத்தாளரு மான பி.எஸ்.மணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பி.எஸ்.மணி

நாகர்கோவிலில் பிப்.,7, 1916ல் பிறந்தவர். சிறந்த தேசபக்தர். எழுத்தாளர், நாடு சுதந்தரம் அடைந்ததைக் கொண்டாட, சுசீந்திரம் தேர் மீது தேசியக் கொடியை ஏற்றியதற்காக, திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் கைது செய்யப்பட்டவர். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சிறை சென்றவர்.

1945ல் கேரள மாகாண காங்கிரஸ் கொண்டு வந்த, "காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை கேரளம்' என்ற தீர்மானத்தை எதிர்த்து முதல் குரல் எழுப்பியவர். நாஞ்சில் நாட்டைத் தமிழ் நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் கைதாகி பலமுறை சிறையில் இருந்தவர். குமரி மாவட்டத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர். பத்திரிக்கையாளர்.


பி.எஸ்.மணி

இந்த பூங்கா வேலையை நீதான் எடுத்து நடத்த வேண்டும்’ என்று என்னிடம் டி.வி.ஆர்., கூறினார். என் தந்தையார் பிரபலமான காண்டிராக்டர். திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் அன்று அவர் கட்டிய கட்டடங்கள், மன்னர்களால் பாராட்டப்பட்டவை. ஆகவே, இந்த காரியத்தில் நானும் உதவுவதற்காகக் காண்டிராக்ட் எடுத்து வேலை செய்து வந்தேன்.


கமிட்டி, அது, இது என்று இருந்தாலும் டி.வி.ஆர்., தான் எல்லாம். அது, 1942ம் ஆண்டு. நாடெங்கும் சுதந்திரப் போராட்டத்தின் உச்சக்கட்டம். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு நான் கைதாகிச் சிறைக்குச் சென்றேன். நாம் எடுத்த பணியை முடிக்காமல் சிறைக்குள் வந்துவிட்டோமே என்று எனக்குக் கவலை. ஆனால், நான் சிறையில் இருந்து விடுதலை பெற்று வந்தபோது, பூங்கா வேலைகள் முழுமை அடைந்திருந்ததைக் கண்டு அதிசயித்து, டி.வி.ஆரைப் போய்ப் பார்த்தேன்.

என்னிடம் அவர், ‘நீ சிறைக் குப் போய்விட்டதால், எடுத்த வேலை பாதியில் நின்றது. மக்கள் சுதந்திர தாகத்தில் கொந் தளித்துக் கொண்டிருக்கும் போது, சர்.சி.பி.,க்காக ஒரு பூங்கா அமைப்பது குறித்து மக் களிடம் அவ்வளவு ஆதரவு இல்லை. நிதி கிடைப்பதிலும் சிக்கல் வந்தது. இருந்தாலும், நாம் ஒரு நன்றிக்கடமைக்காக இதைத் தொடங்கினோம். பாதி யில் விடக்கூடாது என்பதால், நானே பூர்த்தி செய்துவிட் டேன்’ என்றார்.


நான் செலவு செய்தது போக மீதி எல்லாப் பணமும் டி.வி. ஆர்., தான் செலவு செய்திருந் தார். காண்டிராக்ட் பணம் வாங்குவது மிகவும் கஷ்டமாகி விட்டது. நான் சிறைக்குப் போய் வந்தவன் என்பதால், அதிகாரி கள் காலம் கடந்தினர். அந்தப் பணத்தை எனக்கு கிடைக்கச் செய்தவரும் டி.வி.ஆர்., தான். அந்தப் பணம் என் கைக்கு வந்ததும், அவர் செலவு செய்த தொகையை எடுத்துக்கொள்ளச் சொன்னேன். ‘பரவாயில்லை, காண்டிராக்ட் எடுத்துப் பாதியில் போட்டுவிட்டு மணி போய்விட் டான் என்ற கெட்ட பெயர் உனக்கு வராமல் இருந்ததே. அதுவே போதும். தேசபக்தி காரணமாகப் பல மாதங்கள் சிறையில் கழித்து விட்டாய். பணம் முக்கியம் அல்ல’ என்று அவர் கூறியதை இன்று நினைத்தாலும் எனக்கு கண் கலங்குகிறது என்றார். இதில் சம்பந்தப் பட்ட சிலரை அணுகிக் கேட்டபோது, ‘டி.வி.ஆர்., முயற்சி இல்லை என்றால் இந்த பூங்கா முடிந்தே இராது’ என்றே கூறினர். பின்னர் இது நகரசபையில் ஒப்படைக்கப்பட்டது. இதை சர்.சி.பி.இராமசாமி பூங்கா என்று கூறுவதை விட, டி.வி.ஆர்., நினைவு பூங்கா என்றே அழைக்கலாம் என்றும் அன்றைய பிரமுகர்கள் இன்றும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர்.


‘ஒரு நல்ல காரியத்தை மக்களுக்காக யார் செய்தாலும், அதை நன்றியுடன் பாராட்டும் மனப்பான்மை வேண்டும். இதில் சம்பந்தப் பட்டவரை மகிழ்விக்கிறோம் என்பதல்ல முக்கியம். இதுபோல் வேறு பலரும் செய்ய முன்வருவார்கள் அல்லவா?’ என்று அடிக்கடி டி.வி.ஆர்., கூறுவதுண்டு. அந்த வகையில்தான் இந்த பூங்கா அமைக்க முயற்சி மேற்கொண்டார்.


நிலவரியில் மாற்றம்


நிலவரியில் சர்.சி.பி., என்ன மாற்றம் கொண்டுவந்தார் என்பது குறித்து, டி.வி.ஆரே தெளிவாக விளக்கம் தந்துள்ளார் . . .
குமரி மாவட்ட விவசாயிகளுக்கு நிலவரி ஒரு பயங்கரமான சுமையாய் இருந்தது. அன்றைக்குச் சில நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு 35 ரூபாய் வரை வரி இருந்தது. பெரும்பான்மையான நிலங்களுக்கு 28 ரூபாய்க்குக் குறைவில்லை. 1929ம் வருடத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தால், 75 படி கொண்ட கோட்டை நெல் 3 ரூபாய்க்கு வந்துவிட்டது. விவசாயிகள் தாங்களாகவே பயிரிட்டு மீதம் உள்ள நெல்லை அப்படியே விலைக்குக் கொடுத்து விட்டாலும், நிலவரி கட்ட முடியாத அளவு வரி உயர்ந்து இருந்தது. அப்படியும் விவசாயிகள் வரியைக் கட்டிக் கொண்டு தான் இருந்தனர்.


இந்த நிலையில் திருவிதாங்கூர் இராஜ்யத்திற்குச் சர்.சி.பி., திவானாக வந்தார். நிலவரிச் சுமையால் தவித்துக் கொண்டிருந்த மக்கள் அவரிடம் முறையிட்டனர். உழவர்களின் உண்மையான கஷ்டத்தைப் புரிந்து கொண்ட அவர், இந்தியாவில் எந்த இராஜ்யத்திலும், மாகாணத்திலும் செய்யாத ஒரு புதுமையாக, நிலத்தின் அடிப்படை வரியில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். அதுதான் நிலத்தின் அடிப்படை வரி. ஒரேயடியாக நிலம் சம்பந்தப்பட்ட எல்லா வரிகளையும் நீக்கிவிட்டு, ஏக்கர் ஒன்றுக்குச் சராசரி ஒரு ரூபாய் வரி என்றும், தண்ணீர் வரி தனியாக ஒரு ரூபாய் என்றும் ஆணையிட்டார். அத்தோடு, பெரும் நிலக்கிழார்களுக்கு ஒரு சிறு தொகையை விவசாய வருமான வரியாக கொண்டு வந்தார். 25 ஏக்கர் உள்ள ஒருவர் முன்பு 700 ரூபாய் வரி செலுத்திக் கொண்டிருந்தால், இந்த மாற்றத்திற்குப் பிறகு 50 ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என்றாயிற்று. இதனால் குமரி மாவட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


இந்தப் பெரும் செயலைச் செய்ததற்காக அவருக்கு நாகர்கோவி லிலோ, கன்னியாகுமரியிலோ முழு உருவச்சிலை வைக்க வேண்டும் என்ற ஒரு கருத்து உருவாகி, முக்கியஸ்தர்கள் ஒரு கூட்டம் போட்டு, அதைச் செயல்படுத்த ஒரு கமிட்டி அமைத்து, அந்தக் கமிட்டிக்குச் செயலாளராக என்னைத் தேர்ந்தெடுத்தனர். குமரி மாவட்ட மக்கள் இவ்வாறு ஒரு முடிவெடுக்க, அது அன்றைக்கு ஒரு புயலைக் கிளப்பி விட்டது. அது என்ன தெரியுமா... கொச்சியில் அப்போது திவானாக இருந்த சண்முகம் செட்டியாருக்கும் கடற்கரையில் ஒரு சிலை வைக்க முயற்சி நடைபெற்றது. சண்முகம் செட்டியார் கொச்சி மக்களுக்கு செய்த நன்மைகளுக்காக அம்முயற்சி எடுக்கப்பட்டதா அல்லது திவானால் நன்மைகள் பெற்ற சிலரால் அம்முயற்சி தொடங்கப்பட்டதா என்பதைப் பற்றி என்னால் கூற முடியாது.


இந்த இரண்டு திவான்களுக்கும் இப்படி சிலைகள் வைக்கப்பட் டால், இந்தியாவில் உள்ள 600 சமஸ்தானங்களிலும் அங்குள்ள திவான்கள் தங்களுக்கும் சிலை வைக்கத் தொடங்கிவிடுவர் என்று அஞ்சி, அப்போது வைசிராயாக இருந்த லார்டு வெல்லிங்டன், ‘பதவியில் இருக்கும் போது யாருக்கும் சிலை வைக்கக்கூடாது’ என்று கண்டிப்பாக ஒரு உத்தரவைப் போட்டார். இதன் காரணமாக நாங்கள் சிலை வைக்கும் முயற்சியைக் கை விட்டதாக நினைக்கக் கூடாது. இவ்வாறு ஒரு சட்டம் வருவதற்கு முன்பே தனக்கு சிலை வேண்டாம் என்றும், வேறு பயனுள்ள காரியம் ஏதாவது செய்யலாமே என்றும் சர்.சி.பி.,யே கருத்து வெளியிட்டு விட்டார்.


பின்னர் பூங்கா அமைக்க முடிவு செய்தோம். அதற்குப் பல அரசியல் போட்டிகள். இதையெல்லாம் வெற்றிகரமாகச் சமாளித்து, கமிட்டியினரின் ஒத்துழைப்போடு பூங்காவை அமைத்தேன். பூங்காவை நகரசபையிடம் ஒப்படைக்க இருந்தோம். ஆனால், அன்றைய நகரசபை தலைவர் இதற்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருந்தார். அவர் அன்றைக்கு எம்.எல். ஏ., வாகவும் இருந்தார்.


அவருடைய எதிர்ப்பைச் சமாளிக்க எங்களுக்கு இரண்டு பேர் உதவினர். ஒருவர் ஆர்.சங்கரநாராயண ஐயர், அப்போது நாகர் கோவிலில் துணை நீதிபதியாகவும், பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதி யாகவும் இருந்தவர். மற்றொருவர் எம்.கே.நீலகண்ட ஐயர். அன்றைய திருவிதாங்கூர் அரசாங்க தலைமைச் செயலாளர். இவர்கள் செய்த உதவிக்கு நன்றி கூறாமல் என்னால் இருக்க முடியாது.


மணியகரம் தீர்வை


திருவிதாங்கூர் இராஜாங்க காலத்தில் நாஞ்சில் நாட்டில் விதிக்கப் பட்ட நிலவரிகளில் ஒன்றின் பெயர், ‘மணியகரம்’ என்பதாகும். இந்த நிலவரி காரணமாக நாஞ்சில் நாட்டு விவசாயிகள் பெரும் சுமையில் சிக்கித் தவித்தனர். இந்தக் கொடுமையான வரியை நீக்கக் கோரி நாஞ்சில் நாட்டு விவசாயிகள் 18 ஆண்டு காலமாகப் போராடி வெற்றி கண்டனர். இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய கடுக்கரை மகாதேவன் பிள்ளை கூறுகிறார் . . .
 

கடுக்கரை கே.எம்.மகாதேவன் பிள்ளி

கடுக்கரை கே.எம்.மகாதேவன் பிள்ளை நவ., 16, 1914ல் பிறந்தவர். விவசாயிகளின் உற்ற நண்பர். மணியரகம் நிலவரியில் இருந்து குமரி மாவட்ட விவசாயிகளை விடுவிக்க 18 ஆண்டு போராடி வெற்றி கண்டவர். கடுக்கரை உயர் நிலைப்பாடசாலை உருவாகக் காரணமாக இருந்தவர். குமரி மாவட்ட விவசாயிகளுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பியவர்.


அப்போது அரசாங்கத்தின் நிலம், மகாராஜாவின் நிலம், மகாராஜா குடும்பத்தாரின் நிலம், பத்மநாப சுவாமிக்கான நிலம் எனப் பாகுபாடு செய்யப்பட்டு, அதற்குத் தனித்தனியான நில வரி கள் விதிக்கப்பட்டன. பண்டார வகை, ஸ்ரீ பண்டாரவகை,  ஸ்ரீபாத வகை, கண்டு கிரிஷி இப்படி வரி களுக்குப் பெயர். நாஞ்சில் நாட்டின் பெரும் நிலங்கள் பத்மநாப சுவாமிக்கு என ஒதுக்கப்பட்டு அதற்கு, ‘மணி யகரம்’ என்ற வரி மிக அதிகப்படி யாக வசூலிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஏப்., 3, 1949ல், ‘மணியகரம் கண்டன மாநாடு’ ஒன்றை கடுக்கரையில், நீதிபதி சத்யநேசன் தலைமையில் நடத்தி னோம். மாநாட்டைக் கவிமணி திறந்து வைத்தார். பெரும் அளவில் விவசாயிகள் தங்கள் சொந்தப் பிரச்னைக்காக கூடிய முதல் மாநாடு அது.


வரிப் பாக்கிக்காக உழவர்களது நிலங்களை ஏலம் விட அரசு உத்தரவிட்டது. அரசின் உத்தரவை எதிர்த்து நடைபெற்ற விவசாய இயக்கத்திற்குப் பெரும் ஆதரவு தந்தவர் டி.வி.ஆர்., இதெல்லாம், ‘தினமலர்’ ஆரம்பமாவதற்கு முந்திய கட்டம். இந்தப் பிரச்னைக்காக விவசாயிகளைச் சந்தித்து, பிரச்னையைத் தெளிவாக்க, ஒன்று திரட்ட, கவிமணியுடன் டி.வி.ஆர்., பல தடவை எங்கள் கிராமத்திற்கு வருவது உண்டு.


வரிப் பாக்கிக்காக நிலத்தை ஏலம் விட அரசு உத்தரவிட்டபோது, ‘தினமலர்’ திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டு விட்டது. இந்த ஏலத்தை விவசாயிகள் பகிஷ்கரிக்க வேண்டும் என்று எங்கள் குர லாகத் ‘தினமலர்’ தனது செய்திகள், தலையங்கங்கள் மூலம் விவசாயி களிடம் தொடர்பு கொண்டது. ஜப்தி என்று அரசு முடிவு எடுத்த போது, டிச., 13, 1952ல், ‘மணியகரம் பிரச்னை’ என்றே, ‘தினமலர்’ விரிவாகத் தலையங்கம் எழுதியது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு, நில ஜப்தி என்பது சரியான நடவடிக்கையாகாது. விவசாயிகளால் இந்த வரியைக் கொடுக்க முடியாத நிலை. இதை எதிர்த்து விவசாயிகள் பல இடங்களில் சத்தியாகிரக போராட்டம் நடத்துகின்றனர். எந்த ஒரு நபரும் ஏலம் எடுக்க முன் வரவில்லை, என்பதை அரசுக்கு, ‘தினமலர்’ சுட்டிக் காட்டியது.


அப்போது சிதம்பரநாதன் மந்திரி. இதை பற்றி விசாரிக்க ஒரு கமிட்டி அமைத்தார். அவர் இதை அமல் படுத்துவதற்குள் அந்த மந்திரிசபை கவிழ்ந்தது. பின்னர் பட்டம் தாணுப்பிள்ளை ஆட்சி செய்தார். பி.எஸ். நடராஜப்பிள்ளை, ‘ரெவின்யு’ மந்திரியாயிருந்தார். பட்டம் தாணுப்பிள்ளைக்கும் நாஞ்சில் நாட்டு மக்களுக்கும் உள்ள உறவு பற்றித்தான் எல்லாருக்கும் தெரியுமே. போராட்டம் தொடர்ந்தது. விவசாயிகள் கொஞ்சமும் சோர்ந்து விடாமல், ‘தினமலர்’ பார்த்துக் கொண்டது. ‘பிரச்னை இங்கு மட்டும் எழுந்தால் போதாது; தலை நகரமான திருவனந்தபுரத்திலேயே எழுப்பப்பட வேண்டும். அங்கே ஒரு மாநாடு கூட்டுங்கள்’ என்று டி.வி.ஆர்., கூறியதோடு, ஒரு மாநாட்டிற்கான ஏற்பாடுகளையும் செய்தார். அந்த மாநாட்டில் டி.வி.ஆரும் கலந்து கொண்டார். 1953 அக்டோபரில் பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துத் ‘தினமலர்’ எட்டுக் கால பேனர் செய்திகளாக வெளியிட்டது. இவை பட்டத்தின் மனதை மாற்றுவதற் குப் பதில், எதிர் உணர்வை ஊட்டியது.


வரித்தள்ளுபடி இயலாத ஒன்று என அரசு அறிவித்துவிட்டது. திருவனந்தபுரம் மாநாட்டிற்குப் பின் வரி கொடா இயக்கம் நடத்துவது பற்றி நாங்கள் டி.வி.ஆரிடம் கலந்து ஆலோசித்தோம். கடுக்கரை, பூதப்பாண்டி, திருப்பதிசாரம், ஆனுபர் இங்கெல்லாம் நிலத்தை ஏலம் எடுக்க யாரும் முன் வரவே இல்லை. பின்னர் குமரி மாவட்டம் பிரிந்தது. 18 ஆண்டுகளாக விவசாயிகள் தொடர்ந்து நடத்திய இந்த எழுச்சி மிக்க போராட்டம் ஒரு சாதனை. இதைச் செய்து முடிக்க எங்களுக்கு ஒரே துணை, ‘தினமலர்’ தான்.


தமிழ்நாட்டுடன் சேர்ந்த பின்னர், ‘இரயத் வாரி’ வரிக்குட்பட்டோம். அது முந்திய வரிகளை விடக் கொடுமையானது. பின்னர், ‘வரி கொடுப்போர் மாநாடு’ நாகர்கோவிலில் பக்தவச்சலம் தலைமையில் நடைபெற்றது. பிரச்னைகளை விளக்கித் ‘தினமலர்’ ஒரு முழுப்பக்கக் கட்டுரை வெளியிட்டது.  தமிழக அரசு 1963ல் ஒரு முடிவுக்கு வந்தது. ஜூலை 1, 1964 முதல், ஜூலை 1, 1971 வரையுள்ள நிலவரி 31.5 லட்சம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. ‘மூன்று லட்சத்து 31 ஆயிரத்து 164 விவசாயிகள் பயன் அடைகின்றனர்’ என்ற செய்தியோடு பிரச்னைக்கு, ‘தினமலர்’ முற்றுப்புள்ளி வைத்தது.


ஒரு பத்திரிகை விவசாயிகளின் செய்திகளைப் பிரசுரிப்பதோடு, தனது பரிவைக்காட்டி விட்டதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நீண்டகாலப் போராட்டத்தில் விவசாயிகள் மிகவும் சோர்ந்து விடுவது இயல்பு. அவர்களுக்கான தொழிற்சங்க இயக்கங்கள் எதுவும் கிடையாது.  எந்த ஒரு அரசியல் கட்சியும் முழுநேரம் 18 ஆண்டுகள் விவசாயிகளுடன் போராட முன்வரப் போவதில்லை. அவர்களுக்குத் தக்க ஆலோசனைகள் கூறவும் யாரும் கிடையாது. ஆலோசனை கூறினால் போதாது. அதைச் செயல்படுத்தவும், உதவி செய்யவும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.  இந்த, ‘மணியகரம்’ பிரச்னையை டி.வி.ஆர்., அணுகிய முறை மிகவும் வியப்பைத் தருகிறது.


என்.எஸ்.கே., நெகிழ்ந்து போனார்


நாகர்கோவிலில், ‘டவுன் கிளப்’ 1889ல் நிறுவப்பட்டது. இங்குள்ள ஸ்ரீ மூலம் இராமவர்மாவின் பெய ரிலான வாசகசாலை மிகவும் பெரி யது. அந்தக் காலத்தில் திரு விதாங்கூர் சமஸ்தானத்திலேயே மிகப் பெரிய வாசகசாலை இது தான். கிளப்’ என்றால், இன்றுள்ள ‘கிளப்புகளைறீ போல் இதை எண்ணிவிடக்கூடாது. அன்றைய அரசியல் தலைவர்களில் பிரபல மானவர்கள் இங்கு விஜயம் செய்து தேசபக்தக் குரல்களை எழுப்பி உள்ளனர். இந்தக் ‘கிளப்’பிற்குப் பல்வந்தராய் தேசாய், பண்டிட் ஜவஹர்லால் நேரு முதலானோர் கூட வந்துள்ளனர்.  இந்தக் ‘கிளப்’ பின் ஆயுட்கால உறுப்பினர்கள் 58 பேர். தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் இதன் செயலாளர் டி.வி.ஆர்., அப்போது அவர் உருவாக்கிய டென்னிஸ் கிரவுண்ட், தமிழ் நாட்டிலும், கேரளாவிலும் மிகவும் புகழ் பெற்றதாகக் கருதப்பட்டது.


ஆயுட்கால ‘மெம்பர்’களுக்குச் சந்தா 100 ரூபாய். அது மட்டும் போதாது. அவருக்குப் பல தகுதி கள் வேண்டும். யார் வேண்டு மானாலும் ஆயுட்கால மெம்பராக இங்கு சேர, ‘கிளப் ’ சட்டத்தில் இடமில்லை. குமரி மாவட்டத்திற்கு ரயில் மற்றும் பொதுப் பிரச்னைக்கு அகில இந்தியத் தலைவர்களையும், தமிழகத் தலைவர்களையும், இங்கு அழைத்து விழா எடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டார் டி.வி.ஆர்., இதனால் பல காரியங்களைச் சாதித்துள்ளார். இந்தக் ‘கிளப்’பின் பணிக்குள் நுழைந்த வரலாற்றை டி.வி.ஆர்., விவரிக்கையில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மனம் நெகிழ்ந்து உணர்ச்சிவசப் பட்ட ஒரு சம்பவத்தையும் கூறினார். அந்தச் சம்பவம் என்.எஸ்.கே.,யை மட்டுமல்ல டி.வி.ஆரையும் நமக்கு இனம் காட்டக் கூடியது. டி.வி.ஆர்., கூறுகிறார் . . .


நாகர்கோவில் நகரில் ஒழுகினசேரி என்ற இடத்தில் ஒரு ‘கிளப்’ இருக்கிறது. அதில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், மற்றும் பல அதிகாரி களுமே பெரும்பாலான உறுப்பினர்கள். அதில் நான் என் 21வது வயதில் உறுப்பினரானேன். ஏனைய உறுப்பினர்கள், ‘கிளப்’ பின் மரபிற்கு விரோதமாக ஒரு இளம் வாலிபனை உறுப்பினராகச் சேர்த்தது சரிதானா என்று விவாதித்துக் கொண்டிருந்தனர்.


நான் அங்கத்தினரான அடுத்த வருடமே அந்தக் ‘கிளப்’ பிற்கு ஒரு நெருக்கடியான நிலை ஏற்பட்டது. அதைச் சமாளிக்க முடியாமல் நிர்வாகத்தினர் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டினர். அந்த நெருக்கடி யிலிருந்து எப்படி மீள்வது என்று ஒரு வழியும் தெரியாமல் திகைத்து விவாதித்துக்கொண்டிருக்கும்போது நான் எழுந்து, ‘இதை நான் சமாளித்துக் தருகிறேன். ஆனால், காரியங்கள் விரைவாக நடப்பதற்காக என்னைச் செயலாளராக்கினால் நலம்’ என்று சொன்னேன். பெரியவர் கள் நாம் இருக்கும் போது இந்தச் சிறு பையனிடம் எப்படிப் பொறுப்பைக் கொடுப்பது என்ற திகைப்பேற்பட்ட போதிலும், வேறு வழியின்றி என்னையே செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர்.  ஒரு மாதத்திற்குள் சிக்கல் எல்லாவற்றையும் நீக்கிக் ‘கிளப்’பின் நிதிநிலையைச் செவ்வனே செய்துவிட்டேன். அது முதல் 10 ஆண்டுக் காலம், ஒவ்வொரு ஆண்டும் ஏகமனதாக என்னையே செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர். அந்தக் ‘கிளப்’பில் பத்து ஆண்டு காலம் சிறிதும், பெரிதுமாகப் பல காரியங்களைச் செய்து, பொதுமக்களின் பாராட்டுக் களையும் பெற்றிருக்கிறேன். சொல்லப்போனால், இதுதான் என் பொது வாழ்க்கையின் ஆரம்பம் என்று கூறலாம்.

என்.எஸ்.கிருஷ்ணன்

"கலைவாணர்' என்று தமிழகம் பெருமையுடன் அழைக்கும் நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவில் ஒழுகினசேரியில் நவ.,29, 1908ல் பிறந்தார். நான்காம் வகுப்புடன் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. வறுமையில் வாடிய இவர், நாடகக் கொட்டகைகளில் சோடா கலர் பானம் விற்றுப் பிழைத்தார்.

அப்போது அவரைக் கவர்ந்தது நாடகக் கலை. 1925ல் டி.கே.எஸ்., சகோதரர்கள் நாடகக் குழுவில், 17வது வயதில் சேர்ந்தார்.  1935ல் டி.கே.எஸ்., சகோதரர்களின், "மேனகா' திரைப்படம், இவரது புகழை மேலும் வலுவடையச் செய்தது.

சிறந்த சிந்தனையாளர், மனிதாபிமானி, கொடைவள்ளல், நகைச்சுவை அரசு என்றெல்லாம் பாராட்டப்பட்டவர். 1955ல் தென்னிந்திய நடிகர் சங்கம் இவருக்கு "கலைவாணர்' என்ற பட்டம் அளித்து பாராட்டியது. தமிழக மக்களைக் குலுங்க குலுங்க சிரிப்பில் ஆழ்த்திய நகைச்சுவை மன்னர் ஆக., 30, 1957ல் காலமானார்.


அந்த ‘கிளப்’பின் நிதி நிலையைப் பெருக்குவதற்கான முயற்சி எடுத்த நேரத்தில் நடைபெற்ற ஒரு சிறு சம்பவத்தைக் கூற ஆசைப் படுகிறேன். அப்பொழுது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சினிமாத் தொழிலில் அமோகமான புகழும், பணமும் சம்பாதித்துக் கொடி கட்டிப் பறக்கிற காலம். நமது ‘கிளப்’பிலிருந்து 2 பர்லாங்கு தூரத்தில், அவரது புதிய பங்களா இருக்கிறது. நான் அங்குப் போய் அவரை அணுகி , ‘கிளப்’பின் ஒரு ஆயுள் சந்தாதாரராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவர் என் வரவு கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்து, உபசரித்து மிக்க மகிழ்ச்சியுடன் தன் செக் புத்தகத்தை எடுத்து ஆயுள் சந்தாவிற்கு உள்ள தொகைக்கு எழுதி கொடுத்து விட்டுச் சிரித்துக்கொண்டே கூறினார் . . .
ஐயா நான் உங்கள் ‘கிளப்’ பில் உறுப்பினராவதில் சந்தோஷப்படு கிறேன் என்பது மட்டுமல்லாமல், மிகவும் பெருமைப்படுகிறேன் என்று சொல்ல ஆசைப்படுகிறேன்.

ஏனெனில், நான் மிகச் சிறு பையனாக இருக்கும்போது, ‘கிளப்’பைச் சேர்ந்த டென்னிஸ் மைதானத்தில் பந்து எடுத்துப் போடும் பையனாக மாதம் இரண்டு ரூபாய் சம்பளத்திற்குக் கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். அப்படி இருந்த எனக்குக் ‘கிளப்’பின் அங்கத்தினர்களில் நானும் ஒருவன் என்று உள்ளம் பூரிக்கிறது என்றார். புகழுச்சியில் மனிதன் இருக்கும் போதும் தன் பழைய வாழ்க்கையை மறக்காமல் அதைக் கூறுவது இன்று தனது கவுரவத்தையும் குறைத்துவிடுமோ என்ற கவலை இல்லாமல் அப்படியே வெளியில் சொல்ல யாருக்குத் தைரியம் வருகிறது. என்.எஸ்.கே., அப்படிப்பட்ட ஓர் அபூர்வமான கலைஞர். நான் செயலாளராக இருக்கும் போது டாக்டர் பட்டாபி சீதா ராமையா, சீனிவாச சாஸ்திரிகள், சர்.சி.பி.இராமசாமி ஐயர் போன்ற பெரியவர்கள் எல்லாம் வந்து உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

எஸ்.துரைசாமி நாடார்

நாகர்கோவிலில் 1949ல் ரோட்டரி "கிளப்' ஸ்தாபகர்களில் ஒருவர். '59 - '60 ஆண்டுகளில் ரோட்டரியின் தலைவர். கன்னியாகுமரி மாவட்டம் தனியாக உருவானதும், மாவட்ட "கிளப்' ஸ்தாபகர். '53 முதல் ரெட் கிராஸ் சொசைட்டி மெம்பர். அகில இந்திய ரெட் கிராஸ் மாநாட்டு உறுப்பினராக டில்லிக்குச் சென்று வந்தார்.

'56 முதல் அகில இந்திய குழந்தைகள் நலக் குழுவின் நிர்வாகக் குழு உறுப்பினர். '60ல் உலகக் குழந்தைகள் நல விழாவின் உறுப்பினர். கன்னியாகுமரி தேவஸ்தானம், திருச்செந்தூர் திருக்கோயில் இவற்றின் நிர்வாகக் குழுக்களில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். ரோட்டரி இயக்கத்தின் சார்பில் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் பல் வேறு அமைப்புகளுக்குச் சென்று வந்தவர்.


எஸ். துரைசாமி நாடார்

பிரபல பண்ணையாரும், பழம் பெரும் ‘ரோட்டரி கிளப்’ தலைவரு மான துரைசாமி நாடார் தமது நினைவுகளைக் கூறுகையில் . . . எனக்கும், டி.வி.ஆருக்கும் உள்ள பழக்கம் 50 ஆண்டுகளுக்கும் மேற் பட்டதாகவே இருக்கும். அவர் திருநெல்வேலி செல்லும் முன், அவரில்லாமல் எந்த ஒரு பொதுக் காரியமும் இந்தப் பகுதியில் நடைபெற்றதில்லை. ‘ரோட்டரி‘ இயக்கத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. நாகர்கோவிலில் ‘ரோட்டரி’ சங்கத்தை 1949ல் ஆரம்பித்தபோது, அதில் முதன் மையானவராகவும், தீர்க்கமாகவும் இருந்து, தன் பணத்தைச் செல வழித்து அதை உருவாக்கிய தூண்களில் அவருமொருவர். கடைசி வரை அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக அவர் உதவியது பற்றி சொல்லித் தீராது. அது மட்டுமல்ல, தமிழ் நாட்டில் அவருடன் நானும் சேர்ந்து பல இடங்களில், ‘ரோட்டரி’ இயக்கத்தை ஸ்தாபித்தோம்.


நாகர்கோவிலில், ‘ரோட்டரி’ சங்கம் மே 14, 1949ல் 21 ‘மெம்பர்’ களுடன் கேப் ரோட்டில் தொடங்கப்பட்டது. நகரில் சுகாதார வாரம், பேபிஷோ எல்லாம் தொடர்ந்து நடக்கும். திருவனந்தபுரத்தில் இருந்து பல மந்திரிகள் வந்து இதில் கலந்து கொண்டனர். கன்னியா குமரி ஸ்தாபித்தவுடன் ஜில்லாவிற்கு ஒரு ‘கிளப்’ வேண்டுமென்று முழு மூச்சுடன் பாடுபட்டார். அதை ஸ்தாபிக்கவும் செய்தார்.


விவேகானந்தர் நினைவாலயம்


சுவாமி விவேகானந்தர் இமயம் முதல் குமரி வரை மக்களைச் சந்தித்து, கடைசியாக 1892 டிசம்பர் முடிவில் கன்னியாகுமரி வந்து சேர்ந்தார். டிசம்பர் 25ம் தேதி கடலை நீந்திக் கடந்து, மாலையில் பாறையை அடைந்து, இரவு முழுவதும் ஆழ்ந்த தியானத் தில் இருந்தார். இந்தப் பாறையில் தியான நிலையில் அமர்ந்ததும், பாரத நாட்டின் பழம் பெருமைகள், பல நுபற்றாண்டுகளாக ஓயாத படை எடுப்புக்கள், வீழ்ச்சிகளை எல்லாம் அந்த இளம் துறவிக்குக் கதை கதையாகப் போதித்தன கடல் அலைகள். இதிலிருந்து புதிய உத்வேகத்தை சுவாமிகள் பெற்றார்.


சுவாமிகளின் நுபற்றாண்டு விழா 1963 - 64ல் தேசமெங்கிலும் விரிந்த அளவில் கொண்டாடப்பட்டது. சுவாமி விவேகானந்தருக்கு ஞானோதயம் தந்த அந்த இரட்டைப் பாறைகளில் நுபற்றாண்டு விழா நினைவாக ஒரு ஆலயம் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டது. அதற்காக, ‘சுவாமி விவேகானந்தா நுபற்றாண்டு விழா விவேகானந்தா பாறை நினைவுச் சின்னக் குழு’ என்று மாவட்டம் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டது. திருநெல்வேலி ஜில்லாக் கமிட்டிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., கே.ராமசுப்பு ரெட்டியார் தலைவர். இதன் நிதியாளராக டி.வி.ஆர்., தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான திட்டச் செலவு 1963ம் ஆண்டு ஆறு லட்சம் ரூபாய். இக்குழுக்களின் அயராத பணிகள் காரணமாகவே நாம் இன்று கன்னியாகுமரி கடல் பாறைகளில் ஓர் அழகான விவேகானந்தர் நினைவாலயத்தைக் காண்கிறோம். டி.வி.ஆருக்கு, சுவாமி விவேகானந்த ரிடம் மிகுந்த ஈடுபாடு உண்டு. நினைவாலயம் ஒன்று அகில இந்திய முக்கியத்துவத்துடன் கன்னியா குமரியில் அமைக்கப்படுவதில் அவருக்குப் பெரும் மகிழ்ச்சி. குமரி மாவட்டப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டோடு, இப்பெரும் பணியிலும் செயல்பட்டது குறிப்பிடத் தக்கது.


கோவில்பட்டி நிலவரி போராட்டம்


டி.வி.ஆருடைய சமுதாயப் பார்வையில் கிராமத்துப் பிரச்னைகள் மிகவும் ஆழமாக அவரைச் சிந்திக்க வைத்து இருந்தது என்பதற்கு கோவில்பட்டி நிலவரி போராட்டம் ஒரு உதாரணம். வறட்சிக்குப் பேர் பெற்ற கோவில்பட்டி தாலுகா விவசாயிகள் ஒரு போராட்டம் பிப்., ’66ல் நடத்தினர். பக்தவச்சலம் முதல்வர். அவருக்குச் சட்டம்தான் முக்கியம். நியாயம் என்றே உணர்ந்தாலும் கூட, சட்டத்தை விடாப்பிடி யாகக் காத்து நிற்கப் பாடுபடுவது அவர் குணம். அங்கும் ஜப்தி எல்லாம் வந்தது. விவசாயிகளின் குரலாக அன்றைக்கும், ‘தினமலர்’ ஒலித்தது. அரசியல் உத்தரவுகள் எடுபடவில்லை. ஜப்தி செய்த பொருட்களை வீடு வீடாக அதிகாரிகள் கொண்டு போய் கொடுக்க வேண்டிய நிலை உருவானது. இந்தப் போராட்ட வெற்றிக்கு மணி யகரம் பிரச்னையில் பெற்ற வெற்றியே காரணமாக அமைந்துள்ளது.


அதன் பின்னர் தி.மு.க., ஆட்சிக் காலத்தில் கெடுபிடியாக நெல் கொள்முதல் நடைபெற்றது. விவசாயக் கூலிகளின் சில படி நெல் கூட அளக்கப்பட்டது. மதுரை மாவட்டம் இதில் மிகவும் சிக்கித் தவித்தது. இரவு 3 மணிக்குத்தான் நெல் அள்ளும் சூரத்தனம் நடக்கும். 4 மணிக்குக் கிராம மக்கள் மதுரை ‘தினமலர்’ அலுவலகத் திற்கு வருவர், இங்குதான் முதல் புகார். உடனே புகைப்படமெடுப்பவரு டன் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு, ‘டாக்சி’ பறக்கும். நாம் போய் விவரம் சேகரித்த பின் கலெக்டர் வருவார். ‘தினமலர்க்காரன்ட சொல்லியாச்சு இல்லையா?’ என்று கலெக்டரே கிண்டல் செய்வதைக் கேட்டு இருக்கிறோம்.


மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, போடிக்கு இடையே பெரும் மணல் காற்று. நிலம் பாலைவனமாக மாறி மணல் மூடிப் போனது. கிணறுகள் பம்பு செட்டுகளுடன் மூழ்கின. நிலம் புனரமைக்கப் பெரும் எடுப்பில் புல்டோசர்களின் உதவியுடன் அரசாங்கம் முயன்றால்தான் மீண்டும் அங்கு வாழ்க்கை. இதை ஒரு பக்க கட்டுரையாகத் ‘தினமலர்’ வெளியிட்டது. அவசர நிலை காலத்தில் கவர்னரின் ஆலோசகர், ‘தாவே’ அங்குப் போய்ப் பார்த்து புல்டோசர்கள் உதவியுடன் நிலங்களை மீட்டுக் கொடுத்தார்.  ‘இவையே மிகவும் அவசியமான செய்திகள். குடிகாரன் குடி வெறியில் யாரையாவது வெட்டி வீழ்த்தினால் அது முக்கிய செய்தி யல்ல. வாழ வேண்டிய, வாழ்விக்க வேண்டிய, மனிதன் சாகும் நிலைக்கு வந்தால் செய்தி எழுதுங்கள்’ என்று நிருபர்களிடம் டி.வி.ஆர்., அடிக்கடி கூறுவார். இன்றைக்குத் ‘தினமலர்’ கிராமங்களில் கால் ஊன்றி நிற்பதற்கு டி.வி.ஆரின் இந்த உன்னதமான கொள்கைதான் காரணம்.


தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் கடுமையான விவசாயப் போராட்டம். பல இடங்களில் துப்பாக்கிச்சூடு. பஸ்சோ, லாரியோ எதுவும் சாலையில் ஓடமுடியாத நிலை. அப்போதும், ‘தினமலர்’ என்று போஸ்டர் ஒட்டி, வேன் சென்றால், ‘அட இது நம்ம வண்டிடா. போகவிடுங்கள்’ எனக்கூறித் தடைகளை நீக்கி, கிராமத்தார் வழிவிட்டதற்கு டி.வி.ஆரின் இந்த அபிமானம், உறுதியான போக்குமே காரணம். கிராமங்கள், அவற்றின் முன்னேற்றம் - இது ஒன்றே ஒரு நாட்டை முன்னேற்றும் என்பதில் டி.வி.ஆர்., அசைக்க முடியாத பிடிப்பு வைத்திருந்தார்.
Advertisement
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X